தமிழ் மக்களின் பிரச்சினைகள் குறித்து புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவுடன் பேசுவதற்கு தயாராக இருப்பதாக தமிழரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தெரிவித்தார்.
அத்தோடு, நாட்டில் பெரும்பாலான மக்களால் ஏற்றுக்கொள்ளப்பட்ட புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவை நாமும் ஏற்றுக்கொள்ள வேண்டும் என்றும் அவர் வலியுறுத்தியுள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் தேசியக் கூட்டமைப்பு புதிய ஜனநாயக முன்னணியின் வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரித்திருந்தபோதிலும் கோட்டாபய ராஜபக்ஷவே வெற்றி பெற்றுள்ளார். இந்நிலையில் கூட்டமைப்பின் எதிர்கால நிலைப்பாடு குறித்து ஊடகமொன்றுக்கு கருத்து வெளியிடும்போதே அவர் இவ்வாறு தெரிவித்துள்ளார்.
எவ்வாறிருப்பினும் தமிழ் மக்கள் இனப்பிரச்சினை உள்ளிட்ட பல்வேறு விடயங்களை எதிர்பார்த்துதான் சஜித் பிரேமதாசவுக்கு ஆதவளித்தனர் என்றும் மக்களின் அவ்வாறான கோரிக்கைகளை நாட்டின் தலைவர் என்ற அடிப்படையில் கோட்டாபய ராஜபக்ஷ ஏற்றுக்கொண்டு அவை தொடர்பாக ஆராய வேண்டும் என்றும் அவை கோரிக்கை விடுத்துள்ளார்.
எனவே இவ்விடயம் குறித்து அவர் எம்மோடு பேச்சுவார்த்தை நடத்துவதற்கு அழைத்தால் அதற்கு நாம் தயாராகவே இருக்கின்றோம் என்றும் எதிர்வரும் தினங்களில் இது குறித்து ஆராயப்படும் என்றும் அவர் கூறியுள்ளார்.