ஆரையம்பதியில் தமிழீழ விடுதலைப் புலிகள் இயக்கத்தின் முன்னாள் போராளி ஒருவர் தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
ஆரையம்பதி- செல்வா நகர் கிழக்கு, காளிகோயில் வீதியிலுள்ள வீடு ஒன்றின் பின்புற பகுதியில் இருந்து அவரது சடலம் நேற்று (வியாழக்கிழமை) மாலை கண்டெடுக்கப்பட்டுள்ளது.
விடுதலைப் புலிகளின் நிர்வாகப் பிரிவின் காணி பிரிவில் கடமையாற்றிய கானகன் என அழைக்கப்பட்ட சுந்தரலிங்கம் பரமேஸ்வரன் (47) என்ற குடும்பஸ்தரே தற்கொலை செய்துகொண்ட நிலையில் சடலமாக கண்டெடுக்கப்பட்டுள்ளார்.
இவர் இறுதிப்போர் வரையில் விடுதலைப் புலிகள் இயக்கத்தில் வன்னியில் செயற்பட்டவர். பின்னர் குடும்ப வாழ்வில் இணைந்து இயல்பு வாழ்கை வாழ்ந்து வந்துள்ளார்.
இந்நிலையில் குடும்பத்தில் ஏற்பட்ட பிரச்சினை காரணமாக ஆரையம்பதிக்கு வந்து உறவினர் வீட்டில் வசித்து வந்த அவர், வறுமை நிலை மற்றும் இறுதி யுத்தம் தொடர்பான மன அழுத்தங்களுக்கு உட்பட்டிருந்ததாகவும் தெரிவிக்கப்படுகின்றது. இவரது 2 பிள்ளைகளும் வறுமை நிலையில் வன்னியில் வசித்து வருகின்றனர்.
அத்துடன் அவரது சடலம், இன்று நல்லடக்கம் செய்யப்படவுள்ளதாக குடும்பத்தினரால் அறிவிப்பு விடுக்கப்பட்டுள்ளமையும் குறிப்பிடத்தக்கது.