டெலோ மூன்றாக பிளவுபட்டது? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 24, 2019

டெலோ மூன்றாக பிளவுபட்டது?



டெலோ மீண்டுமொரு பிளவை சந்தித்துள்ளது.ஏற்கனனவே வவுனியாவில் சிறிரெலோவெள பிளவு பட்டு தற்போது யாழில் சிறீகாந்தா அணியெனவும் மீண்டும் பிளவுபட்டுள்ளது.

தமிழ் ஈழ விடுதலை இயக்கத்தின் (ரெலோ) பொதுச் செயலாளர் என்.சிறிகாந்தா உள்ளிட்ட மூவர் கட்சியிலிருந்து இடைநிறுத்தப்பட்டுள்ளனர். ரெலோவின் தலைமைக்குழு நேற்று (23) இந்த அதிரடி தீர்மானத்தை மேற்கொண்டுள்ளது.


கட்சி செயலாளர் என்.சிறிகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ், துணை அமைப்பாளர் ஜெயரட்ணம் ஜெனார்த்தனன் ஆகியோரே இடைநிறுத்தப்பட்டுள்ளனர். அவர்கள் விளக்கமளிக்க ஒரு வாரம் அவகாசமளிக்கப்பட்டுள்ளது.
ரெலோ அமைப்பின் முடிவிற்கு மாறாக, கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா மற்றும் யாழ் மாவட்ட கிளையின் ஒரு பகுதியினர், ஜனாதிபதி தேர்தலில் எம்.கே.சிவாஜிலிங்கத்தை ஆதரித்திருந்தனர். அத்துடன், சிவாஜி ஆதரவு பிரச்சார கூட்டங்களில் ரெலோ மற்றும் தமிழ் தேசிய கூட்டமைப்பை காரசாரமாக விமர்சித்திருந்தனர்.



இதையடுத்து, அவர்கள் மீது ஒழுக்காற்று நடவடிக்கையெடுக்கப்படும் என கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன் தெரிவித்திருந்தார்.


ஜனாதிபதி தேர்தலின் பின்னர், நேற்று ரெலோவின் தலைமைக்குழு திருகோணமலையில் கூடியது.


20 பேர் கொண்ட தலைமைக்குழுவில் 15 பேர் கலந்து கொண்டனர். கட்சி செயலாளர் என்.சிறிகாந்தா, சபா.குகதாஸ், ஹென்ரி மகேந்திரன், சோதிலிங்கம், புவனேஸ்வரன் ஆகியோர் கூட்டத்தில் கலந்து கொள்ளவில்லை.


கட்சித்தலைவர் செல்வம் அடைக்கலநாதன், வினொ நோகராதலிங்கம், விந்தன் கனகரட்ணம், கோவிந்தன் கருணாகரம், க.கோடீஸ்வரன் உள்ளிட்டவர்கள் கலந்து கொண்டிருந்தனர்.


கடந்த ஜூன் மாதம் 1ம் திகதி திருகோணமலையில் நடந்த கட்சியின் பொதுக்குழு கூட்டத்தில், ஜனாதிபதி தேர்தல் குறித்த முடிவை எடுக்கும் அதிகாரத்தை தலைமைக்குழுவிற்கு வழங்கியிருந்தது.


கடந்த 6ம் திகதி வவுனியாவில் கூடிய தலைமைக்குழு, சஜித்தை ஆதரிப்பதென தீர்மானித்திருந்தது. 15 உறுப்பினர்கள் கலந்து கொண்டிருந்த நிலையில், 11 பேர் அந்த தீர்மானத்தை ஆதரித்திருந்தனர். பெரும்பான்மைக்கு கட்டுப்படுவதாக சிறிகாந்தா தெரிவித்து விட்டு, பின்னர் யாழ்ப்பாணம் வந்ததும் நிலைப்பாட்டை மாற்றிக் கொண்டார்.


9ம் திகதி யாழ் மாவட்டக்குழுவின் ஒரு பகுதியினர் கூடி, சிவாஜிலிங்கத்தை ஆதரிக்க முடிவெடுத்தனர். அத்துடன், அந்த முடிவை ஆதரிக்க வேண்டுமென கட்சியின்யாழ் மாவட்ட உள்ளூராட்சி மன்ற பிரதிநிதிகளிற்கு அழுத்தம் கொடுத்ததாகவும் தெரிவிக்கப்படுகிறது.


இது குறித்து நேற்று ஆராயப்பட்டது.


கூட்டத்தில் கலந்துகொண்டவர்கள் பெரும்பாலானவர்கள், கட்சியின் கட்டுப்பாட்டை மீறி நடந்தவர்களை நீக்க வேண்டுமென வலியுறுத்தினர். இது குறித்து நீண்ட வாதப்பிரதிவாதங்கள் நடந்து, இறுதியில் இடைநீக்கம் செய்வதென தீர்மானிக்கப்பட்டுள்ளது.


கட்சியின் செயலாளர் என்.சிறிகாந்தா, யாழ் மாவட்ட அமைப்பாளர் சில்வெஸ்டர் விமல்ராஜ், துணை அமைப்பாளர் ஜெயரட்ணம் ஜனார்த்தனன் ஆகியோரை உடனடியாக இடைநிறுத்த தீர்மானிக்கப்பட்டது.


அவர்கள் மீது ஒழுக்காற்று விசாரணை நடத்த மூவர் கொண்ட குழு அமைக்கப்பட்டுள்ளது. கட்சித் தலைவர் செல்வம் அடைக்கலநாதன், கோவிந்தன் கருணாகரம், வினோ நோகராதலிங்கம் ஆகியோர் அந்தக்குழுவில் அங்கம் வகிக்கிறார்கள்.


கட்சியை விட்டு இடைநிறுத்தப்பட்டுள்ளதுடன், அவர்கள் மீது ஏன் ஒழுக்காற்று விசாரணை நடத்தக்கூடாது என்பதற்கு விளக்கமளிக்கும்படி இன்று அவர்களிற்கு கடிதம் அனுப்பப்படவுள்ளது. இன்றிலிருந்து ஒரு வாரத்திற்குள் அவர்கள் அதற்கான பதில் வழங்க வேண்டும். மீண்டும் அடுத்தவாரம் தலைமைக்குழு கூடி, அந்த விடயத்தை ஆராயும் என தீர்மானிக்கப்பட்டுள்ளது.