கோத்தாபய ராஜபக்ஷ பாதுகாப்புச் செயலாளராக இருந்த காலத்திலேயே தமிழ் மக்கள் அதிகமாக துன்புறுத்தப்பட்டனர். இன்றும் தமது தேர்தல் விஞ்ஞாபனத்தில் தமிழ் மக்கள் நலன்சார் எந்த திட்டங்களையும் அவர்கள் முன்வைக்கவில்லை. இந்த நாட்டில் தமிழ்த் தேசிய பிரச்சினை ஒன்று இருப்பதாக கூட அவர் ஏற்றுகொள்ளவில்லை, மாறாக சிறுபான்மை மக்களின் வாக்குகள் இல்லாமல் வெற்றி பெற்று காட்டுவேன் எனக் கூறும் நபரை தமிழ் மக்கள் ஆதரிக்க முடியாது என்கிறது தமிழ் தேசிய கூட்டமைப்பு.
ஜனாதிபதி தேர்தல் பிரச்சாரங்கள் இடம்பெற்று வருகின்ற நிலையில் தற்போது அதிகம் விமர்சிக்கப்படும் வெள்ளைவேன் விவகாரம் உள்ளிட்ட சில விடயங்கள் குறித்து கருத்து தெரிவிக்கையில் தமிழ் தேசிய கூட்டமைப்பின் ஊடகப் பேச்சளார் எம்.எ.சுமந்திரன் இதனைக் கூறினார்.
மஹிந்த ராஜபக்ஷ 2005ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலில் வெற்றி பெற்ற பின் அமெரிக்காவிலிருந்து நேரடியாக இறக்குமதி செய்யப்பட்டவர் தான் கோத்தபாய ராஜபக்ஷ. அவர் பாதுகாப்புச் செயலாளராக நியமிக்கப்படும் போது இலங்கை பிரஜை கூட இல்லை. தான் ஒரு இலங்கைப் பிரஜை என்று ஒரு ஆவணத்தை சமர்ப்பித்திருக்கிறார். அந்த ஆவணம் போலியானது என்று குற்றப்புலனாய்வு துறையினர் நீதவான் நீதிமன்றுக்கு அறிக்கை ஒன்றை சமர்ப்பித்துள்ளனர். தொடர்ந்து இரட்டை பிரஜையாக இருந்து வந்த கோத்தாபய ராஜபக்ஷவிற்கு ஜனாதிபதி ஆசை வந்த பின் அமெரிக்க பிரஜாவுரிமை துறப்பதாக ஆவணம் ஒன்றை காட்டினார்.
சில தினங்களுக்கு முன்னர் மூன்றாவது காலாண்டுக்கு உரிய அமெரிக்க பிரஜாவுரிமையை துறந்தவர்களுக்கான பெயர் பட்டியல் வெளிவந்துள்ளது. இதிலும் கோத்தாபயவின் பெயர் இடம்பெறவில்லை. இப்போது பிரதானமாக இரண்டு கேள்விகள் எம்மத்தியில் எழுகின்றன. அதாவது கோத்தபாய ராஜபக் ஷ இலங்கை பிரஜாவுரிமையை சரியாகப் பெற்றுக்கொண்டாரா? அதேபோல் அமெரிக்க பிரஜாவுரிமை அவர் உண்மையிலேயே துறந்தாரா? இந்த கேள்விகளுக்கு விடை தேட வேண்டியுள்ளது என்றும் கூறினார்.