எதிர்வரும் 16 ஆம் திகதி இடம்பெறவுள்ள ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் வேட்பாளர்கள் வெளியிட்டுள்ள தேர்தல் விஞ்ஞாபனத்தில் கல்வி தொடர்பாக முன்வைத்த விடயங்கள் தொடர்பாக எமது ஆதவன் செய்தி சேவை ஆராய்ந்தது.
அதன்படி, தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுரகுமார திசாநாயக்க 3 முதல் 5 வயது குழந்தைகளுக்கு இலவச முன்பள்ளி கல்வியை வழங்குவதாக உறுதியளித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ, இலவச கல்வியைப் பாதுகாக்கவும் அதனை தொடரவும் வரவுசெலவுத்திட்டத்தில் இருந்து போதுமான நிதி ஒதுக்கப்படும் என கூறியுள்ளார்.
இதேவேளை புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாச, இலவச கல்வியைத் தொடரவும் முன்பள்ளி கல்வியை விரிவுபடுத்துவதாகவும் உறுதியளித்துள்ளார்.
அநுரகுமார திசாநாயக்க,
- அனைத்து கல்வி நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவருதல்.
- உயர்கல்வி நிறுவனங்களில் ஒரு கூட்டு கட்டமைப்பை நிறுவுதல்
- 9 ஆம் வகுப்புக்குப் பின்னர் மாணவர்கள், ஒரு கல்வி பாடத்திட்டத்தை அல்லது தொழில்முறை பாடத்திட்டத்தைத் தேர்வு செய்யலாம்.
- அறிவியல் மற்றும் தொழில்நுட்ப துறைகளில் பட்டங்களுக்கான புதிய பல்கலைக்கழகத்தை நிறுவுதல்
- தரம் 1 முதல் 5 வரை பரீட்சைகளை ரத்து செய்தல், குறிப்பாக புலமைப்பரிசில் பரீட்சை.
- ஒவ்வொரு குழந்தைக்கும் இலவச சத்துணவை வழங்குதல்.
- பாலியல் மற்றும் இனப்பெருக்கம் தொடர்பான சுகாதார கல்வியை அறிமுகப்படுத்துதல்.
- ஒவ்வொரு 4 வருடங்களுக்கும் பாடத்திட்டத்தைப் புதுப்பித்தல்.
சஜித் பிரேமதாச,
- ஆரம்பக் கல்வியை கல்வி அமைச்சின் கீழ் கொண்டுவருதல்
- பாடசாலைகளில் காணப்படும் பகிடிவதை போன்ற வன்முறைகளை முடிவுக்குக் கொண்டுவருதல்.
- தரம் 12 மற்றும் 13 இல் தொழில்முறை விஞ்ஞானம் மற்றும் தொழிநுட்ப துறையை தேர்வு செய்தல்.
- இளங்கலை கல்வியியலில் ஆண்டுதோறும் 5000 மாணவர்களை இணைத்தல்
- கிராமப்புற பள்ளிகளில் ஆங்கிலம் மற்றும் கணிதத்தை மேம்படுத்த தொண்டு ஆசிரியர்களுக்கு ஆசிரியர் பயிற்சி / சலுகைகளை வழங்குதல்.
- இரு பாடசாலை சீருடைகள், காலணிகள் மற்றும் மாணவர்களுக்கு இலவச மதிய சத்துணவை வழங்குதல்
- சாதாரண தரப்பரீட்சையில் தோற்றாதவர்களின் விகிதத்தைக் குறைக்க ஆங்கிலம் மற்றும் கணிதத்தை கற்பிப்பதற்கான ஒரு தேசிய திட்டத்தை உருவாக்குதல்
கோட்டாபய ராஜபக்ஷ
- கல்வி தொடர்பான அனைத்து நிறுவனங்களையும் ஒரே அமைச்சின் கீழ் கொண்டுவருதல்
- கல்வி நிலையங்களில் உடல் மற்றும் மன ரிதியான தண்டனை பகிடிவதைகளை தடுத்தல்.
- க.பொ.த. சாதாரண மற்றும் உயர்தர சித்தியைப் பொருட்படுத்தாமல் தொழில்நுட்ப மற்றும் தொழிற்கல்வி படிப்புகளைத் தொடர வழியமைத்தல்.
- தொழில்நுட்ப பல்கலைக்கழக கல்லூரிகள் மற்றும் தற்போதுள்ள பல்கலைக்கழக கல்லூரிகளின் எண்ணிக்கையை 6 முதல் 20 ஆக உயர்த்துதல்.
- பல்கலைக்கழகங்களில் மாணவர் உட்செல்லலை அதிகரித்தல்
- ஆரம்பப் பள்ளிகள் குழந்தை நட்பு பள்ளிகளாக உருவாக்கப்படும்
- அனைத்து முன்பள்ளி ஆசிரியர்களுக்கும் (உளவியலில் அறிவு உட்பட) கட்டாய ஆசிரியர் பயிற்சி.
- பல்கலைக்கழகம் மற்றும் பிற மாணவர்களுக்கான மாணவர் விடுதிகளைத் திறக்கவும். இந்த விடுதிகளில் தங்குவதற்கு வரி விலக்கு.