நாட்டை மீண்டும் யுத்த சூழலுக்கு கொண்டுசெல்ல பலர் துடிக்கிறார்கள் என அமைச்சர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்துள்ளார்.
அத்துடன், கடந்த அரசாங்கத்தில் மிக மோசமாக இனவாதத்தை விதைத்து முஸ்லிம் சமூகத்தை நிந்தனைப்படுத்திய ஞானசேர தேரரை விடுதலை செய்யவேண்டும் என கூறியவர் ஹிஸ்புல்லாஹ்தான் எனவும் அவர் குற்றஞ்சாட்டியுள்ளார்.
ஒன்றிணைந்த புதிய ஜனநாயக தேசிய முன்னனியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரமதாசவை ஆதரித்து ஏற்பாடு செய்யப்பட்ட தேர்தல் பிரசாரக் கூட்டம் நேற்று (சனிக்கிழமை) இரவு கல்முனை சந்தாங்கேணி பொது விளையாட்டு மைதானத்தில் நடைபெற்றது.
இதில் உரையாற்றும் போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
அவர் மேலும் கூறுகையில், “இந்த நாடு ஒரு அழகான நாடாகும். இங்கு நாம் ஒற்றுமையாகவும் சுதந்திரமாகவும் வாழவேண்டும். 30 வருடங்களுக்கு மேலாக இடம்பெற்ற யுத்தில் நாம் இழந்தவை ஒன்றிரண்டல்ல. உயிர்களையும் உடைமைகளையும் சொத்துக்களையும் இழந்து அன்று வீதியில் நின்றோம். மீண்டும் இவ்வாறான ஒரு நிலைக்கு நாட்டை கொண்டுசெல்லத் துடிக்கிறார்கள்.
சஜித் பிரேமதாசவுடன் ஒப்பந்தம் செய்யவில்லை என்று சிலர் கூறுகிறார்கள். கடந்த 31ஆம் திகதி என்னை மட்டுமல்லாது அமைச்சர் ரவூப் ஹக்கீம் உட்பட முஸ்லிம், சிங்கள, தமிழ் தலைவர்கள், சமயப் பெரியார்கள் என இந்நாட்டின் இரண்டு கோடியே 25 இலட்சம் மக்களோடு செய்து கொண்ட ஒப்பந்தம்தான் சஜித் பிரேமதாசவின் தேர்தல் விஞ்ஞாபனமாகும்.
மேலும் இந்த நாட்டினுடைய தலைவரைக் கொண்டு வருவதற்கு நாங்கள் கட்சி பேதங்களை கடந்து ஏன் ஒன்றுபட்டிருக்கிறோம் என்று நீங்கள் சிந்திக்க வேண்டும். சாதாரண தேர்தலாக இதனை கருத முடியாது. சிறுபான்மை மக்கள் தங்களது மத, இன, கலாசார விழுமியங்களை நிம்மதியாக நிறைவேற்ற நமக்குரிய பாதுகாப்பை உறுதிப்படுத்தும் தேர்தலாக அமைந்திருக்கிறது” என்று தெரிவித்தார்.