எந்த காலத்திலும் பா.ஜனதா – காங்கிரஸ் கட்சிகளுடன் கூட்டணி வைக்க மாட்டோம் என்று நாம் தமிழர் கட்சியின் ஒருங்கிணைப்பாளர் சீமான் தெரிவித்துள்ளார்.
கும்பகோணத்தில் செய்தியாளர்களிடம் கருத்து தெரிவித்த அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்து தெரிவித்த அவர், “சோமாலியா, எத்தியோப்பியா வெனிசுலா போன்று எங்களது நாடு போய் விடக்கூடாது என்பதில் எச்சரிக்கையாக இருக்கிறோம்.
மீத்தேன், ஷேல் கேஸ் போன்ற திட்டங்களை அ.தி.மு.க., தி.மு.க. ஆட்சியின்போது கையெழுத்திட்டு விவசாயத்தை சீர்குலைத்து விட்டார்கள். அதனால் திராவிட கட்சிகளோடு கூட்டணி இல்லை. இது எங்கள் கட்சி கொள்கை முடிவு. நாங்கள் எப்போதும் தன்னிச்சையாகவே தேர்தல் களத்தில் விளையாடுவோம்.
வருகிற உள்ளுராட்சி தேர்தலில் ஆதித்தமிழர், தமிழ் தேசிய இயக்கம் மற்றும் தமிழக மக்களின் ஆதரவுடன் வேட்பாளரை அறிவித்து வெற்றி பெறுவோம். அத்துடன் சட்டமன்ற தேர்தலில் போட்டியிடும் 117 ஆண், பெண் வேட்பாளர்களை ஜனவரி மாதத்தில் அறிவிப்போம்” எனத் தெரிவித்துள்ளார்.