பிரித்தானியாவில் தமிழர்களிற்கு கொலை எச்சரிக்கை விடுத்ததாக குற்றம்சாட்டப்பட்டிருந்த, அப்போது இலங்கை தூதரகத்தில் பணிபுரிந்த பிரிகேடியர் பிரியங்க பெர்னாண்டோ நாளை (18) புதிய விசாரணையை எதிர்கொள்ளவுள்ளார்.
கடந்த வருடம் இலங்கை சுதந்திர தினத்திலன்று பிரித்தானியாவிலுள்ள இலங்கை தூதரகத்தின் முன்பாக போராட்டம் நடத்திய ஈழத்தமிழர்களின் தொண்டையை அறுப்பதை போல சைகை காண்பித்து, கொலை மிரட்டல் விடுத்தார் என அவர் மீது குற்றம் சுமத்தப்பட்டிருந்தது.
இது தொடர்பாக வெஸ்ட் மினிஸ்டர் நீதிமன்றத்தில் அவர் மீது இரண்டு குற்றச்சாட்டுக்களின் அடிப்படையில் வழக்கு தாக்கல் செய்யப்பட்டிருந்தது. இதில் அவர் விசாரணைக்கு ஆஜராகவில்லை. வழக்கு விசாரணையின் முடிவில் அவர் மீது பிடியாணை பிறப்பிக்கப்பட்டிருந்தது.
எனினும், பிரித்தானிய வெளியுறவுத்துறை தலையிட்ட பின்னர், பிடியாணை திரும்பப் பெறப்பட்டது.
இனப்படுகொலை தடுப்பு மற்றும் வழக்கு விசாரணைக்கான சர்வதேச மையம் (ஐ.சி.பி.பி.ஜி) இது தொடர்பாக வெளியிட்ட அறிக்கையில், இராஜதந்திர சிறப்புரிமையின் அடிப்படையில் பிரியங்க வழக்கு விசாரணையிலிருந்து தப்பிக்கிறாரா என கேள்வியெழுப்பியுள்ளது.
எனினும், இந்த வழக்கை விசாரித்த நீதிபதி, “தனிப்பட்ட நடத்தை மற்றும் தொழில்முறை தரங்களை” கண்டிப்பாக கடைபிடிக்க வேண்டும் என்று குறிப்பிட்டிருந்ததையும் சுட்டிக்காட்டியுள்ளது.
வெஸ்ட் மின்ஸ்டர் நீதிவான் நீதிமன்றம் இந்த வழக்கை சுருக்கமான விசாரணையை நாளை மேற்கொள்கிறது.