பெண்கள் மற்றும் பெண் தலைமைத்துவ குடும்பங்களை உள்வாங்கி அவர்களது வாழ்வாதாரத்தினை மேம்படுத்தும் விசேட திட்டம் ஒன்றை யாழ்ப்பாணம் உள்ளிட்ட சில மாவட்டங்களில் முன்னோடி முயற்சியாக மேற்கொள்ள அமைச்சர் டக்ளஸ் தேவானந்தா தனது அமைச்சின் கீழ் நடவடிக்கை மேற்கொள்ளவுள்ளதாக தெரிவித்துள்ளார்.
இதனடிப்படையில் முதற் கட்டமாக யாழ்ப்பாணம், புத்தளம் மற்றும் அம்பாந்தோட்டை ஆகிய பிரதேசங்களில் இதை முன்னோடியாக நடைமுறைப்படுத்த திட்டமிட்டுள்ளதாக தெரிவித்துள்ளார்.
அத்துடன் இத்திட்டமானது முன்னோடி திட்டமதாக மேற்கொள்ளப்படவுள்ளதால் இதில் குறித்த மாவட்டங்களில் உள்ள கிராம சேவையாளர் பிரிவுகளை உள்ளடக்கியதாக ஒவ்வொரு கிராம சேவகர் பிரிவிலும் இருந்து பெண்கள் மற்றும் பெண்களை தலைமைத்துவமாக கொண்ட 100 பேர் கொண்ட ஒரு அணியை உருவாக்கி அவர்களுக்கு பனம்பொருள் கைப்பணி உற்பத்தி, கடற்றொழில் உணவு பதனிடல் மற்றும் உபகரணங்கள் பராமரித்தல், கால்நடை வளர்ப்பு, கோழி வளர்ப்பு உள்ளிட்ட சுயதொழில்களில் பரீட்சியம் உள்ளவர்கள் அல்லது அதை முன்னெடுக்க விரும்புபவர்களை தெரிவு செய்து அவர்களுக்கு அவர்கள் விரும்பும் துறைக்கு அத்துறை சார் பயிற்சிகளை வழங்ப்படவுள்ளது.
அத்துடன் குறித்த பயிற்சியின் பின்னர் அவர்கள் தொடர்ந்தும் அத்தொழிலை முன்னெடுத்து செல்ல விரும்பினால் அவர்களுக்கு முதற் கட்டமாக மிகக் குறைந்த வட்டி வீதத்தில் (100,000) ஒருலட்சம் ரூபா வழங்கப்படும் என்றும் தெரிவித்தார்.
அத்துடன் அத்தொழிலை அவர்கள் சரியா முன்னெடுத்துச் சென்று அந்த கடனை மீள செலுத்தியிருப்பின் அடுத்த கட்டமாக அவர்களுக்கு இரண்டரை இலட்சம் (250,000) வழங்கப்படும் என்றும் தெரிவித்த அமைச்சர் இந்த நடைமுறையையும் அவர்கள் சரியாக முன்னெடுத்து சென்றால் மூன்றாம் கட்டமாக அவர்களுக்கு அத்தொழிலை விரிவாக மேற்கொள்ள (500,000) ஐந்து இலட்சம் ரூபா குறைந்த வட்டி வீதத்தில் வழங்கப்படும் என்றும் அவர் மேலும் தெரிவித்தார்.