தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் நெடுந்தீவு பிரதேச சபை தவிசாளர் பி.றொசான், பொதுஐன பெரமுனவுடன் இணைந்து கோத்தபாய ராஜபக்ஷவிற்கு ஆதரவு தெரிவித்துள்ளார்.
தமிழ்தேசிய கூட்டமைப்பு முண்டுகொடுத்து உருவாக்கியுள்ள நல்லாட்சி அரசாங்கத்தினால் நெடுந்தீவு மக்கள் கடந்த 2 வருடங்களில் எந்தவொரு நன்மையினையும் பெற்றுக்கொள்ளவில்லை எனவும் இதனாலேயே தாம் ஐனாதிபதி வேட்பாளர் கோட்டாவை ஆதரிக்கப்போகிறார் எனவும் கூறியுள்ளார்.
தமிழீழ விடுதலைப் புலிகள் இயகத்தில் கடற்புலிகள் பிரிவில் இருந்த இவர் யுத்தத்தின் பின்னர் புனர்வாழ்வு பெற்று விடுவிக்கப்பட்ட நிலையில் நெடுந்தீவில் வசித்து வருகின்றார்.
யாழ்.ஊடக அமையத்தில் இன்று (12) காலை ஊடகவியலாளர்களைச் சந்தித்து கருத்து கூறுப்போதே அவர் மேற்கண்டவாறு கூறியுள்ளார்.
இதன்போது அவர் மேலும் கருத்து தெரிவிக்கையில்,
கடந்த 2 ஆண்டுகளுக்கும் மேலாக நெடுந்தீவு பிரதேசசபை தவிசாளராக இருக்கிறேன். இந்த காலத்தில் தமிழ்தேசிய கூட்டமைப்பிடமிருந்தோ இந்த நல்லாட்சி அரசிடம் இருந்தோ நெடுந்தீவு மக்களுக்கு எந்தவொரு நன்மைகளும் கிடைக்கவில்லை. 9 கிலோ மீற்றர் நீளமான பிரதான வீதி பல வருடங்களாக புனரமைக்கப்படாமலிருக்கின்றது.
அதேபோல் துறைமுகம் பல வருடங்களாக புனரமைப்பு செய்யப்படவில்லை. இவ்வாறு கடந்த 2 வருடங்களில் ஒரு அபிவிருத்தியும் கூட மக்களுக்கு கிடைக்கவில்லை. இவ்வாறான ஏமாற்றங்களினாலேயே கோட்டாவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்துள்ளோம்.
பொதுவாகவே மக்கள் இன்று தமிழத் தேசியக் கூட்டமைப்பின் மீதும், நல்லாட்சி அரசாங்கத்தின் மீதும் நம்பிக்கை இழந்திருக்கும் நிலையில், ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாவை ஆதரிக்கும் தீர்மானத்தை எடுத்திருக்கின்றோம்.
போர் நிறைவடைந்து 2 ஆண்டுகளில் கிளிநொச்சி நகரை கட்டியெழுப்பிய ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபாய ராஜபக்ச நெடுந்தீவையும் கட்டியெழுப்புவார் என்ற நம்பிக்கை உள்ளது.
மேலும், முன்னாள் போராளியான என்னையும் என்னைபோன்ற போராளிகளையும் விடுதலை செய்ததைபோல் தமிழ் மக்கள் மீது அக்கறையுடன் செயற்படுவார் என நம்புகிறேன். அந்த அடிப்படையிலேயே கோட்டாவை ஆதரிக்க தீர்மானித்துள்ளோம். – என்றார்.
தமிழீழ விடுதலைப்புலிகளின் கடற்புலிகள் அமைப்பில் இருந்த போராளியான இவர் புனர்வாழ்வின் பின்னர் விடுதலை செய்யப்பட்டு, கடந்த தேர்தலில் ரெலோ சார்பில் நெடுந்தீவு பிரதேச சபைக்கு போட்டியிட்டு வெற்றியீட்டியிருந்தமை குறிப்பிடத்தக்கது.