ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமை குறித்து ஹிஸ்புல்லா விளக்கம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, November 19, 2019

ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் பங்கேற்றமை குறித்து ஹிஸ்புல்லா விளக்கம்

ஜனாதிபதியின் பதவியேற்பு நிகழ்வில் உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

ஜனாதிபதி தேர்தலில் அமோக வெற்றி பெற்று நாட்டின் 7ஆவது நிறைவேற்று அதிகாரம் கொண்ட ஜனாதிபதியாக தெரிவு செய்யப்பட்டுள்ள கோட்டாபய ராஜபக்ஷ நேற்று (திங்கட்கிழமை) உத்தியோகபூர்வமாக பதவியேற்றிருந்தார்.

இந்நிகழ்வில் ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமையவே கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டார் என அவரது ஊடகப்பிரிவு தெரிவித்துள்ளது.

கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்விலிருந்து கலாநிதி ஹிஸ்புல்லா வெளியேற்றப்பட்டதாக சமூக வலைத்தளங்களில் செய்தியொன்று வெளியாகியுள்ளது.

இது தொடர்பில் எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவின் ஊடகப்பிரிவு வெளியிட்டுள்ள ஊடக அறிக்கையிலேயே மேற்கண்டவாறு தெரிவிக்கப்பட்டுள்ளது.

அதில் மேலும் கூறப்பட்டுள்ளதாவது, “ஜனாதிபதி செயலாளரது உத்தியோகபூர்வ அழைப்புக்கு அமைய அநுராதபுரத்தில் இடம்பெற்ற ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ஷவின் பதவியேற்பு நிகழ்வில் கிழக்கு மாகாண முன்னாள் ஆளுநர் கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லா கலந்துகொண்டிருந்தார்.

அவர் மேற்படி நிகழ்வுக்கு உட்செல்லும்போது எடுக்கப்பட்ட ஒளிப்படமொன்றினை வைத்து போலியான செய்தியொன்று சமூக வலைத்தளங்களில் பரப்பப்பட்டு வருகின்றது. இது முற்றிலும் உண்மைக்கு புறம்பான செய்தியாகும்.

குறித்த நிகழ்வில் கலந்துகொண்ட ஐக்கிய தேசியக் கட்சி உறுப்பினர்களுக்கே மக்கள் எதிர்ப்பினை வெளியிட்டார்கள். மாறாக கலாநிதி எம்.எல்.ஏ.எம்.ஹிஸ்புல்லாவை மிகவும் மரியாதையுடன், நாகரீகமாக வரவேற்றிருந்தனர்” என அதில் குறிப்பிடப்பட்டுள்ளது