தீவிரவாதத்திற்கும் அடிப்படைவாதத்திற்கும் தூபமிடுபர்களே சஜித் பிரேமதாசவை சூழ இருந்துக் கொண்டிருக்கிறார்கள் என்று இராஜாங்க அமைச்சர் வசந்த சேனாநாயக்க தெரிவித்தார்.
இந்தக் காரணத்தினாலேயே, தான் கோட்டாபய ராஜபக்ஷவுக்கு ஆதரவளிக்க முன்வந்ததாகவும் அவர் கூறியுள்ளார்.
பொலன்னறுவையில் இடம்பெற்ற பிரசாரக் கூட்டத்தின்போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். வசந்த சேனாநாயக்க மேலும் கூறியுள்ளதாவது, “நான் இன்று ஐக்கிய தேசியக் கட்சியின் மாணவர் அமைப்புக்களை முழுமையாக இந்த பக்கத்தில் இணைத்துள்ளேன்.
கிறீன் ப்ளெட் அமைப்பையும் இந்த பக்கத்திற்கு கொண்டுவந்துவிட்டோம். பொலன்னறுவை மாவட்டத்தின் ஐக்கிய தேசியக்கட்சியின் அமைப்பாளரின் சகோதரரையும் நாம் இன்று இங்கு அழைத்து வந்துள்ளோம்.
சஜித் பிரேமதாச எனது நெருங்கிய நண்பராவார். இருந்தாலும், எனக்கு அவர்களின் மேடையில் ஏறமுடியாது. அங்குள்ளவர்கள் யார்? இலங்கையிலேயே மிகவும் மோசமான கொள்ளையான மத்திய வங்கிப் பிணை முறி மோசடியில் இருந்தவர்கள்தான் அங்கு இருக்கிறார்கள்.
தீவிரவாதம், அடிப்படைவாதத்துக்கு தூபமிடுபர்கள்தான் அங்கு இருக்கிறார்கள். ஈஸ்டர் தாக்குதலில் எமது தேவாலயங்களும் ஹொட்டல்களும் சேதப்படுத்தப்பட்டன.
அப்போது, அமைச்சர் ஒருவர் இதனையிட்டு மகிழ்ச்சியடைவதாகவும், இதனால்தான் அமெரிக்காவிலிருந்து உதவிகள் வந்ததாகவும் கூறினார். இதுதான் அவர்களின் நிலைப்பாடாகும்” என குறிப்பிட்டுள்ளார்.