நாட்டின் பல மாவட்டங்களில் நிலவும் அனர்த்த நிலைமையை ஆராய்ந்து நிவாரணம் வழங்குவதற்கு நடவடிக்கை எடுக்குமாறு ஜனாதிபதி பணிப்புரை விடுத்துள்ளார்.
இது தொடர்பாக ஜனாதிபதி செயலகம் ஊடக அறிக்கையை வெளியிட்டுள்ளது.
குறித்த அறிக்கையில், “சீரற்ற வானிலை காரணமாக தற்போது நாட்டின் பல மாவட்டங்களில் ஏற்பட்டுள்ள வெள்ளப்பெருக்கு, மண்சரிவு உள்ளிட்ட அனர்த்த நிலைமைகளின்போது பொதுமக்களின் பாதுகாப்பை உறுதி செய்யவும் அவர்களது நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கும் தேவையான அனைத்து நடவடிக்கைகளையும் தாமதமின்றி மேற்கொள்ளுமாறு ஜனாதிபதியினால் அரச அதிகாரிகளுக்கு பணிப்புரை விடுக்கப்பட்டுள்ளது.
நிலவும் அதிக மழைவீழ்ச்சி காரணமாக ஏற்படக்கூடிய மண்சரிவு, மண்மேடுகள் சரிந்து வீழ்தல், கற்பாறைகள் சரிந்து வீழ்தல் போன்ற அனர்த்த நிலைமைகளை எதிர்கொள்வதற்காக பாதுகாப்பு அமைச்சு மற்றும் அனர்த்த முகாமைத்துவ மத்திய நிலையம் ஆகியன ஒன்றிணைந்து அனர்த்த நிலைமைகளை கட்டுப்படுத்துவதற்கும் துரித நடவடிக்கைகளை மேற்கொள்வதற்கும் தேவையான சூழலை ஏற்படுத்தவும் பொதுமக்களுக்கான நலன்புரி தேவைகளை நிறைவேற்றுவதற்கான துரித நடவடிக்கைகளை மேற்கொள்ளவும் சம்பந்தப்பட்ட அமைச்சுக்களின் அதிகாரிகள், மாவட்ட செயலாளர்கள், பிரதேச செயலாளர்கள் ஆகியோருக்கு சுற்றுநிரூபத்தின் ஊடாக அறிவுறுத்தல்கள் வழங்கப்பட்டுள்ளன.
இவ்வனைத்து செயற்பாடுகளின் ஒருங்கிணைப்பு மற்றும் மீளாய்வு ஆகியன பிரதமரின் தலைமையில் மேற்கொள்வதற்கு நடவடிக்கை எடுக்கப்பட்டுள்ளது” என குறிப்பிடப்பட்டுள்ளது.