நாட்டின் எதிர்கால அரசியல் நடவடிக்கைகள் குறித்து விவாதிக்க, இந்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்திற்கு அழைப்பு விடுக்க சபாநாயகர் கரு ஜயசூரிய முடிவு செய்துள்ளார்.
இந்த விடயம் தொடர்பாக இன்று (செவ்வாய்க்கிழமை) அறிக்கையொன்றினை வெளியிட்டுள்ள அவர், புதிய ஜனாதிபதி நியமிக்கப்பட்டதைத் தொடர்ந்து, நாடாளுமன்ற நடவடிக்கை தொடர்பாக பிரதமர், எதிர்க்கட்சித் தலைவர், பிற கட்சித் தலைவர்கள் மற்றும் நாடாளுமன்ற உறுப்பினர்களுடன் கலந்துரையாடல்களை நடத்தியுள்ளதாக தெரிவித்துள்ளார்.
மேலும் ஆளும் அதிகாரம் பொது மக்களின் ஆணையை பிரதிபலிக்க வேண்டும் என்பதே அனைத்து பிரிவினதும் கருத்தாகும் என்றும் அவர் சுட்டிக்காட்டினார்.
எனவே அடுத்த கட்ட நடவடிக்கையாக, அரசியலமைப்பின் படி, 2020 மார்ச் 1 ஆம் திகதி நாடாளுமன்றத்தை கலைத்து, அடுத்த ஆண்டு ஏப்ரல் மாதம் நாடாளுமன்றத் தேர்தலை நடத்த முடியும் என்று சபாநாயகர் குறிப்பிட்டார்.
இல்லையெனியில் இரண்டாவதாக நாடாளுமன்றில் மூன்றில் இரண்டு பெரும்பான்மையை பெற்று நாடாளுமன்றை கலைத்து தேர்தலை நடத்த வேண்டும் என கூறினார்.
இதுவும் சாத்தியம் இல்லையெனில் தற்போதைய பிரதமரும் அமைச்சரவையும் தானாக முன்வந்து இராஜினாமா செய்து ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை புதிய அரசாங்கத்தை நியமிக்க அனுமதிக்கலாம் என குறிப்பிட்டுள்ளார்.
அதன்படி சபாநாயகர் கரு ஜயசூரிய, இந்த வாரம் கட்சித் தலைவர்கள் கூட்டத்தில் இந்த விடயங்களைப் பற்றி விவாதிக்க முடிவு செய்துள்ளார் என அந்த அறிக்கையில் தெரிவிக்கப்பட்டுள்ளது