குற்றவாளிகளுக்கு ஜனாதிபதியால் பொது மன்னிப்பு வழங்க முடியுமாக இருந்தால், நீதிமன்றங்கள் எதற்காக நாட்டில் இருக்க வேண்டும் என நாடாளுமன்ற உறுப்பினர் ஹிருணிகா பிரேமசந்திரன் கேள்வியெழுப்பியுள்ளார்.
கொழும்பில் இன்று (செவ்வாய்க்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.
அங்கு அவர் மேலும் தெரிவிக்கையில், “றோயல் பார்க் கொலையின் பிரதானக் குற்றவாளிக்கு ஜனாதிபதி அண்மையில், பொது மன்னிப்பு வழங்கியதையிட்டு நாம் மிகவும் கவலையடைகிறோம்.
இது முற்றுமுழுதாக ஜனாதிபதியின் தனிப்பட்ட நோக்கமே அன்றி, அமைச்சரவையினதோ அல்லது அரசாங்கத்தினதோ தீர்மானம் அல்ல.
இப்போதுள்ள ஜனாதிபதி பிரசார மேடைகளில் கலந்துகொள்ளாவிட்டாலும், அவர் கோட்டாபய ராஜபக்ஷவுக்குத்தான் ஆதரவாக செயற்படுகிறார்.
இப்படியான ஒருவர் துமிந்த சில்வாவையும் பொது மன்னிப்பின் கீழ் விடுதலை செய்ய மாட்டார் என்று என்ன நிச்சயம் உள்ளது?
குற்றவாளியொருவருக்கு பொது மன்னிப்பு வழங்க முடியும் என்றால், நீதிமன்றங்கள், நீதிபதிகள், சட்டத்தரணிகள் எல்லாம் எதற்காக இருக்க வேண்டும்?
இன்றும் இரண்டு – மூன்று நாட்களின் நாட்டு மக்கள் தீர்க்கமான முடிவொன்றை எடுக்க வேண்டிய கட்டாயத்தில் உள்ளார்கள். மக்கள் அனைவரும் சஜித் பிரேமதாசவைதான் விரும்பிக் கொண்டிருக்கிறார்கள்” என அவர் மேலும் தெரிவித்தார்.