தமிழீழ தேசிய மாவீரர்நாள் : மக்களை பீதிக்குள்ளாக்கும் சோதனைகளில் ஶ்ரீலங்கா இராணுவம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 26, 2019

தமிழீழ தேசிய மாவீரர்நாள் : மக்களை பீதிக்குள்ளாக்கும் சோதனைகளில் ஶ்ரீலங்கா இராணுவம்

ஶ்ரீலங்காவில் ஏற்பட்ட  ஆட்சி மாற்றத்தின் பின்னர் தமிழீழத்தின் பல இடங்களிலும் வீதிகளில் பொலிஸார் மற்றும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டு வீதித் தடைகளைப் போடப்பட்டு கடும் சோதனைகளை மேற்கொண்டு வருகின்றனர் . இதேவேளை நாளை தமிழீழ மாவீரர் நாள் வருவதையொட்டி உள் வீதிகளிலும் இராணுவத்தினர் நிறுத்தப்பட்டுள்ளனர் இதனால் வீதியில் பயணிக்கின்றவர்கள் பெரும் அசளகரியங்களுக்கு உள்ளாவதுடன் இச் சோதனை நடவடிக்கைகள் மக்கள் மத்தியில் பெரும் அச்சத்தையும் ஏற்படுத்தியிருக்கின்றது.

கடந்த ஜனாதிபதித் தேர்தலில் கோட்டாபய ராஜபக்ச வெற்றிபெற்றதை தொடர்ந்து புதிய அரசாங்கமும் அமைக்கப்பட்டிருக்கின்றது. இந்த நிலையில் இராணுவம் மற்றும் பொலிஸாருக்கு கூடுதல் அதிகாரங்களும் ஐனாதிபதியால் வழங்கப்பட்டிருக்கின்றது.

இதனையடுத்து வடக்கு மாகாணத்தின் பிரதான வீதிகள் உட்பட்ட பல வீதிகளில் இராணுவம் மற்றும் பொலிஸார் வீதித் தடைகளைப் போட்டுள்ளனர். அத்துடன் வீதிகளில் சோதனை நடவடிக்கைகளையும் ஆரம்பித்துள்ளனர்.

கடந்த ஏப்ரல் மாதம் இடம்பெற்ற குண்டுத் தாக்குதல்களையடுத்து இதே போன்று சோதனைகள் மேற்கொள்ளப்பட்டிருந்தன. பின்னர் அந்தச் சோதனைகள் நீக்கப்பட்டும் இருந்தன. ஆனால் புதிய அரசாங்கம் ஆட்சிக்கு வந்ததன் பின்னர் அதே சோதனைகள் மீளவும் ஆரம்பிக்கப்பட்டிருக்கின்றது.

குறிப்பாக வடக்கு மாகாணத்திலுள்ள பிரதான வீதிகளின் பல இடங்களிலும் இராணுவம், பொலிஸார் இணைந்தும், சில இடங்களில் இராணுவத்தினரும் இன்னும் சில இடங்களில் பொலிசாருமென சோதனை நடவடிக்கைகளில் ஈடுபடுகின்றனர்.
இதனால் வீதியால் பயணம் செய்கின்றவர்கள் பல இடங்களிலும் சோதனைக்குட்படுத்தப்படுகின்றனர்.

இராணுவம் மற்றும் பொலிஸாரின் இந்தச் சோதனை நடவடிக்கைகள் பயணிகள் மத்தியில் பெரும் அசௌகரியத்தை ஏற்படுத்தியிருக்கின்றது. அதேபோன்று பொது மக்கள் மத்தியிலும் கடும் அச்சத்தையும் உண்டு பண்ணியிருக்கிறது.

குறிப்பாக தமிழீழ விடுதலைப் புலிகளின் தலைவர் மேதகு வேலுப்பிள்ளை பிரபாகரனின் பிறந்தநாள் மற்றும் மாவீரர் தினம் நடைபெறவுள்ள நிலைமையில் திடீரென இந்தச் சோதனைகள் ஏற்படுத்தப்பட்டிருக்கின்றன. நாட்டின் பாதுகாப்புக் கருதி என்று இச் சோதனைகள் மேற்கொள்ளப்படுவதாக ஶ்ரீலங்கா பேரினவாத தரப்பில் கூறப்பட்டாலும் அந்தச் சோதனைகள் பொது மக்கள் மத்தியில் அசௌகரியத்தையும் அச்சத்தையுமே ஏற்படுத்தியிருக்கிறது.

ஆகவே இந்த நிலைமை மாற்றப்பட்டு பாதுகாப்புடன் கூடிய இலகுவான பயணத்திற்கும் பொது மக்கள் மத்தியில் ஏற்பட்டுள்ள அச்சத்தைப் போக்குவதற்கும் உரிய நடவடிக்கைகளை சம்மந்தப்பட்டவர்கள் விரைந்து எடுக்க வேண்டுமெனவும் பலரும் கோரிக்கை விடுத்துள்ளனர்.