புதிய அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை கோரவில்லை – ரிஷாட் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, November 21, 2019

புதிய அரசாங்கத்திடம் அமைச்சுப் பதவிகளை கோரவில்லை – ரிஷாட்

ஜனாதிபதி கோட்டாபாய ராஜபக்‌ஷவுக்கு கிடைக்கப்பெற்ற மக்களாணையை மதித்து அமைச்சு பதவிலிருந்து தாம் விலகுவதாக அகில இலங்கை மக்கள் காங்கிரஸின் தலைவர் ரிஷாட் பதியுதீன் தெரிவித்தார்.

அத்தோடு புதிய அரசாங்கத்திடம் தாம் அமைச்சுப் பதவிகளை கோரவில்லையென்றும் அவர் மேலும் குறிப்பிட்டார்.

கைத்தொழில் மற்றும் வர்த்தக அமைச்சு ஊழியர்களிடமிருந்து பிரியாவிடை பெறும் நிகழ்வு இன்று (வியாழக்கிழமை) காலை இடம்பெற்றது. இதன்போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “அரசியலமைப்பில் இடமிருந்தபோதும் மக்களாணையை மதித்து நாங்களாகவே பதவி விலகுகின்றோம். கொடுத்த வாக்குறுதிகளை நிறைவேற்றுவதற்கு நாம் இடையூறாக இருக்க கூடாது என்பதற்காகவே இந்த முடிவை மேற்கொண்டோம்.

நாங்கள் புதிய அரசாங்கத்தில் அமைச்சு பதவிகளை கோருவதாகவும் முயற்சிப்பதாகவும் கூறப்படுவது அப்பட்டமான பொய்யாகும். அவ்வாறு நாங்கள் எந்த முயற்சிகளும் எடுக்கவில்லை. எதிர்க்கட்சியிலேயே இருந்து அரசின் ஆக்கபூர்வமான செயற்பாடுகளுக்கு ஒத்துழைப்பை நல்குவோம்

ஜனாதிபதித் தேர்தலில் சிறுபான்மை மக்கள் புதிய ஜனாநயக முன்னணி வேட்பாளர் சஜித் பிரேமதாசவுக்கு அமோக ஆதரவை நல்கி இருந்தனர்.

ஜனநாயக நாடொன்றில் எந்தவொரு வேட்பாளருக்கும் எவரும் வாக்களிக்க முடியும். எனினும் தேர்தல் முடிவுகளின் பின்னர் சிறுபான்மை மக்கள் தேசத் துரோகம் செய்ததாகவும் பெரும்பான்மை மக்கள் தேசப்பற்றாளாருக்கு வாக்களித்ததாகவும் ஊடகங்களில் மோசமான பிரசாரங்கள் மேற்கொள்ளப்படுகின்றன.

சிறுபான்மை மக்களும் பெளத்த மதத்தைச் சேர்ந்த ஒருவருக்கே வாக்களித்துள்ளனர் என்பதை நான் இங்கு சுட்டிக்காட்ட வேண்டும்.

நான் அமைச்சை பொறுப்பேற்கும் போது மிகவும் சந்தோஷத்துடன் பொறுப்பெடுத்தேன். இன்று அமைச்சர் பதவிலியிருந்து இராஜினாமா செய்கின்றபோதும் அதே சந்தோஷத்துடன் இருக்கின்றேன்” இவ்வாறு அவர் தெரிவித்தார்.