இளைஞர் யுவதிகளின் எதிர்காலத்துக்காக சஜித் பிரேமதாசவை ஆதரிப்போம் என சஜித் பிரேமதாச இளைஞர் அணியின் யாழ். மாவட்ட அமைப்பாளரும் தலைவருமான திலீப்குமார் தெரிவித்துள்ளார்.
ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் மாவட்ட இளைஞரணி ஏற்பாடு செய்திருந்த ஊடகவியலாளர் சந்திப்பு நேற்று (சனிக்கிழமை) யாழ்ப்பாணத்தில் அமைந்துள்ள ஐக்கிய தேசிய கட்சி அலுவலகத்தில் இடம்பெற்றது.
இதில் கலந்துகொண்டு கருத்துத் தெரிவித்த அவர், “ஜனாதிபதி வேட்பாளராக சஜித் பிரேமதாச அறிவிக்கப்பட வேண்டும் என்பதற்காக நாங்கள் மாவட்டத்தில் பல்வேறு வேலைத் திட்டங்களை செய்திருந்தோம்.
குறிப்பாக 21 கோயில்களில் பூஜை வழிபாடு மற்றும் ஆகம வழிபாடு போன்றவற்றில் நாங்கள் ஈடுபட்டிருந்தோம்.
கடந்தகால ஆட்சியின் போது பல்வேறு வாக்குறுதிகளை வழங்கியிருந்த அரசாங்கம் எதையும் நிறைவேற்றவில்லை. குறிப்பாக வேலையில்லாப் பட்டதாரிகளின் பிரச்சினை, தொழில் வாய்ப்பின்மை, சுயதொழில் முயற்சிக்கான முதலீடு போன்ற பல்வேறு பிரச்சினைகள் மாவட்டத்தில் காணப்படுகின்றன. இவற்றை செய்வதாக சஜித் பிரேமதாச உறுதியளித்துள்ளார்.
அதற்காகவே நாங்கள் ஜனாதிபதியாக சஜித் பிரேமதாசவை வரவைப்பதற்கு பல்வேறு வேலைத் திட்டங்களை செய்திருக்கின்றோம்.
இந்த நாட்டை நாங்கள் மீண்டும் கொள்ளையர்களிடம் ஒப்படைக்க முடியாது. அவர்களால் இளைஞர் யுவதிகள் கடத்தப்பட்டதே தவிர அவர்களுக்கு உரிய முறையான தீர்வு திட்டம் எதுவும் கிடைக்கப் பெறவில்லை” என்று தெரிவித்து்ளளார்.