ஜனாதிபதி வேட்பளர்களின் தேர்தல் விஞ்ஞாபனங்களை ஆராய்ந்ததன் அடிப்படையில் தமிழ்த் தேசியக் கூட்டமைப்பு சஜித் பிரேமதாசவுக்கு தனது பூரண ஆதரவை வெளியிடுவதற்கு தீர்மானித்துள்ளது.
தமிழ்த் தேசியக் கூட்டமைப்பின் பிரதான தரப்பான இலங்கை தமிழரசுக் கட்சியின் மத்திய குழுக் கூட்டம் இன்று (ஞாயிற்றுக்கிழமை) காலை 10 மணிக்கு அக்கட்சியின் வவுனியா மாவட்டக் கிளை அலுவலகமான ‘தாயகம்’ பணிமனையின் பிரதான கேட்போர் கூட்டத்தில் நடைபெற்றது.
தமிழ் அரசுக் கட்சியின் தலைவர் மாவை சேனாதிராஜா தலைமையில் இடம்பெற்ற இந்தக் கூட்டத்தில் தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்கள் எம்.ஏ.சுமந்திரன், யோகேஸ்வரன் உள்பட கட்சியின் உறுப்பினர்கள் பங்கேற்றனர்.
இதன்போது ஜனாதிபித் தேர்தல் தொடர்பாக ஆராயப்பட்டது. அதன்படி புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவை ஆதரிப்பது என்று தீர்மானம் எடுக்கப்பட்டுள்ளது என நாடாளுமன்ற உறுப்பினர் எம்.ஏ. சுமந்திரனும் தெரிவித்தார்.
தமிழ் அரசுக் கட்சி இந்தத் தீர்மானத்தை அடுத்து தமிழ் தேசியக் கூட்டமைப்பின் பங்காளிக் கட்சிகளின் கூட்டமும், நாடாளுமன்றக் குழுக் கூட்டமும் நடத்தப்பட்டு உத்தியோகப்பூர்வமாக அறிவிக்கப்படும் என்றும் தெரிவிக்கப்பட்டுள்ளது.