வெள்ளை வான் கலாசாரம் என்னுடையதல்ல என ஸ்ரீலங்கா பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
கொழும்பில் இன்று(செவ்வாய்கிழமை) இடம்பெற்ற ஊடகவியலாளர்கள் சந்திப்பில் கலந்து கொண்டு கருத்து வெளியிடும் போதே அவர் இவ்வாறு குறிப்பிட்டுள்ளார்.
ஆட்சி மாற்றத்தினைத் தொடர்ந்து போர்க்குற்றச்சாட்டுகளுக்கு பதிலளிப்போம் எனவும், இராணுவத்திற்கு தான் தலைமை தாங்கவில்லையெனவும் கோட்டாபய ராஜபக்ஷ தெரிவித்துள்ளார்.
அத்துடன் மலையக மக்களின் வாழ்வியல் முன்னேற்றத்தை மையப்படுத்தியே ஆறுமுகன் தொண்டமான் தமக்கு ஆதரவளிப்பதாகவும் கோட்டாபய ராஜபக்ஷ கூறியுள்ளார்.
நாட்டின் இறையாண்மை எனக்கு முக்கியம். அதை கேள்விக்குறியாக்கும் எந்த ஒப்பந்தத்தையும் யாருடனும் நான் செய்யத் தயாரில்லை எனவும் அவர் குறிப்பிட்டுள்ளார்.
இதன்போது தொடர்ந்தும் கருத்து வெளியிட்ட அவர், ‘படையினர் மட்டுமல்ல அரசியல் ரீதியாக பழிவாங்கப்பட்டு சிறையில் உள்ளோர் தொடர்பாகவும் நீதி வழங்கப்படவேண்டுமென்றே நான் கூறினேன்.
காணாமல் போனவர்கள் தொடர்பாக நாங்கள் ஒரு பொறிமுறைமையை ஏற்படுத்தினோம். அது தொடர்பான ஆவணங்கள் உள்ளன.
போரின்போது 13784 பேர் சரணடைந்தனர். அவர்களை புனர்வாழ்வுக்கு உட்படுத்தி அவர்களுக்கு தொழில்வாய்ப்பை வழங்கினோம். சிலர் சிவில் பாதுகாப்பு படைகளில் சேர்க்கப்பட்டனர்.
நாங்கள் தடுப்புக்காவலில் வைக்கவில்லை. பல படையினர் காணாமல் போனவர்கள் பட்டியலில் இருக்கின்றனர். போரின்போது காணாமல் போனவர்கள் என்று கருதப்படுவோர் குறித்து விசாரணைகளை நடத்தியுள்ளோம். எங்களை பொறுத்தவரை சரணடைந்த எல்லோரையும் புனர்வாழ்வுக்கு உட்படுத்தியுள்ளோம்.
அனைத்து பிரஜைகளும் கௌரவமாக வாழ வேண்டும். கல்வி, வீடமைப்பு போன்ற அடிப்படை வசதிகள் செய்து கொடுக்கப்பட வேண்டும்.
நான் நாட்டின் இறையாண்மைக்கு எதிரான எந்த ஒப்பந்தத்தையும் செய்யமாட்டேன். ஒப்பந்தங்கள் ஏதும் வந்தால் அதுபற்றி பேசலாம். நான் ஜனாதிபதியாக வந்தால் அதுபற்றி ஆராய்ந்தே முடிவெடுப்பேன்.
வெள்ளை வான் கலாசாரம் என்று கூறுவோர் அந்தக் காலத்தில் வெள்ளை லொறிகளில் கடத்தினார்கள். ரயர்களினால் எரித்தார்கள். நான் யாரையும் வெள்ளை வான் கொண்டு கடத்தியதில்லை. என்னிடம் வெள்ளை வான் கிடையாது’ எனக் குறிப்பிட்டுள்ளார்.