தேர்தலில் இருந்து விலகத் தயார்!- சிவாஜிலிங்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 12, 2019

தேர்தலில் இருந்து விலகத் தயார்!- சிவாஜிலிங்கம்

இனப் பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை வடக்கு கிழக்கு இணைக்கப்படவேண்டும் மற்றும் ஒற்றையாட்சி பெளத்தத்திற்கு முதலிடம் என்பனவற்றை நிபந்தனைகளாக வைக்கமாட்டோம் திறந்த மனதுடன் மதத் தலைவர்கள் முன்னிலையில் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் வாக்குறுதி அளித்தால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என எம்.கே.சிவாஜிலிங்கம் தெரிவித்தார்.

தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா சம்பந்தன் தன்னை ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுமாறு கோரியது தொடர்பாக கேட்டபோதே அவர்இதனைத் தெரிவித்தார்.

இது தொடர்பில் அவர் மேலும் தெரிவிக்கையில்

இலங்கைத் தீவிற்கு சுதந்திரம் கிடைத்தில் இருந்து 71 ஆண்டுகள் கடந்த நிலையில் சிங்களத் தலைவர் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றியே வந்துள்ளார்கள். இதில் தமிழ்த்தலைவர்களை ஏமாற்றிய கடைசி சிங்கத் தலைவர்களாக இன்றைய ஜனாதிபதி மைதிரிபால சிறிசேனவும் பிரதமர் ரணில் விக்கிரம சிங்கவுடன் இந்தப் பட்டியல் முடிவடையவேண்டும் என்பது தான் எங்களின் எதிர்பார்ப்பு 

இதனைப்போன்று சிங்களத் தலைவர்களினால் ஏமாற்றப்பட்ட தமிழ்த் தலைவர் வரிசையில் கடைசி இடத்தை இரா.சம்பந்தன் பெறுவதையும் நாங்கள் விரும்பவில்லை. எனவே தான் சம்பந்தன் ஐயாவின் கோரிக்கையை ஏற்று இரு நிபந்தனைகளை விதிக்க விரும்புகிறேன்.

குறிப்பாக ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதஸ எனது இரு கோரிக்கைகளையும் ஏற்றுக்கொள்வாரானால் அந்தக் கோரிக்கைகளை திருகோணமலை மறைமாவட்ட ஆயரிடமும் தென்கையிலை ஆதீனத்திடமும் யாழ்ப்பாணம் சிம்மியா மிஷன் சுவாமிகளிடமும் கூட்டமைப்புத் தலைவர் சம்மந்தனிடமும் அவர்கள் திருப்திப்படும் விதத்தில் வாக்குறுதிகளை அவர் வழங்குவாராயிருந்தால் அந்த இரண்டு நிபந்தனைகளையும் நான் கூறவிரும்புகின்றேன் 

அதில் ஒன்று இன்றைய அரசியல் அமைப்பில் 19 திருத்தங்கள் அடங்கிய இன்றைய அரசிலமைப்பை நான் முழுமையாக கொண்டு நடத்துவேன் அதாவது 13 ஆவது திருத்தத்தில் காணி பொலிஸ் அதிகாரங்கள் உட்பட முழுமையாக .அதனை ஏற்றுக்கொண்டு நடைமுறைப்படுத்துவேன் என்பதை கூறவேண்டும் 

அத்துடன் இந்திய இலங்கை ஒப்பந்ததின் கீழ் வடக்கு கிழக்கு மாகாணங்கள் தற்காலிகமாக இணைக்கப்பட்டன அன்று இணைக்கப்பட்ட மாகாணங்கள் உயர் நீதிமன்றத் தீர்ப்பின் மூலம் பிரிக்கப்பட்டது. அந்த உயர் நீதி மன்றத் தீர்ப்பில் கூறப்பட்டுள்ளதாவது பாராளுமன்றத்தில் சாதாரண பெரும்பான்மை மூலம் மீண்டும் இணைத்துக்கொள்ளமுடியும் இன்று இருக்கக்கூடிய அரசிலமைப்பு சட்டத்தில் அருகருகாமையில் இருக்கக்கூடிய இரண்டு அல்லது மூன்று மாகாணங்கள் சாதாரண பெரும்பான்மை மூலம் இணைக்கப்படமுடியும். எனவே முன்பு இருந்த நிலைமைக்கு மீண்டும் வடக்கு கிழக்கு இணைப்பை இனப்பிரச்சினைக்கான நிரந்தரத் தீர்வு காணப்படும் வரை இணைக்கப்படவேண்டும் 

மற்றையது புதிய அரசியல் அமைப்பை உருவாக்குவதற்கான ஒரு அரசியல் நிர்ணய சபை அமைக்கப்பட்டு பேச்சுவர்த்தைகள் ஆரம்பிக்கப்படும் போது ஒற்றையாட்சி பௌத்தத்திற்கு முதலிடம் போன்ற நிபந்தனைகளை அரச தரப்பில் வைக்கமாட்டோம் என்ற நிபந்தனைகளுடன் திறந்த மனதுடன் வரவேண்டும் என்பதனை உறுதிப்படுத்துவார்களானால் மேற்குறித்த இரண்டு வாக்குறுதிகளையும் திருப்திப்படுத்தும் வகையில் உறுதிப்படுத்துவார்களானால் 14 ஆம் திகதிக்கு முன்னர் வழங்குவார்களானால் நான் ஜனாதிபதித் தேர்தலில் இருந்து விலகுவேன் என்பதனை ஊடகங்கள் ஊடாக பகிரங்கமாக அறிவிப்பேன் என்றார்.