நாட்டின் இறையாண்மையை பாதிக்கும் எந்தவொரு உடன்பாட்டிலும் கையெழுத்திடுவதற்கு தான் இடமளிக்கமாட்டேன் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
பொலனறுவையில் நடைபெற்ற தேர்தல் பிரசார கூட்டத்தில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார். கோட்டாபய ராஜபக்ஷ மேலும் கூறியுள்ளதாவது, “வெளிநாட்டு நாடுகளுடன் இலங்கை நட்புடன் இருப்பதை உறுதி செய்வேன். எனினும், அனைத்துலக அழுத்தங்களுக்கு ஒருபோதும் அடிபணியமாட்டேன்.
இதேவேளை இலங்கையில் மீண்டுமொரு தீவிரவாதம் மற்றும் இனவாதம் மீளுருவாகாத வகையில் புலனாய்வுத்துறை மற்றும் பாதுகாப்புத்துறையை பலப்படுத்தி செயற்திறன்மிக்கதாக நிச்சயம் மாற்றுவேன்.
மேலும் இதுவரை எனக்கு கிடைத்த சவால்கள் அனைத்தையும் வெற்றிகொண்டுள்ளேன். எனவே எதிர்வரும் ஜனாதிபதி தேர்தலிலும் வெற்றியடைவேன்” என குறிப்பிட்டுள்ளார்.