விபத்தில் கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, November 3, 2019

விபத்தில் கணவர் இறந்ததால் மனைவி தற்கொலை!

விபத்தில் கணவர் இறந்த துக்கம் தாங்காமல் மனைவி தூக்குப்போட்டு தற்கொலை செய்து கொண்டார்.

சென்னை தாம்பரம் அருகேயுள்ள படப்பை செரப்பனஞ்சேரியை சேர்ந்தவர் பாலாஜி என்ற சோனு (22). ஒரகடம் பகுதியில் உள்ள தனியார் தொழிற்சாலையில் வேலை செய்து வந்தார். இவருடைய மனைவி ரிஷித்தா(20). இவர்களுக்கு திருமணமாகி ஒரு ஆண்டு ஆகிறது. நேற்றுமுன்தினம் காலை பாலாஜி தனது மோட்டார் சைக்கிளில் படப்பை நோக்கி சென்று கொண்டிருந்தார். செரப்பனஞ்சேரி வெள்ளரித்தாங்கல் அருகே செல்லும்போது பின்னால் வந்த லாரி இவரது மோட்டார் சைக்கிள் மீது பயங்கரமாக மோதியது.

இதில் சம்பவ இடத்திலேயே பாலாஜி உயிரிழந்தார். தகவல் அறிந்து சம்பவ இடத்திற்கு விரைந்து வந்த மணிமங்கலம் போலீசார் பாலாஜியின் உடலை மீட்டு பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைத்தனர். நேற்று முன்தினம் மாலை பிரேத பரிசோதனை முடிந்து எடுத்து வரப்பட்ட உடல் அடக்கம் செய்யப்பட்டது. மேலும் இந்த விபத்து குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வந்தனர்.

இந்தநிலையில் நேற்று காலை ரிஷித்தா நீண்ட நேரமாக தன்னுடைய அறையில் இருந்து வெளியே வரவில்லை. சந்தேகம் அடைந்த உறவினர்கள் அறையில் பார்த்தபோது ரிஷித்தா தூக்கில் தொங்கிய நிலையில் காணப்பட்டர். அவரை மீட்டு அங்கு உள்ள தனியார் ஆஸ்பத்திரிக்கு கொண்டு சென்றனர். அவர் ஏற்கனவே இறந்து விட்டதாக டாக்டர்கள் தெரிவித்தனர். கணவர் இறந்த துக்கம் தாங்காமல் தூக்குப்போட்டு தற்கொலை செய்துள்ளார்.

இது குறித்து மணிமங்கலம் போலீசாருக்கு தகவல் தெரிவிக்கப்பட்டது.. ரிஷித்தாவின் உடல் பிரேத பரிசோதனைக்காக ஸ்ரீபெரும்புதூர் அரசு ஆஸ்பத்திரிக்கு அனுப்பி வைக்கப்பட்டது. இது குறித்து மணிமங்கலம் போலீசார் வழக்குப்பதிவு செய்து விசாரித்து வருகின்றனர்.