முன்னாள் பாதுகாப்பு செயலாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டை குடியுரிமையை எதிர்த்து தாக்கல் செய்யப்பட்ட மனுவை நிராகரிப்பதற்கான காரணங்களை மேன்முறையீட்டு நீதிமன்றம் இன்று வெளியிட்டுள்ளது.
அந்தவகையில் 19 அரசியலமைப்பு திருத்தத்தின் பிரகாரம் அமைச்சரவை நியமிக்கப்படும் வரை புதிதாக தேர்ந்தெடுக்கப்பட்ட ஜனாதிபதி ஒரு அமைச்சருக்கு வழங்கப்பட்ட அதிகாரங்களை பயன்படுத்த முடியும் என மேல்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளது.
அதன்படி, ஜனாதிபதி மஹிந்த ராஜபக்ஷ, மக்களின் நிறைவேற்று அதிகாரத்தின் பிரகாரம், 2005 ஆம் ஆண்டு நவம்பர் 21 ஆம் திகதி அன்று ‘இரட்டை குடியுரிமை சான்றிதழில்’ கையெழுத்திட அரசியலமைப்பின் பிரகாரம் அதிகாரம் இருந்தது என்று நீதிமன்றம் கூறுகிறது.
எனவே மனுதாரர்களின் வாதம் பயனற்றது மற்றும் அதில் எந்தவொரு சட்டபூர்வமான அடிப்படையும் இல்லை என்று நீதிமன்றம் தீர்ப்பளித்துள்ளது.
ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ஷவின் இரட்டைப் பிரஜாவுரிமையை ஆட்சேபனைக்கு உட்படுத்தி பேராசிரியர் சந்திரகுப்த தேநுவர மற்றும் காமினி வியங்கொட ஆகியோர் தாக்கல் செய்யப்பட்டது.
மேன்முறையீட்டு நீதிமன்றத்தின் தலைவர் நீதிபதி யசந்த கோதாகொட, அர்ஜூன ஒபேசேகர, மற்றும் மஹிந்த சமயவர்தன ஆகிய மூவரடங்கிய நீதியரசர்கள் முன்னிலையில் விசாரணைக்கு வந்தபோது குறித்த மனு நிராகரிக்கப்பட்டது.
அத்தோடு அந்த காலகட்டத்தில் குடியுரிமை விடயங்களை அந்த நேரத்தில் பாதுகாப்பு அமைச்சு கையாண்டிருந்தது என்றும் அவர்கள் சுட்டிக்காட்டியிருந்தார்.
இருப்பினும், மேல்முறையீட்டு நீதிமன்றம் 2005 ல் பாதுகாப்பு அமைச்சர் இல்லாத நிலையில் இரட்டை குடியுரிமை சான்றிதழ்களை வழங்குவதற்கான அதிகாரங்கள் ராஜபக்ஷவுக்கு இருந்தது என மேன்முறையீட்டு நீதிமன்றம் சுட்டிக்காட்டியுள்ளமை குறிப்பிடத்தக்கது.