ஏற்கெனவே இருந்த கோயிலை இடித்துவிட்டு பாபர் மசூதி கட்டப்பட்டதா? பழங்கால இந்து கோயிலின் இடிபாட்டின் மீது கோயில் கட்டப்பட்டதா?
இந்த கேள்வி நான்கு நூற்றாண்டுகளாக விவாதிக்கப்பட்டு வந்தது. இந்நிலையில்தான், தொல்லியல்துறையின் கண்டுபிடிப்பை புறக்கணிக்க முடியாது என்று குறிப்பிட்டு உச்சநீதிமன்றத்தின் அரசமைப்புச் சட்ட அமர்வு சனிக்கிழமை சர்ச்சைக்குரிய இடம் இந்துக்களுக்கே சொந்தம் என்று தீர்ப்பளித்தது.
சர்ச்சைக்குரிய இடத்தை முதல் முறையாக இந்திய தொல்லியல் துறையின் தலைமை இயக்குநர் பி.பி.லால் ஆய்வு செய்தபோது அவரது குழுவில் இளம் தொல்லியலாளரான கே.கே.முகம்மதுவும் இடம் பெற்றிருந்தார்.
1976-77ல் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் வரலாற்றில் பட்டமேற்படிப்பை முடித்துவிட்டு தொல்லியல் கல்லூரியில் சேர்ந்திருந்த நேரம் அது. அகழ்வாய்வு செய்த குழுவில் மாணவரான அவர் இடம் பெற்றிருந்தார்.
இந்த விவகாரம் விவாதிக்கப்பட்டு கொண்டிருந்த நிலையிலேயே, 70களின் பிற்பகுதியில், தொல்லியல் துறை அகழ்வாய்வு செய்தபோது பழங்காலக் கோயிலின் மிச்சங்கள் இருந்தது கண்டுபிடிக்கப்பட்டதாக வெளிப்படுத்தி அனைவரையும் அதிர்ச்சிக்குள்ளாக்கினார் முகம்மது.

புத்த- ஜைன கோயிலா?

தொல்லியல் துறை அகழ்வாய்வுக் குழுவின் முடிவுகளோடு பலர் மாறுபட்டனர். முதல் அகழ்வாய்வு நடந்தபோது சர்ச்சைக்குரிய இடத்துக்கு அடியில் புத்த அல்லது ஜைன கோயிலின் மிச்சங்கள் கண்டுபிடிக்கப்பட்டிருக்கலாம் என்று பல தொல்லியலாளர்கள் கூறினர்.
பி.பி.லால் தமது குழுவின் கண்டுபிடிப்புகளை வெளியிட்டார் என்றாலும், கே.கே.முகம்மது வெளியிட்ட தகவல்கள் பரபரப்பை ஏற்படுத்தியது. அதற்கு காரணம், அவர் முஸ்லிம் என்பதும், அதிலும் கூடுதலாக அவர் அலிகர் முஸ்லிம் பல்கலைக்கழகத்தில் படித்தவர் என்பதும் ஆகும்.
பல ஆண்டுகளாக தாம் சொல்லி வரும் கருத்தில் முகம்மது உறுதியாக நிற்கிறார். முதல் முறையாக சர்ச்சைக்குரிய இடம் ஆய்வு செய்யப்பட்டபோது அந்த ஆய்வுக் குழுவில் இடம் பெற்றிருந்த ஒரே முஸ்லிம் அவர்தான். ஆனால், 2003ல் இரண்டாவது முறையாக சர்ச்சைக்குரிய இடத்தில் தொல்லியல் துறை ஆய்வு செய்தபோது, அந்தக் குழுவில் 3 முஸ்லிம்கள் இடம் பெற்றிருந்தனர். அவர்களும் அகழ்வாய்வில் பழைய கோயில் மிச்சங்கள் இருந்தன என்பதை ஏற்றுக்கொண்டனர்.
மத்திய தொல்லியல் துறையின் வடக்கு பிராந்திய இயக்குநராக இருந்து ஓய்வு பெற்ற முகம்மது தற்போது தமது சொந்த ஊரான கேரளாவின் கோழிக்கோட்டில் வசித்து வருகிறார்.

"நல்லெண்ண வாய்ப்பைத் தவறவிட்ட பாபர் மசூதி குழு"

பிபிசியிடம் தொலைபேசி வழியாகப் பேசிய அவர், "சர்ச்சைக்குரிய நிலத்தை அதைக் கோரும் இந்துக்களிடம் ஒப்படைக்கும் அரிய வாய்ப்பை பாபர் மசூதி நடவடிக்கைக் குழு தவற விட்டுவிட்டது. அது ஒரு நல்லெண்ண நடவடிக்கையாக இருந்திருக்கும்".
சர்ச்சைக்குரிய இடத்தில் நடந்த இரண்டு அகழ்வாய்வுகளையும் ஆராய்ந்த முகம்மது, அகழ்வாய்வில் தெரிந்த நீண்ட சுவரும், வட்டவடிவ ஆலயமும் நிச்சயம் இஸ்லாமிய கட்டுமானங்கள் அல்ல என்று தெரிவித்தார்.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்டவற்றில் சிலைகளும் அடக்கம். சிலைகள் இஸ்லாமிய வழிபாட்டில் இடம்பெறவே முடியாதவை. அப்படி எடுக்கப்பட்ட சிலைகளில் ஒன்று மகர் பிரனாலி அல்லது கங்கை நதியின் குறியீடு. மற்றொன்று யமுனை நதியைக் குறிக்கும் குறியீடு.
அகழ்வாய்வில் கண்டெடுக்கப்பட்ட இச்சிலைகள் முறையே 10 மற்றும் 12ஆம் நூற்றாண்டைச் சேர்ந்தவை. டெல்லி குதுப் மினார் அருகில் உள்ள மசூதிக்கு அருகே கண்டுபிடிக்கப்பட்டதைப் போன்றவை இவை என்றும் முகம்மது சுட்டிக்காட்டினார்.

அகழ்வாய்வு முடிவுகளில் மாறுபாடு

ஆனால், அயோத்தியில் சர்ச்சைக்குரிய இடத்தில் நடத்தப்பட்ட அகழ்வாய்வு தொடர்பான மத்திய தொல்லியல் துறையின் 'முடிவுகளில்' பல வரலாற்று ஆய்வாளர்களுக்கு மாறுபட்ட கருத்து இருக்கிறது. வலதுசாரி சார்புடைய ஆட்களால் இந்த ஆய்வுகள் நடத்தப்பட்டதாக அவர்கள் குற்றம்சாட்டுகிறார்கள்.
அனுமானம், ஊகம் ஆகியவற்றை சார்ந்து இயங்குகிற தொல்பொருள் ஆய்வு என்பது துல்லியமற்ற அறிவியல் என்று கூறி இந்த அகழ்வாய்வு முடிவுகளை எதிர்த்து உச்சநீதிமன்றத்தில் வாதிட்டது. இந்த வழக்கின் முஸ்லிம் தரப்பை பிரதிநிதித்துவப்படுத்திய சன்னி வக்ஃபு வாரியம்.
நீதிமன்ற உத்தரவின் பேரில் 2003ஆம் ஆண்டு நடத்தப்பட்ட இரண்டாவது அகழ்வாய்வில் இரண்டு சுயேச்சையான தொல்லியலாளர்களை ஈடுபடுத்தியது சன்னி வக்ஃபு வாரியம். சுப்ரியா வர்மா, ஜெயா மேனன் என்ற அந்த இரு சுயேச்சையான தொல்லியலாளர்களும், தொல்லியல் துறை அகழ்வாய்வு நடத்திய விதம் குறித்து பல கேள்விகளை எழுப்பி ஆய்வு கட்டுரைகள் வெளியிட்டனர்.
ஆனால், அகழ்வாய்வு முடிவுகளை விமர்சிப்பவர்கள் இடதுசாரி சார்புள்ள சிந்தனையாளர்கள் மற்றும் வரலாற்று ஆய்வாளர்கள் என்று கூறுகிறார் முகம்மது.

வெளிநாட்டு பயணிகளின் குறிப்புகள்

வில்லியம் ஃபின்ச், ஜோசப் டைஃபென்தாலர் போன்ற பயணிகளின் குறிப்புகளை சுட்டிக்காட்டுகிறார் முகம்மது. ஃபிஞ்ச் 1607 முதல் 1611க்கு இடையிலும், ஜோசப் 1766 முதல் 1771க்கு இடையிலும் பயணித்தனர். இரு பயணிகளுமே சர்ச்சைக்குரிய இடத்தில் இந்து வழிபாட்டு சடங்குகள் மேற்கொள்ளப்பட்டதாக எழுதியுள்ளனர்.
சர்ச்சைக்குரிய இடத்தில் இந்துக்கள் வழிபட்டதாக தமது அய்ன்-இ-அக்பரி என்ற 16ஆம் நூற்றாண்டு ஆவணத்தில் அக்பரின் அரசவை வரலாற்று ஆசிரியர் அபு ஃபசல் கூறியுள்ளதாகவும் கூறுகிறார் முகம்மது.
நாட்டில் பல தொல்லியல் தலங்களை அகழ்வாய்வு செய்யவும், வேறு பல தலங்களைப் பாதுகாக்கவும் காரணமாக இருந்தவர் முகம்மது.
பேரரசர் அக்பர் தாம் தோற்றுவித்த 'தீன் இலாஹி' என்ற சரசர மதத்தை 'இபாதாத் கானா' என்ற இடத்தில் இருந்து பிரகடனம் செய்தார். தியானம் செய்யும் இடமான இந்த இடம் முகம்மது கண்டுபிடித்த தொல்லியல் தலங்களில் ஒன்று.
ஃபதேபூர் சிக்ரியில் அக்பர் கட்டிய வட இந்தியாவின் முதல் கிறிஸ்தவ தேவாலயத்தை கண்டுபிடித்தது, பிகாரின் கேசாரியா, ராஜ்கிர் ஆகிய இடங்களில் உள்ள பேரரசர் அசோகர் நிறுவிய ஸ்தூபிகளை அகழ்வாய்வு செய்து எடுத்தது ஆகியவையும் முகம்மது செய்த பணிகளில் சில.
தொல்லியல் துறையில் அவர் ஆற்றிய பணிகளுக்காக 2016ஆம் ஆண்டு முகம்மதுவுக்கு பத்மஸ்ரீ விருது கொடுத்தது மத்திய அரசு.