யாழில் அண்மைக்காலமாக குழுமோதல்களும் வாள்வெட்டுச் சம்வங்களும் இடம்பெற்று வருகின்ற நிலையில் இதனை தடுப்பதற்கோ கட்டுப்படுத்துவதற்கோ முறையான நடவடிக்கைகள் அற்ற நிலையே காணப்படுகின்றது. இதனால் பொது மக்கள் இரவு வேளைகளில் தங்கள் தேவைகளுக்காக வெளியில் நடமாட முடியாத சூழல் ஏற்பட்டுள்ளதாக பொது மக்கள் கவலை தெரிவிக்கின்றனர்.
வடதமிழீழம்: சாவகச்சேரி, சங்கானை .கொக்குவில் பகுதிகளில் இவ்வாறான சம்பவங்கள் அடிக்கடி இடம்பெற்று வருவதாக அப்பகுதி மக்கள் தெரிவிக்கின்றார்கள்.
அண்மையில் சங்கானை பஸ் நிலையம் முன்பாக இரு குழுக்களிடையே மோதல் இடம்பெற்றுள்ளது. நீண்ட வாள்கள் , பொல்லுகளுடன் இரு குழுக்களிடையே மோதல் சம்வம் நடைபெற்றபோது அப்பகுதியிலுள்ள வர்த்தக நிலையம் ஒன்றின் முன்னால் அடுக்கி வைக்கப்பட்டிருந்த வெற்றுச் சோடாப் போத்தல்கள் 100 க்கும் மேல் அடித்து நொருக்கப்பட்டதோடு நடமாடும் மிக்சர் வண்டி ஒன்றின் கண்ணாடிகளும் அடித்து நொருக்கப்பட்டன.
குறித்த சம்பவம் தொடர்பில் அவசர பொலிஸ் தொலைபேசி இலக்கத்திற்கு அறிவித்ததையடுத்து குறித்து பகுதிக்கு மானிப்பாய் பொலிஸார் சென்ற போது இரு குழுக்களும் தப்பியோடிவிட்டனர். பொலிஸாரும் அவர்களைத் துரத்திச் சென்று எவரையும் பிடிக்காமல்விட்டுவிட்டனர்.
இதேவேளை மறுநாள் குறித்த சம்பவத்தில் ஈடுபட்ட ஒருவர் அப்பகுதியில் நின்ற பொலிஸாருக்கு குளிர்பானம் ஒன்றையும் வாங்கிக்கொடுத்துள்ளார். குறித்த சம்வத்தையும் அப்பகுதியிலுள்ளவர்கள் பார்வையிட்டுள்ளனர்.
இவ்வாறான சம்பவங்கள் மாலை 5மணிக்குப் பின்னர் அடிக்கடி இவ்விடத்தில் இடம்பெற்று வருகின்றது. பொலிஸாருக்கும் குறித்த விடையங்கள் அறிவிக்கப்பட்டும் எத்தகைய நடவடிக்கைகளும் எடுக்காத நிலையே காணப்படுகின்றது இது மக்கள் மத்தியில் பலத்த சந்தேகத்தை ஏற்படுத்தியுள்ளமை குறிப்பிடத்தக்கது