சிங்கள மக்களின் வாக்குகளால் மட்டுமே வெற்றிபெற முடியுமென்பது எனக்கு முன்னரே தெரியும். ஆனால் எனது வெற்றியில் சிறுபான்மையினரையும் இணையும்படி அழைத்தேன். ஆனால் அது நடக்கவில்லை. ஜனாதிபதியான எனது பயணத்தில் இணைந்து கொள்ளும்படி மீண்டும் அழைப்பு விடுக்கிறேன் என தெரிவித்துள்ளார் புதிய ஜனாதிபதி கோட்டாபய ராஜபக்ச.
இன்று ஜனாதிபதியாக பதவிப்பிரமாணம் செய்த பின்னர் நாட்டு மக்களிற்கு ஆற்றிவரும் உரையில் இதை தெரிவித்தார்.
அவர் உரையாற்றியபோது,
நான் இம்முறை சிறுபான்மையினரின் வாக்குகள் இல்லாமல் எமது மக்களின் வாக்குகளால் வெல்லுவேன் என்று முழுமையாக நம்பினேன். ஆனாலும் தமிழ், முஸ்லிம் மக்களிடமும் என்னை நம்பி வாக்களிக்குமாறு கேட்டுக் கொண்டேன். ஆனாலும் அவ்வாறு நடக்கவில்லை. இருந்தாலும் இந்த நாட்டின் மக்களாக உங்கள் எல்லோரையும் ஒன்றிணைத்து கொண்டு எனது பயணத்தை தொடர்வேன். அது போலவே நீங்கள் என்னை நிராகரித்திருந்தாலும் என்னோடு இலங்கையர்களாக ஒன்றிணையுங்கள். நிச்சயமாக உங்கள் நலன்களை பூர்த்தி செய்வேன்.
அனைத்து இனமக்களின் கௌரவமும் பேணப்படும். நான் பௌத்த பாரம்பரியத்தை கடைப்பிடித்து வாழ்பவன் என்ற அடிப்படையில், அனைத்து மக்களின் கலை, கலாச்சாரத்தை பேணி வாழும் சூழல் உருவாக்கப்படும். என்றார்.
“நாங்கள் வெளிநாட்டு உறவுகளில் நடுநிலை வகிக்க விரும்புகிறோம். வெளிநாட்டு சக்திகளிடையேயான எந்தவொரு மோதலிலிருந்தும் விலகி இருக்க விரும்புகிறோம் என தெரிவித்தார்.
தமது ஆட்சியில் தேசிய பாதுகாப்பிற்கு முன்னுரிமை வழங்கப்படும் என தெரிவித்தார்.
“பயங்கரவாதிகள், பாதாள உலக குற்றவாளிகள், மோசடி செய்பவர்கள், திருடர்கள் மற்றும் பெண்கள் மற்றும் குழந்தைகளை துஷ்பிரயோகம் செய்பவர்களிடமிருந்து நாட்டைப் பாதுகாக்க அரச பாதுகாப்பு எந்திரத்தை நாங்கள் பலப்படுத்துவோம்” என்றார்.
ஜனாதிபதி தனது அரசாங்கத்தின் கீழ் ஊழலை சகித்துக் கொள்ள மாட்டார் என்றும் அதற்கு பதிலாக தகுதி மற்றும் தொழில்நுட்பம் ஆகியவை ஊக்குவிக்கப்படும் என்றும், அரசுத் துறையை திறம்பட செயல்பட வலுப்படுத்த வேண்டும் என்றும் வலியுறுத்தினார்.
“ஜனாதிபதியாக எனது கடமை அனைத்து சமூகங்களுக்கும் சேவை செய்வதாகும், அதன்படி, எனக்கு வாக்களித்த, வாக்களிக்காத மக்களின் உரிமைகளை நான் பாதுகாப்பேன். எனது நிர்வாக அதிகாரங்களை நாட்டிற்கு நன்மை பயக்கும் வகையில் பயன்படுத்துவேன். தேர்தல் விஞ்ஞாபனத்தில் குறிப்பிட்ட அனைத்தையும் நிறைவேற்றுவேன் என்றார்.