தேர்தல் கடமையில் 60 ஆயிரம் பொலிஸார், தேவையேற்படின் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அனுமதி! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 12, 2019

தேர்தல் கடமையில் 60 ஆயிரம் பொலிஸார், தேவையேற்படின் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அனுமதி!

சிறிலங்காவின் ஜனாதிபதித் தேர்தலுக்கான அனைத்து பாதுகாப்பு ஏற்பாடுகளும் தீவிரமாக நடைபெற்று வருவதாகத் தெரிவித்துள்ள சிறிலங்கா பொலிஸ் பேச்சாளர் சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர இத் தேர்தலுக்கு விசேட பாதுகாப்பு திட்டம் அமுல்படுத்தப்படவுள்ளது எனவும் தெரிவித்தார். 

60 ஆயிரத்து 175 பொலிஸார் மற்றும் 8,080 சிவில் பாதுகாப்பு படையினரை உள்ளடக்கியதாக இந்த விஷேட திட்டம் வகுக்கப்பட்டுள்ளதாகவும் தேர்தல் குறித்த அனைத்து கடமைகளையும் இந்த படையினரை வைத்து முன்னெடுக்க பூரண திட்டம் தயார் செய்யப்பட்டுள்ளதாகவும் அவர் மேலும் கூறினார். 

தேவை ஏற்படின் ஆயுதங்களைப் பயன்படுத்தவும் அவர்களுக்கு உரிய ஆலோசனைகள் வழங்கப்பட்டுள்ளன எனவும் அவர் கூறினார். 

தேர்தல் தொடர்பாக நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இந்தத் தகவல்களைத் தெரிவித்தார். இது தொடர்பாக அவர் மேலும் கூறுகையில், 

ஜனாதிபதித் தேர்தல் பாதுகாப்பு பணிகளுக்காக பொலிஸ் மற்றும் சிவில் பாதுகாப்பு படையினருக்கு மேலதிகமாக பொலிஸ் விஷேட அதிரடிப்படையிர் (எஸ்.ரி.எவ்) அனைத்து பகுதிகளிலும் தயார் நிலையில் வைக்கப்பட்டுள்ளனர். அவர்கள் எந்த வேளையிலும் எந்தவொரு நடவடிக்கையையும் முன்னெடுக்கத் தயாராக உள்ளனர். 

அத்துடன் வாக்களிப்பு மற்றும் வாக்கெண்ணும் நிலையங்களின் பாதுகாப்பின் போதும் ஏனைய பாதுகாப்பு திட்டங்களை அமுல் செய்யும்போதும் தேவை ஏற்படின் ஆயுதங்களை பயன்படுத்தவும் பலப் பிரயோகம் செய்யவும் தெளிவான ஆலோசனை பொலிஸாருக்கு வழங்கப்பட்டுள்ளது. – என சிரேஷ்ட பொலிஸ் அத்தியட்சர் ருவன் குணசேகர கூறினார்.