10 ஆண்டுகளாக இல்லாத அக்கறை ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது வந்துள்ளது – வேலுகுமார் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Wednesday, November 13, 2019

10 ஆண்டுகளாக இல்லாத அக்கறை ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது வந்துள்ளது – வேலுகுமார்


கடந்த 10 ஆண்டுகளாக பெருந்தோட்ட மக்கள் மீது வராத அக்கறை ராஜபக்ஷ குடும்பத்தினருக்கு தற்போது திடீரென வந்துள்ளதாக முற்போக்கு கூட்டணியின் கண்டி மாவட்ட நாடாளுமன்ற உறுப்பினர் வேலுகுமார் தெரிவித்தார்.

புதிய ஜனநாயக முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளர் சஜித் பிரேமதாசவின் வெற்றியை உறுதிப்படுத்தும் பிரசாரக்கூட்டம் இன்று (புதன்கிழமை) கண்டியில் நடைபெற்றது. இக்கூட்டத்தில் கலந்துகொண்டு உரையாற்றியபோதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.

அவர் அங்கு மேலும் தெரிவிக்கையில், “பெருந்தோட்டப் பகுதிகளுக்கு வந்து  பெருந்தோட்ட மக்களுக்காக பல வாக்குறுதிகளை ராஜபக்ஷக்கள் வழங்கியுள்ளனர்.

10 ஆண்டுகளாக நிறைவேற்று அதிகார ஜனாதிபதி பதவியை வகித்த மஹிந்த ராஜபக்ஷவுக்கு பதவியில் இருக்கும்போது பெருந்தோட்ட மக்கள்மீது வராத அக்கறை இன்று திடீரென வந்துள்ளது ஏன்?

எல்லாம் கைவசம் இருந்தபோது மலையக மக்களுக்காக எதனையும் செய்யாதவர்கள் இன்று அவர்களின் நலன்குறித்து கதைப்பதானது ஆடு நனைகிறதே என ஓநாய் அழுத கதைபோல்தான் இருக்கின்றது.

அதேவேளை, போர் முடிவடைந்த பின்னர் வடக்கு, கிழக்கில் வாழும் தமிழர்களை அடக்கி ஆள ராஜபக்ஷக்கள் முயற்சித்தனர். ஆனால், தன்மானத் தமிழர்கள் அடங்க மறுத்தனர். தேர்தல்களிலும் பதிலடி கொடுத்தனர்.

இருந்தும் இம்முறை நாமல் ராஜபக்ஷ சென்றுள்ளார். மக்களை கட்டியணைத்து சிறப்பாக நாடகத்தை அரங்கேற்றி வருகிறார். அவருக்கும் அவரின் பங்காளிகளுக்கும் 16ஆம் தக்க பாடம் புகட்டப்படும்.

மேலும் வாக்குரிமை என்பது எமது பிறப்புரிமையாகும். அந்த ஜனநாயக உரிமையை அனைவரும் கட்டாயம் பயன்படுத்த வேண்டும். எனவே, 16ஆம் திகதி மாலைவரை காத்திருக்காமல் நேரங் காலத்தோடு வாக்களிப்பு நிலையங்களுக்கு சென்று வாக்களிக்குமாறு வாக்காளர்களிடம் கேட்டுக்கொள்கின்றேன்” என மேலும் தெரிவித்தார்.