கோட்டாபய வெற்றியடைய சம்பந்தன், சுமந்திரனே காரணமாக இருந்தார்கள்: வெளியாகும் அதிர்ச்சி தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, November 30, 2019

கோட்டாபய வெற்றியடைய சம்பந்தன், சுமந்திரனே காரணமாக இருந்தார்கள்: வெளியாகும் அதிர்ச்சி தகவல்!


பெரமுன மூன்றில் இரண்டு ஆசனங்களை பெறக்கூடாது, அதனால் தமிழர்கள் ஒற்றுமையாக வாக்களிக்க வேண்டும். மாற்று அணி உருவாகக்கூடாது என சுமந்திரன் சொல்கிறார். ஜனாதிபதி தேர்தலில் தனிச்சிங்கள வாக்கிலேயே கோட்டாபய வெற்றிபெற்றார். சஜித்தை ஆதரிக்கும் முடிவெடுத்து, தீவிர பிரச்சாரம் செய்து, கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைய காரணமாக சம்பந்தனும், சுமந்திரனும் மாறினார்கள். பெரமுனவிற்கு தனிப்பெரும்பான்மை வழங்க வேண்டுமென சிங்கள மக்கள் முடிவெடுத்தால், அதுவும் நடக்கலாம் என தெரிவித்துள்ளார் ஈழமக்கள் புரட்சிகர விடுதலை முன்னணியின் தலைவர் சுரேஷ் பிரேமச்சந்திரன்.

அத்துடன், சுமந்திரனின் ஒற்றுமை அழைப்பு தேர்தல் வாக்கை இலக்காக கொண்டது என்பதையும் புட்டுப்புட்டு வைத்துள்ளார்.

யாழ்ப்பாணத்தில் இன்று (30) நடத்திய செய்தியாளர் சந்திப்பில் இதனை தெரிவித்தார்.

அவர் மேலும் தெரிவிக்கையில்,

ஏற்கனவே தமிழ் தேசிய கூட்டமைப்பு உருவாக்கத்தில் விடுதலைப்புலிகளும் பங்குபற்றினர். பின்னர், சம்பந்தன், சுமந்திரன், மாவை சேனாதிராசா போன்றவர்களின் நடவடிக்கை காரணமாக, கொள்கைகளிலிருந்த தடம் மாறி நடந்து கொண்டதன் காரணமாக, தமிழ் மக்களின் உரிமைக்காக போராடும் அமைப்பொன்றிற்கு யாப்பு, அமைப்பிற்கான வடிவமோ இல்லாமல், உதிரி கட்சிகளின் கூட்டாக தேர்தல் காலத்தில் மட்டும் கூடிப் பேசுவது, வாக்குகளை சுவீகரிப்பது என்றுதான் இருக்கிறார்கள். அதற்கு அப்பால் கூட்டு முடிவுகளை எடுக்க அவர்கள் ஒருபோதும் தயாராக இருந்ததில்லை.

2002 முதல் 2015 வரை ஒன்றாக பயணித்து, இந்த விடயங்களை நாம்வலியுறுத்தி வந்தோம். அப்படியொன்றை செய்ய முடியாதென திட்டவட்டமாக கூறிவிட்டார்கள். தமிழ் தேசிய கூட்டமைப்பு பதிவு செய்யப்படாது, அதற்கு யாப்பு தேவையில்லை, அதற்கு மத்திய, செயற்குழுக்கள் தேவையில்லையென்ற கோணத்தில்தான் செயற்பட்டார்கள்.தமிழ் அரசுக்கட்சியின் தலைவர்கள் சம்பந்தன், சுமந்திரன், மாவை ஆகியோர் எடுப்பதுதான் அங்கு முடிவாக இருந்தது. ஏனைய கட்சிகளின் கருத்துக்கள் கணக்கிலெடுக்கப்படுவதில்லை. இதன் காரணமாகத்தான் தமிழ் தேசிய கூட்டமைப்பிலிருந்து கஜேந்திரகுமார் பொன்னம்பலம், தமிழர் விடுதலைக் கூட்டணி, நாங்கள் வெளியேறினோம். இந்த வெளியேற்றத்திற்கு அவர்கள்தான் மூலகாரணமாக இருந்தார்கள்.

எல்லோரும் ஒற்றுமையாக இருக்க வேண்டும், மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெரமுன எடுக்க விடக்கூடாது என சுமந்திரன் சொல்கிறார். 2015ம் ஆண்டு தேர்தலில் பல்வேறு உறுதிமொழிகள் சம்பந்தன், சுமந்திரனால் பல வாக்குறுதிகளை கொடுத்தார்கள். பின்னர் அரசாங்கத்துடன் இணைந்து செயற்பட்டார்கள். எதிர்க்கட்சி தலைவராக இருந்தபோதும், ஆளுங்கட்சியுடனும், அரசாங்கத்துடனும் இணைந்து செயற்பட்டு வந்தார்கள். வரவு செலவு திட்டங்களை ஆதரித்தார்கள். அரசுக்கு பிரச்சனையேற்படும் போதெல்லாம் தனது பாராளுமன்ற உறுப்பினர்களை பயன்படுத்தி பாதுகாத்தது. ஜெனீவாவில் அரசாங்கத்தை பாதுகாத்து செயற்பட்டது.ஜெனீவாவில் அரசாங்கத்திற்கு ஆதரவான முடிவை எடுக்காமல் விட்டிருந்தால், அமெரிக்கா உள்ளிட்ட நாடுகளுடன் சரியாக பேசியிருந்தால், மனித உரிமைகள் ஆணைக்குழுவிலிருந்து ஐ.நா பொதுச்சபைக்கு கொண்டு சென்றிருக்க முடியும். அப்படி செய்திருந்தால், இந்த விவகாரத்தை எப்படி நகர்த்துவதென பார்த்திருக்கலாம்.

ஆனால், அரசாங்கம் இதை செய்யும், அரசாங்கத்திற்கு அழுத்தம் கொடுக்க கூடாது, அரசாங்கத்தை நம்ப வேண்டும், காலஅவகாசம் கொடுக்க வேண்டுமென சொன்னார்கள். அனைத்து நாடாளுமன்ற உறுப்பினர்களையும் கையெழுத்திட வற்புறுத்தப்பட்டனர். சிவசக்தி ஆனந்தன் தவிர்ந்த மற்றவர்கள் கையெழுத்திட்டனர். இப்படி அரசாங்கத்தை பாதுகாத்து வந்தவர்கள்தான், சுமந்திரன், சம்பந்தன் போன்றவர்கள்.

அரசியலமைப்பு கொண்டு வரப்படும், அதுவரை அரசுக்கு அழுத்தம் கொடுக்கக்கூடாது என சொல்லி, நாலரை வருடமாக பேச்சு நடந்தது. ஒரு வருடத்தில் முடிகிறது, இரண்டு வருடங்களில் நடக்கிறது என இப்பொழுது குப்பைக்கூடைக்குள் போய்விட்டது. இதை கூறி, தமிழ் மக்களின் ஏனைய பிரச்சனைகளை கைவிட்டனர். அரசியல் கைதிகள், காணி விடயம் என பல விடயங்கள்.

2000 ஏக்கர் காணி விடுவித்ததாக சொல்கிறார்கள். 1500 ஏக்கர் காணி சம்பூரில் விடுவிக்கப்பட்டது. யாழ், வன்னியில் 2,3,4 ஏக்கர் என்றுதான் விடப்பட்டன. பெருமளவு காணிகள் இப்பொழுதும் அரசிடம்தான் உள்ளது.

அரசியல்கைதிகள், காணாமல் போனவர்கள் விடயம், காணி விடுவிப்பு எல்லாவற்றையும் கைவிட்டனர். அரசியலமைப்பு வந்தால் எல்லாம் சரியாகிவிடுமென சொன்னார்கள். இப்பொழுது அரசியலமைப்பும் இல்லை, அந்தப் விவகாரங்களும் நடக்கவில்லை.தமிழ் தேசிய கூட்டமைப்பு என சொன்னாலும், சித்தார்த்தனுடனோ, செல்வம் அடைக்கலநாதனுடனோ கலந்துரையாடுவதில்லை. தமிழ் அரசு கட்சியென சொன்னாலும், மாவை சேனாதிராசாவுடனும் கலந்துரையாடுவதில்லை. சம்பந்தன், சுமந்திரன் மட்டுமே முடிவெடுக்கிறார்கள். இவர்கள் எடுக்கும் முடிவை ஏனைவர்கள் ஏற்க வேண்டும்.

இவர்களின் நடவடிக்கையில் தமிழ் மக்கள் விரக்தி, வெறுப்பு ஏற்பட்டு பல வழிகளில் வெளிப்படுத்தியுள்ளனர். கடந்த உள்ளூராட்சிமன்ற தேர்தலில், 50 வீதத்திற்கும் மேலான வாக்குகள் அவர்களிற்கு விழவில்லை.

ஜனாதிபதி தேர்தலில் மக்கள் ஏற்கனவே தீர்மானத்தை எடுத்திருந்தனர். கடந்தகாலத்தில் மக்கள் கொல்லப்படவும், காணாமல் போகவும் காரணமாக இருந்தவர் ஜனாதிபதியாக வரக்கூடாதென உறுதியாக இருந்தார்கள். அந்த மாற்று தெரிவிற்கு வாக்களித்தனர். விக்னேஸ்வரன், நாங்கள்- மக்கள் விரும்பியவர்களிற்கு வாக்களியுங்கள் என கூறினோம். ஏனெனில், மக்கள் யாருக்கு வாக்களிப்பார்கள் என்பது எமக்கு தெரியும். தமிழ் தேசிய கூட்டமைப்பு, சஜித்தை ஆதரிக்கும் முடிவெடுத்து, தீவிர பிரச்சாரம் செய்து, கோட்டாபய ராஜபக்ச வெற்றியடைய காரணமாக சம்பந்தனும், சுமந்திரனும் மாறினார்கள்.

கடந்த நான்கரை வருட செயற்பாட்டில் நாம் தோல்வியடைந்து விட்டோம் என்பதை சுமந்திரன் தரப்பு புரிந்து கொள்ள வேண்டும். அரசியலமைப்பு உருவாக்கம், யுத்தத்தின் பின்னர் தமிழர்களின் பிரச்சனையை கையாள்வதில் தோல்வியடைந்து விட்டோம் என்பதை அவர்கள் ஏற்றுக்கொள்ள வேண்டும். தாம் விட்ட தவறுகளை புரிந்து கொள்ளாமல் மீண்டும் ஐக்கியத்தை பற்றி பேசுவது, மக்களை ஏமாற்றி வாக்கை எடுப்பதற்கே.அரசியலமைப்பு உருவானவுடன் எனது பணி முடிந்துவிடும், நாடாளுமன்றத்தில் அரசியல்வாதியாக இருக்க முனைய மாட்டேன், அவ்வாறு வராத பட்சத்தில் அதற்கான பொறுப்பை ஏற்று விலகிவிடுவேன் என்றார். அவர் தன்னையொரு ஜென்டில்மேனாக கருதுபவர், சொல்பவர். அரசியலமைப்பு வரவில்லை. அதன் மூலகர்த்தாவாக இவர்தான் இருந்தார். நான்கரை வருடமாக மூன்றில் இரண்டு பெரும்பான்மையை வைத்தக் கொண்டு, அரசியலமைப்பை கொண்டு வர முடியாமல் இருந்தார்கள்.

எதிர்க்கட்சியில் இருந்தாலும், அரசுடன் இணைந்து செயற்பட்டனர். வடக்கு கிழக்கில் அரச முக்கியஸ்தர்களாக அவர்கள்தான் இருந்தார்கள். இப்படியிருந்தும், இவர்களால் எதையும் செய்ய முடியவில்லை.

வரப்போகும் தேர்தலில் பெரமுன மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்றால் தமிழர்களிற்கு எதிராக செயற்படுமென சொல்கிறார்கள். பாராளுமன்ற தேர்தல் விகிதாசாரமுறைப்படி நடக்கும். அதில் மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்குமா என்பதெல்லாம் தெரியாது. ஜனாதிபதி தேர்தல் முடிவுகளை பார்க்கும்போது பெரமுன மீண்டும் ஆட்சிக்கு வருமென தெரிகிது.

முதல் சொன்னார்கள், கோட்டாபயவை தோற்கடிக்க வாக்களிக்கும்படி கேட்டார்கள். கோட்டா என்று விட்டார். மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்ககூடாது, நாங்கள் ஒன்று சேர வேண்டுமென்கிறார்கள். அவர்களிற்கு வாக்களிப்பது சிங்கள மக்கள், தமிழ் மக்கள் இரண்டு பிரதான கட்சிக்கும் வாக்களிப்பதில்லை.

தமிழ் மக்கள் தமக்கான பிரதிநிதிகளை தெரிவு செய்ய வேண்டும். சுமந்திரன், சம்பந்தன், அவர்களின் நடவடிக்கை தொடர்பாகவும் மக்கள் தெளிவாக புரிந்து வைத்திருக்கிறார்கள். மாற்று அணி வரக்கூடாது, பெரமுனவிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மை கிடைக்க விடக்கூடாது என சொல்வதற்கு தேவையில்லை. அதை மக்கள் தீர்மானிக்கும் காலம் வந்துள்ளது. மாற்று அணி தேவையில்லை, மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரவிடக்கூடாது என சுமந்திரன் சொல்லத் தேவையில்லை. ஏனெனில், ஜனாதிபதி தேர்தலிலும் சிங்கள மக்களின் வாக்கிலேயே வெற்றிபெற்றார்கள். அவர்களிற்கு மூன்றில் இரண்டு பெரும்பான்மையை கொடுக்க வேண்டுமென சிங்கள மக்கள் முடிவெடுத்தால், அது நடக்கலாம்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் அவர்கள் வெற்றிபெற்றால், அதை பன்படுத்தி இனப்பிரச்சனையை தீர்க்க ஏன் முயற்சிக்கக்கூடாது என்பது அடுத்த கேள்வி. ஏற்கனவே ஐ.தே.கவுடன் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்தும் உங்களால் தீர்க்க முடியவில்லை. இப்பொழுது இவர்கள் மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்தால், நாம் சிறிய தேசிய இனமொன்ற அடிப்படையில் அவர்களுடன் பேசி தீரவி்ற்கு வரமுடியுமா என்பதை பார்க்க வேண்டும்.

மூன்றில் இரண்டு பெரும்பான்மையுடன் வந்தால், 19வது திருத்தச்சட்டத்தை சில சமயங்கள் அவர்கள் மாற்றலாம். அதைமாற்றினால் சுதந்திர தேர்தல் ஆணைக்குழு, உறுதிப்படுத்தப்பட்ட சில விடயங்கள் மாற்றப்படலாம். பலமுறை ஒருவர் ஜனாதிபதியாகலாம். 19வது திருத்தத்தினால் பாதிக்கப்பட போவது பெரும்பான்மையான சிக்கள மக்களே.

தமிழ் மக்கள் ஏற்கனவே பலவிதத்திலும் பாதிக்கப்பட்டுள்ளனர். தமிழ் மக்கள் தம்மைத்தாமே நிர்வகிக்க, தமது பாதுகாப்பை பலப்படுத்த எப்படியான உபாயங்களை வகுப்பதென நாங்கள் தீர்மானிக்க வேண்டுமே தவிர, சுமந்திரன் ஒருவர் தீடிரென மூன்றில் இரண்டு பெரும்பான்மை வரக்கூடாது, மாற்று அணி வரக்கூடாது என்பது தமிழ் மக்களை முழுக்க முழுக்க ஏமாற்றும் நடவடிக்கையை அவர் செய்கிறார்“ என்றார்