வௌ்ளை வான் கலாசாரத்தை மீண்டும் நாட்டில் உருவாக்க வேண்டாமென ஶ்ரீலங்கா ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவிடம் முன்னாள் அமைச்சர் ரஞ்சித் மத்தும பண்டார கோரியுள்ளார்.
கொழும்பில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். ரஞ்சித் மத்தும பண்டார மேலும் கூறியுள்ளதாவது, “குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள், நாட்டிலிருந்து வெளியேற முடியாத வகையில் அரசாங்கம் தற்போது தடை விதித்துள்ளது.
மேலும் குற்றப்புலனாய்வுப் பிரிவு அதிகாரிகள் சகலரினதும் பெயர்ப் பட்டியலை வெளிப்படுத்தியுள்ளமை தவறானதாகும்.
இராணுவத்தை காட்டிக் கொடுத்துவிட்டதாக அன்று தெரிவித்தவர்கள், குற்றப்புலனாய்வு அதிகாரிகளை இன்று காட்டிக்கொடுக்கின்றனர் .
அத்துடன் குற்றப்புலனாய்வுப் பிரிவினரை பழிவாங்கும் நடவடிக்கைகளை மேற்கொள்ள வேண்டும்.
அந்தத் திணைக்களத்திலுள்ள அதிகாரிகள், யுத்த காலத்தில் விசேட கடமையாற்றியவர்கள். எனவே அவர்களை சர்வாதிகார போக்கில் வழிநடத்த வேண்டாம்.
இவ்வாறு குற்றப்புலனாய்வுப் பிரிவு முடக்கப்பட்டால், குற்றச்செயல்கள் மீண்டும் நாட்டுக்குள் அதிகரிக்கும்.
இதேவேளை மறுமுனையில் இலங்கையிலுள்ள சுவிட்சர்லாந்து தூதரகத்தில் பணியாற்றிய பெண் பணியாளர் ஒருவர், துப்பாக்கி முனையில் அச்சுறுத்தி வாகனமொன்றில் பலவந்தமாக ஏற்றிச்செல்லப்பட்டார். இதற்கு காரணம், அதிகாரியொருவருக்கு கடவுச்சீட்டு வழங்கியமையாகும்.
எனவே, வௌ்ளைவான் யுகத்துக்கு நாட்டை மீண்டும் கொண்டு செல்லவேண்டாம்” என குறிப்பிட்டுள்ளார்.