அமெரிக்கா இலங்கையின் நட்பு நாடு. இன்றைய சூழலில் கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமை தொடர்பில் அமெரிக்கா தமக்கு ஒன்றும் தெரியாது என்று நடிப்பதை நிறுத்தி விட்டு, அந்நாட்டு இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் உண்மை நிலைவரத்தை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும். இலங்கை அரசு, எதிர்க்கட்சி என்ற விடயங்களைத் தாண்டி இலங்கை மக்களுக்கு அமெரிக்க அரசு செய்ய வேண்டிய பெரும் கடமை இதுவாகும் என்று அமைச்சர் மனோ கணேசன் கேசரிக்கு வழங்கிய செவ்வியில் தெரிவித்துள்ளார்.
அவரது செவ்வியின் விபரம் வருமாறு,
கோத்தபாய ராஜபக் ஷவின் குடியுரிமைப் பிரச்சினை இப்போது சூடு பிடித்துள்ளதே. இது பற்றி என்ன கூற விரும்புகிறீர்கள்?
கோத்தபாயவின் குடியுரிமைப் பிரச்சினையின் சட்டவலு பற்றி நீதிமன்றமும், தேர்தல் ஆணையமும் தீர்மானிக்கட்டும். இதுபற்றி நான் பேச விரும்பவில்லை. இதன் அரசியல் வலுபற்றி ஒன்று சொல்லலாம். தொட்டதற்கு எல்லாம் அமெரிக்க சதி, அமெரிக்க கைப்பாவை, அமெரிக்க சி.ஐ.ஏ. என்றெல்லாம் எங்களைப் பார்த்து கூக்குரல் இடும் மஹிந்தவாதிகள், குறிப்பாக விமல் வீரவன்ச, உதய கம்மன்பில, வாசுதேவ போன்ற அரசியல் அல்லக்கைகள் இன்று கோத்தபாயவுடன் இருக்கிறார்கள்.
கோத்தபாய ஓர் அமெரிக்கர் என்று சொல்லப்படும் அளவுக்கும் கோத்தபாயவின் மனைவி, பிள்ளைகள் அடங்கலான குடும்பம், இன்றளவும் அமெரிக்காவில் வாழும் அமெரிக்கப் பிரஜைகள். இவர்களுக்கு இலங்கையில் குடியுரிமை, வாக்குரிமை இல்லை என்ற உண்மைகள் வெளிப்படும் அளவுக்கும், கோத்தபாய ஓர் இரகசிய அமெரிக்க முகவர், கைப்பாவை என்று குற்றம் சாட்டப்படும் அளவுக்கும் நிலைமை முற்றி விட்டதைப் பார்த்து இந்த அல்லக்கைகள் இன்று அரசியல் தற்கொலை செய்து கொள்ள வேண்டும்.
நான் விதியை நம்புவது இல்லை. மஹிந்ததான் அடித்து பிடித்துக் கொண்டு விதியை, சடங்குகளை, சாஸ்திரத்தை நம்புபவர். அப்படியானால் இதுதான் விதியின் கோர விளையாட்டோ? விதி வலியது என்று காட்டி விட்டதோ?
இன்னொன்றையும் இங்கே சொல்ல வேண்டும். உண்மையில் அமெரிக்கா இலங்கையின் ஒரு நட்பு நாடு. ஆகவே இன்றைய சூழலில் தமக்கு இதுபற்றி ஒன்றுமே தெரியாது என்பது போல் நடிப்பதை நிறுத்தி விட்டு, அமெரிக்க அரசின் இராஜாங்கத் திணைக்களம், இது தொடர்பில் உண்மை நிலவரத்தை விளக்கி அறிக்கை வெளியிட வேண்டும். இது இலங்கையின் அரசு, எதிர்க்கட்சி என்ற விடயங்களைத் தாண்டி இலங்கை மக்களுக்கு அமெரிக்க அரசு செய்ய வேண்டிய பெரும் கடமை என நான் நினைக்கிறேன்.
சஜித் பிரேமதாசவுக்காக உங்கள் கூட்டணி நடத்திய பிரசாரக் கூட்டங்கள் பற்றிக் கூறுங்கள்?
புதிய ஜனநாயக முன்னணி என்ற பெயரில் எங்கள் ஜனநாயக தேசிய முன்னணி நடத்திய முதல் பிரசாரக் கூட்டம் கொழும்பு காலிமுகத் திடலில் நடைபெற்றது. அதற்குக் கூடிய கூட்டமே இலங்கை வரலாற்றில் கூடிய அதிகூடிய அரசியல் கூட்டமாகும். அதையடுத்து சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்ட வரிசையில் கூடிய அதிகூடிய கூட்டம், எங்கள் தமிழ் முற்போக்குக் கூட்டணி, பத்தாம் திகதி தலவாக்கலையில் நடத்திய கூட்டமாகும். இதை திகா தலைமையில் எங்கள் தமிழ் முற்போக்கு கூட்டணிக் கட்சியான தொழிலா ளர் தேசிய முன்னணி பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தது. மலையக மக்கள் முன்னணியும் ஒத்துழைப்பு வழங்கியிருந்தது.
இது தானாகக் கூடிய கூட்டமா அல்லது கூட்டிய கூட்டமா?
இது சினிமா வசனம். நல்லது. தோட்டத் தொழிலாளர்களை தோட்டங்களில் இருந்து போக்குவரத்து வசதி வழங்கி அழைத்து வர வேண்டுமல்லவா? இல்லாவிட்டால் எப்படி நேரத்துக்கு அவர்கள் வருவார்கள்? ஆனால், அங்கே வந்தவர்கள் நுவரெலியா மாவட்டத்தைச் சேர்ந்தவர்கள்தான். எவரும் வெளியிலிருந்து அழைத்து வரப்படவில்லை. அங்கே வந்து எவரும், சஜித் திடம் 'கடலில் மீன்பிடிக்கப் படகு' கேட்கவில்லை. அதாவது கூட்டம் காட்ட வேண்டும் என்பதற்காக எவரும் வெளியில் இருந்து அழைத்து வரப்படவில்லை.
கொழும்பு கொலொன்னாவைத் தொகுதியில் நடைபெற்ற மஹிந்த அணி கூட்டத்தில் கலந்துகொண்ட ஒரு பெண், தனக்கு, தமது ஊருக்குள் காட்டு யானை வருவதைத் தடுக்கும் 'யானை வேலி' வேண்டும் என சத்தமாக கேட்டதைப் பார்த்து நாடு சிரித்தது. கொழும்பு கொலொன்னாவையில் எங்கே காட்டு யானை? ஆகவே அந்தக் கூட்டம் வெளியில் இருந்து அழைத்து வரப்பட்ட கூட்டம். இப்படியே வடக்கு, கிழக்கில் நடைபெற்ற மஹிந்த அணி கூட்டங்கள் உட்பட அவர்களது பல கூட்டங்களுக்கு, கூட்டம் பேரூந்துகளில் வெளியிலிருந்து அழைத்துச் செல்லப்பட்டது என்பதை புலானாய்வு அறிக்கைகள் மூலம் அறிந்து நாம் சிரித்தோம்.
நுவரெலியா மாவட்டத்துக்கு வெளியேயும் இம்முறை தமிழ் முற்போக்குக் கூட்டணி பல கூட்டங்களை நடத்தியது அல்லவா?
ஆம். இங்கே ஒரு புதிய மாற்றத்தை நாம் கொண்டு வந்தோம். வழமையாக நுவரெ லியாவில் மாத்திரமே எமது பிரதான கூட்டம் நடைபெறும். வேட்பாளரும் வந்து நமது மக்களைப் பற்றி அங்கே பேசிவிட்டுப் போய் விடுவார். ஏனைய மாவட்டங்களில் ஐ.தே.க.வின் அமைப்பாளர்கள் நமது மக்களை கூட்டங்களுக்கு அழைத்து வந்து கூட்டத்தை வேட்பாளருக்கு காட்டுவார்கள். வேட்பாளருக்கு கூட்டத்துக்கு வந்தவர்கள் யார் என்று தெரியாது. அவர் வந்து பொதுவாகப் பேசி விட்டு போய் விடுவார். இந்த முறை இந்த நடைமுறை மாற வேண்டுமென நாம் தீர்மானித்தோம்.
ஆகவே இந்த முறை கண்டி-,மாத்தளை பெருந்தோட்ட மக்களுக்காக கண்டியில், களுத்துறை-, கொழும்பின் அவிசாவளை பெருந்தோட்ட மக்களுக்காக அவிசாவளையில், இரத்தினபுரியில், கேகாலையில் மற்றும் கொழும்பு-, வத்தளை, -நீர்கொழும்பு நகரவாழ் மக்களுக்காக கொழும்பில் என இன்னமும் ஐந்து மேலதிக பெருங்கூட்டங்களை நாம் நடத்தினோம். இந்த ஐந்திலும் எமது வேட்பாளர் சஜித் வந்து கலந்துகொண்டு எமது மக்களைப் பற்றி மட்டும் பேசினார்.
இதன்மூலம் நாளைய தனது வெற்றியில் நுவரெலியா, பதுளை, இரத்தினபுரி, கேகாலை, கண்டி, மாத்தளை, களுத்துறை-, கொழும்பின் அவிசாவளை மற்றும் கொழும்பு-,வத்தளை,-நீர்கொழும்பு நகரவாழ் நமது மக்களும் பங்காளிகள் என்பதை சஜித் இப்போது மிகத்தெளிவாக உணர்ந்துள்ளார். இந்தக் கூட்டங்களை தமிழ் முற்போக்குக் கூட்டணியின் சார்பாக ஜனநாயக மக்கள் முன்னணி பிரமாண்டமாக ஏற்பாடு செய்திருந்தது.
உண்மையில் நுவரெலியா, பதுளை ஆகிய மாவட்டங்களில் நமது மக்களின் வாக்குத் தொகை சுமார் 350,000. ஏனைய மாவட்டங்களில் சுமார் 450,000. மொத்தம் சுமார் எட்டு இலட்சம் ஆகும். இந்தக் கூட்டங்களை அடுத்து நமது கட்சியாளர்கள், ஒவ்வொரு மாவட்டத்திலும் வீடு வீடாகச் சென்று பேசி, எமது மக்களின் இந்த வாக்குகள் எமது வேட்பாளருக்கு விழுவதை உறுதி செய்து வருகிறார்கள். உண்மையில் பதுளை, புத்தளம் ஆகிய மாவட்டங்களில் இப்படி வேட்பாளரை அழைத்து தனித்துவ கூட்டங்களை ஏற்பாடு செய்ய முடியாமை குறித்து நான் வருந்துகிறேன். எதிர்காலத்தில் இது நிவர்த்தி செய்யப்படும்.
எனது வழிகாட்டலில் தம்பி வேலுகுமார் கட்சி மாவட்ட அமைப்பாளர்களுடன் இணைந்து பெருந்தோட்டப் பிரசாரத்துக்காகப் பணியாற்றுகிறார். கொழும்பு-,கம்பஹாவில் எனது வழிகாட்டலில் குருசாமி, பிரகாஷ் கணேசன், சஷிகுமார் ஆகியோர் பணிகளை ஆற்றுகின்றனர். அதேபோல் வடக்கு, கிழக்கில் மன்னார், வவுனியா, மட்டக்களப்பு ஆகிய மாவட்ட சஜித் பிரேமதாச கூட்டங்களுக்கும் நமது கட்சி பங்களிப்பை வழங்கி இருந்தது. இவற்றை ஜனகன், கோபி, விமல், தீபன், சீலன் ஆகிய அமைப்பாளர்கள் செய்திருந்தனர்.
மலையக மக்கள் தொடர்பில் சஜித்துடன் உடன்பாடு உண்டா?
த.மு.கூ. சஜித்துடன் சமூக உண்டபாடுதான் இருக்கிறது. இது கட்சிகளுக்கு இடையில் இரகசிய பேச்சுகளுக்குப் பின்னர் நடைபெறும் ஒப்பந்தம் இல்லை. இதில் பிரயோஜனம் இல்லை என்பதை கடந்த அனுபவங்கள் எமக்கு உணர்த்தியுள்ளன. தமிழ் முற்போக்குக் கூட்டணியான எமக்கு இரகசியத் தேவைகள் இல்லை. ஆகவே சஜித்தை அழைத்து வந்து எம் மக்கள் மத்தியில் நேரடியாக கலந்துரையாடச் செய்து, நமது பிரச்சினைகளுக்கான தீர்வுகளை அவரது தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறச் செய்து விட்டோம்.
முதலில் ஒன்று, ஒரு சமூகம் என்ற அடிப்படையில், தேர்தல் விஞ்ஞாபனத்தில் மலையக மக்களுக்கு மட்டுமே விசேட ஓர் அத்தியாயம் இடம்பெற்றுள்ளது. இது எங்கள் கூட்டணியின் சாணக்கிய வெற்றி ஆகும். கூட்டணித் தலைவராக இதனுள் மிகவும் பிரதானமாக நான் கருதுவது, மலைநாட்டில் பாடுபடும் நாற்கூலி தோட்டத் தொழிலாளர்கள், இனி எதிர்காலத்தில் சொந்த குத்தகை பயிர்நிலக் காணியும், வீடு கட்டி வாழ சொந்த வாழ்விடக் காணியும், பெற்று மலையகத்தில் 'தமிழ் விவசாயி'களாக, கிராமவாசிகளாக மாற்றப்படுவர் என்ற கொள்கை புரிந்துணர்வுதான். 'மலையகத்தில் தமிழ் விவசாயி' என்ற சொற்றொடர் தேர்தல் விஞ்ஞாபனத்தில் இடம்பெறுகிறது. இந்த வெற்றியை ஒரு நாள் வரலாறு பதிவு செய்யும்.
இதுவரையிலான உங்கள் ஆட்சியும் உங்கள் ஆட்சிதானே... என்ன செய்தீர்கள்?
இப்பவும் ஒரு சிலர் கடந்த நான்கு வருடங்களாக நீங்கள் என்ன செய்தீர்கள் என்று சிறுபிள்ளைத்தனமாக எம்மைக் கேட்கிறார்கள். நாம் நிறையச் செய்து அவற்றின் அடுத்த கட்ட நடவடிக்கையாகத்தான், சஜித்ததை வெற்றி பெற வைக்கப் பாடுபடுகிறோம். நாம் செய்தவற்றையும், அடுத்த கட்ட உடன்பாடுகளையும் இதோ கேளுங்கள்.
தோட்டங்களில் ஏழு பேர்ச் காணி வழங் கல், அமைச்சரவைப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு பணிகள் நடைபெறுகின்றன. அடுத்த கட்ட நடவடிக்கையாக, தற்போதைய நிலையிலிருந்து முன்சென்று, காணி வழங்கலில் உள்ள நிர்வாகத் தடைகளை நீக்கி, வீடுகள் கட்டப்படுவதற்கு முன்னரே, மலையகமெங்கும் காணியை முதலில் பிரித்து சொந்த உறுதிப் பத்திரத்துடன் வழங்கும் கொள்கையை இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டு வந்துள்ளோம்.வழங்கப்பட்ட காணிகளில் தனி வீடுகள் மலைநாட்டில் கட்டப்படுகின்றன. கட்டப்படும் குடியிருப்புகள் மலையகத்தில் இப்போது தமிழ்க் கிராமங்களாக மாறி வருகின்றன. மலையக அபிவிருத்திக்கான தனியான அதிகார சபை அமைக்கப்படும். அமைச்சரவைப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு, அதிகார சபை இயங்குகிறது.
நுவரெலியா மாவட்டத்தில் மேலதிக புதிய ஆறு பிரதேச சபைகள் மூலமான அரசியல் அதிகாரப் பகிர்வு ஆரம்பிக்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்நடைமுறையை ஏனைய மலையக மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வோம்.
புதிய ஆறு பிரதேச சபைகளுக்குள், புதிய பிரதேச செயலகங்களும், கிராம சேவையாளர் பிரிவுகளும் அமைக்கும் எல்லை நிர்ணயப் பணி இப்போது நடைபெறுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, இந்நடைமுறையை ஏனைய மலையக மாவட்டங்களுக்கும் கொண்டு செல்வோம்.
“கடந்த காலத்தில் மலையக மக்கள் வாக்களித்து பிரதேச சபைகளைத் தெரிவு செய்ய முடியும். ஆனால் தோட்டப் புறங்களுக்கு, அந்தப் பிரதேச சபைகளால் நிதி ஒதுக்கீடு, அபிவிருத்தி செய்ய முடியாது” என்று இருந்த மலையக பிரதேச சபை அதிகார எல்லை சட்டம், எமது அமைச்சரவை, பாராளுமன்ற நடவடிக்கைகள் காரணமாக இன்று திருத்தப்பட்டுள்ளது.
சுமார் 300 தோட்டப்புற பாடசாலைகளுக்கு அவ்வவ் தோட்டங்களில் மேலதிக காணிகள் வழங்குதல் தொடர்பில் அமைச்சரவைப் பத்திரம் ஏற்றுக்கொள்ளப்பட்டு காணி வழங்கல் ஆரம்பிக்கப்பட்டுள்ளது.மலையக மக்களுக்கு, தேசிய அரசியலமைப்பு பணியில் காத்திரமான சம பங்கும், அந்தஸ்தும் வழங்கப்பட்டுள்ளது. அடுத்த கட்ட நடவடிக்கையாக, புதிய அரசியலமைப்பு பணி தொடரும் என்பதை இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டு வந்துள்ளோம்.
தோட்டத் தொழிலாளர்களின் வருமானத்தை அதிகரித்து, அவர்களை "மலையக தமிழ் விவசாயி" களாக மாற்றி, தோட்ட நிறுவனங்களும், இந்த மலையக விவசாயிகளும் பங்காளர்களாகும் வெளிப்பயிர்ச்செய்கை வருமானத் திட்டம் தயார் செய்யப்படுகிறது. அடுத்த கட்ட நடவடிக்கையாக இதை இந்த தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டு வந்துள்ளோம்.
உயர்கல்வித் துறையில், மலையக பல்கலைக்கழகம் பற்றிய சாத்தியப்பாடு அறிக்கை தயார் செய்யப்பட்டுள்ளது. பாடசாலை கல்வித் துறையில், மேலும் பத்து கணித, விஞ்ஞான தேசிய பாடசாலைகளை மலையக மாவட்டங்களில் அமைக்கவும் போகிறோம். அடுத்த கட்ட நடவடிக்கையாக இவற்றை இந்தத் தேர்தல் விஞ்ஞாபனத்தில் கொண்டு வந்துள்ளோம்.
பிரதான எதிர்க்கட்சியின் நான்கு முனை தந்திர திட்டம் என்று கூறுகிறீர்கள். அது என்ன?
தமிழ், -முஸ்லிம் மக்கள், தமக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது தமிழ், முஸ்லிம் வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது சஜித் அல்லாத ஏனைய சிங்கள வேட்பாளர்களுக்கு வாக்களிக்க வேண்டும் அல்லது பகிஷ்கரிக்க வேண்டும். இதுதான் கோத்தா அணியின் திட்டம். மேற்கண்ட அனைத்தும் சஜித்துக்கு எதிரான வாக்குகள் என்பதால், வாக்குகளைச் சிதறடித்து, தாம் வெற்றி பெறலாம் என்பதே இவர்களது இலக்கு. இதற்காக பலரை தமிழ் பேசும் மக்கள் மத்தியில் நேரடி பிரசார களத்தில் இறக்கியுள்ளார்கள். அதுமட்டுமல்ல, பரிச்சயமான பலரை விலைக்கு வாங்கியும், போலி கணக்குகளைப் பாவித்தும் சமூக ஊடகங்களிலும் பிரசாரம் செய்கிறார்கள்.
மறுபுறம், சஜித்தும் கோத்தாவும் ஐம்பது சதவிகித வாக்குகளுக்காகப் போராடும் போது, ஜே.வி.பி. ஐந்து சதவிகித வாக்குகளுக்குப் போராடுகிறது. இது பாராளுமன்றத் தேர்தல் அல்ல. இது இரண்டு பிரதான வேட்பாளர்களுக்கு மத்தியில் இடம்பெறும் ஜனாதிபதித் தேர்தல் ஆகும். இவற்றை சிறுபான்மை இன வாக்காளர்கள் மனதில் கொள்ள வேண்டும். பாராளுமன்றத் தேர்தலில் விரும்பியவர்களுக்கு வாக்களிக்கலாம். ஆனால், இந்தத் தேர்தலில் விளையாட்டுத்தனமாக வாக்களித்து விட்டு பின்னர் வருந்துவதில் பிரயோசனம் இல்லை.
தமிழ் தேசிய கூட்டமைப்பை அரசில் நேரடியாக இணையும்படி மன்னார், மட்டக்களப்பு ஆகிய இரண்டு இடங்களில் நடைபெற்ற கூட்டங்களில் கூறினீர்கள். ஏன்?
இரண்டு சந்தர்ப்பத்திலும் இந்த யோசனையை நாகரிகமாகத்தான் கூறினேன். இது பற்றி முடிவு எடுக்க வேண்டியது கூட்டமைப்பே. கிழக்கு மாகாண தமிழர்களும், வன்னி மாவட்டத் தமிழர்களும் 30 வருட போரினால் வாய்ப்புகளையும், வளங்களையும், உரிமைகளையும் இழந்து, இன்று சில சுயலாபிகளால் மென்மேலும் ஒடுக்கப்படுகிறார்கள்.
வாக்களித்து ஜனாதிபதியை உருவாக்கி விட்டு வெளியிலிருந்து வேடிக்கை பார்க்கும் கிழக்கு மற்றும் வன்னித் தமிழர் தலையெழுத்து இனி மாறியே ஆக வேண்டும். அதற்கு ஒரே வழி, அரசில் இணைவது ஆகும். இது எனது அபிப்பிராயம். முஸ்லிம் மக்கள் சார்பாக அங்கே அமைச்சர்கள் உள்ளார்கள். தமக்கு இல்லையே என தமிழர்கள் ஏங்குகிறார்கள்.
வன்னி, மட்டக்களப்பு, அம்பாறை மாவட்டங்களில் நிலவும் தமிழ், முஸ்லிம் விரிசல் என்னை ஆச்சரியப்படவும், வருத்தப்படவும் வைத்து விட்டது. இந்த விரிசலுக்கு நமது அரசு அணியில் இருக்கும் ஒருசில முஸ்லிம் அரசியல்வாதிகளும் காரணமாக அமைகின்றார்கள். இந்தத் தேர்தல் பிரசாரத்தில் கூட தமிழர் பெரும்பான்மையாக வாழும் வவுனியா, மன்னார், மட்டக்களப்பு மாவட்டங்களில் சஜித் பிரேமதாசவின் பிரசாரக் கூட்டங்களை முஸ்லிம் அரசியல்வாதிகள் முழுமையாக கையில் எடுத்தமை பிழை. இது தமிழர்களுக்கு பெரும் சந்தேகங்களை ஏற்படுத்தி விட்டதை நான் நேரடியாக பார்த்தேன். உண்மையில் இவற்றை தமிழர்களுடன் கூட்டு சேர்ந்து அரசில் உள்ள முஸ்லிம் அரசியல்வாதிகள் செய்திருக்க வேண்டும். நல்ல வேளையில் மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்தில் நான் முக்கிய உரையை ஆற்றினேன். அதனால் தமிழர்களின் பல சந்தேகங்களைத் தீர்க்க என்னால் முடிந்தது. ஆனால், மன்னார் கூட்டத்தில் எங்கள் கட்சி வன்னி மாவட்ட அமைப்பாளர் ஜனகனை அங்குள்ள ஒருசில பிரதேச மட்ட முஸ்லிம் அரசியல்வாதிகள் எதிரியாக பார்த்ததை நான் கண்கூடாகப் பார்த்தேன்.
இந்த நிலைமைகளை இப்போது எதிரணியிலுள்ள ஒருசில தமிழ் அரசியல்வாதிகள் பயன்படுத்திக்கொள்ள முயல்கிறார்கள். இது இந்த மாவட்டங்களில் சஜித்துக்கு வருகின்ற தமிழ் வாக்குகளை குழப்பிவிடக் கூடாது. இதுவும் என் கவலை.
இந்த தமிழ், முஸ்லிம் சிக்கலை எப்படித் தீர்ப்பது?
நீண்ட காலமாக போரினால் பலதையும் இழந்த தமிழர்களுக்கு புதிய நம்பிக்கையை நாம் ஏற்படுத்த வேண்டும். இன்று இவர்களுக்கு ஏனையவர்களை விட மேலதிக சலுகைகள், விசேட ஒதுக்கீடுகள் கிடைத்தால் கூட அதில் தப்பில்லை. ஏனென்றால் முப்பது வருட காலத்தில் கிடைக்காமல் போன நிலுவை இருக்கிறதே. இதுபற்றி நான் எனது மட்டக்களப்பு களுதாவளை கூட்டத்திலும் பேசினேன். இந்த தேர்தல் பிரசாரம் இப்போது முடிந்து விட்டது. இந்நிலையில் இது பற்றி ஒன்றும் செய்ய முடியாது. ஆனால், எதிர்காலத்தில் இதுபற்றி கவனத்தில் கொள்ள வேண்டும்.