கோட்டாபய ராஜபக்ச தலைமையில் அமைக்கப்படவுள்ள அமைச்சரவையில் பங்கேற்பதில்லையென ஈழமக்கள் ஜனநாயக கட்சியின் (ஈ.பி.டி.பி) தலைவர் டக்ளஸ் தேவானந்தா தீர்மானித்துள்ளார்.
ஜனாதிபதி தேர்தலில் தமிழ் மக்கள் கோட்டாபய ராஜபக்சவிற்கு தமிழ் மக்கள் வாக்களிக்காததையடுத்து இந்த முடிவை எடுத்துள்ளார். அவரை அமைச்சு பதவியேற்கும்படி, ராஜபக்சக்கள் தரப்பிலிருந்த தொடர்ந்து அழைப்பு விடுக்கப்பட்டு வரும் நிலையிலும், அவர் பதவியை ஏற்பதில்லையென முடிவெடுத்துள்ளார்.
கோட்டாபய ராஜபக்சவின் தேர்தல் பிரச்சாரத்தில் டக்ளஸ் தேவானந்தா வடக்கு கிழக்கில் தீவிரமாக ஈடுபட்டிருந்தார். அதில், என்னை நம்புங்கள் என்றும் மக்களிடம் தெரிவித்திருந்தார். எனினும், கோட்டாபயவிற்கு அனேகர் வாக்களித்திருக்கவில்லை.
கடந்த உள்ளூராட்சிசபை தேர்தலில் ஈ.பி.டி.பி கணிசமான வாக்கை பெற்றிருந்த நிலையில், கோட்டாபயவை ஆதரித்து ஈ.பி.டி.பியின் ஆதரவாளர்களும் வாக்களிக்கவில்லையென கருதப்படுகிறது.
இதனால், அமைச்சு பதவியை ஏற்பதில்லையென அவர் முடிவு செய்துள்ளார்.
இதுகுறித்து தமிழ்பக்கம் அவரை தொடர்பு கொண்டு வினவியது.
“என்னை நம்பி வாக்களிக்கும்படி நான் மக்களை கோரினேன். எமது மக்களின் அடிப்படை, அன்றாட அரசியல் பிரச்சனைகளிற்கு சாத்தியமான தீர்வை உள்ளடக்கிய ஆவணமொன்றை கோட்டாபயவிற்கு வழங்கியிருந்தோம். அவர் அதற்கு இணக்கம் தெரிவித்ததன் அடிப்படையில், சொல்வதை செய்யும் அரசியல் பொறுப்புணர்வுள்ளவன் என்ற ரீதியில், என்னை நம்பி வாக்களிக்கும்படி மக்களிடம் கேட்டேன். இந்த மக்களின் விடிவிற்காக ஆயுத வழியிலும், பின்னர் ஜனநாயக வழியிலும் நீண்ட போராட்டத்தை நடத்திவரும் எனக்கு, இந்த மக்களின் பிரச்சனைகளை தீர்ப்பதில் அதிக பொறுப்பும், அக்கறையும் இருந்து வருகிறது.
வெற்றிபெறும் வேட்பாளரை ஆதரித்து, சாத்தியமான வழிகளில் பிரச்சனைகளை தீர்ப்பதே புத்திசாலித்தனம். வெற்றி வேட்பாளரின் வெற்றியில் பங்குதாரர்களாக மாறுவதன் மூலம், பிரச்சனைகளை தீர்க்க எனக்கு அங்கீகாரம் தாருங்கள் என்றுதான் நான் கோரிக்கை விடுத்தேன். எனினும், தேர்தலிற்கு முன்னதாக தமிழ் அரசியல்வாதிகளும், ஊடகங்களும் கோட்டாபய பீதியை உருவாக்கினர்.
மக்கள் வாக்களிக்காத நிலையில், நான் அமைச்சு பதவியை ஏற்கும் தார்மீக தகுதியில்லையென நினைக்கிறேன். அமைச்சு பதவி மட்டுமே எமது நோக்கமென்றால் எமது கட்சி வேறுவிதமாக இருந்திருக்கும். அரசியல் நேர்மை எனக்கு முக்கியம். அதனால், அடுத்த பொதுத்தேர்தலில் மக்கள் ஆணையை பெற்ற பின்னரே அமைச்சு பதவியை ஏற்கவே விரும்புகிறேன். அமைச்சு பதவியை ஏற்கும்படி, அழைப்பு தொடர்ந்து வந்து கொண்டிருந்தாலும், இதுவரை அதை நான் ஏற்கவில்லை“ என்றார்.