காணாமல் போனவர்கள் விடயத்தை பற்றி நீங்கள் கடந்தகாலத்தை கேட்டுக் கொண்டிருக்கிறீர்கள். நான் இலங்கையின் எதிர்காலத்தை பற்றி திட்டமிட்டு பேசிக் கொண்டிருக்கிறேன்“ என சிரித்தபடி எகத்தாளமாக பதிலளித்துள்ளார் பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச.
யுத்தம் என்றால் காணாமல் போவது வழமை. யாழ்ப்பாண கோட்டையில் நிலைகொண்டிருந்தபோது, எனது கண்ணிற்கு முன்பாக பல இராணுவத்தினர் இறந்தனர். அவர்களையும் எம்மால் மீட்க முடியாமல் போனது என்றும் தெரிவித்துள்ளார்.
பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோட்டாபய ராஜபக்ச, மஹிந்த ராஜபக்ச ஆகியோர் இன்று கொழும்பில் பத்திரிகையாளர்களின் கேள்விகளிற்கு பதிலளித்தனர்.
இதன்போது, பத்திரிகையாளர் ஒருவர் கோட்டாபயவிடம், காணாமல் போனவர்கள் பற்றி கேள்வியெழுப்பினார்.
கேள்வி: இராணுவத்திடம் சரணடைந்த பொதுமக்கள் எங்கே?
கோட்டாபாய: நான் இராணுவத்தளபதி அல்ல. இராணுவத்தளபதியிடம்தான் கேட்க வேண்டும். (சிரித்தபடி)
கேள்வி: இராணுவத்திடம் சரணடைந்தவர்கள் திரும்பி வரவில்லையே அவர்களிற்கு என்ன நடந்தது?
கோட்டாபாய: 13784 பேர் இராணுவத்திடம் சரணடைந்தனர். அவர்களிற்கு சமூகத்துடன் இணைக்கப்பட்டு வேலை வழங்கப்பட்டுள்ளது. உலகத்திலேயே எந்த நாடும் செய்திருக்காத அளவில் வெற்றிகரமான புனர்வாழ்வு திட்டத்தை நாம் மேற்கொண்டோம். வெளிநாட்டிலிருந்து வந்தவர்கள் கூட, புனர்வாழ்வில் இருந்தவர்களை வந்து பார்த்தார்கள். நாம் அவர்களை தடுப்பில் வைத்திருக்கவில்லை. அவர்களின் கடந்த செயற்பாட்டின் அடிப்படையில், 6 மாதம், ஒரு வருடம், 2 வருடம் என புனர்வாழ்வளித்தோம். சரணடைந்தவர்கள் விடுவிக்கப்பட்டு விட்டனர்.
கேள்வி: சரணடைந்தவர்கள் யாரும் காணாமல் போகவில்லையென நீங்கள் கருதுகிறீர்களா?
கோட்டாபாய: யுத்தத்தின் போது 4000 இற்கும் மேற்பட்ட இராணுவத்தினரும் காணாமல் போயுள்ளனர். போர் என்றால் காணாமல் போவது இயல்பு. அங்கு அடையாளம் தெரியாத பல உடல்கள் இருந்தன. யாழ்ப்பாண கோட்டையில் நாங்கள் நிலைகொண்டிருந்தபோது, எங்கள் கண்ணிற்கு முன்பாகவே பலர் உயிரிழந்திருந்தனர். அவர்களை எங்களால் மீட்க முடியவில்லை.
காணாமல் போனவர்கள் என்றால், அவர்கள் உயிரிழந்திருப்பார்கள். காணாமல் போனவர்களின், உறவினர், பெற்றோர் அவர்களின் உடலை மீட்கவில்லையென்றே அர்த்தம். யுத்தத்தில் இப்படி இராணுவத்தினரும் காணாமல் போயுள்ளனர்.
நீங்கள் கேட்டீர்கள், சரணடைந்த மக்களிற்கு என்ன நடந்ததென. அவர்கள் புனர்வாழ்வு கொடுத்த விடுவிக்கப்பட்டுள்ளனர்.
கேள்வி: நிறைய மக்கள் சொல்கிறார்கள், தமது உறவினர்கள் இராணுவத்திடம் சரணடைந்தனர், ஆனால் அவர்கள் நீங்கள் சொன்ன புனர்வாழ்வு பெற்றவர்கள் பட்டியலிலும் இல்லை. வீட்டிற்கும் வரவில்லை. அவர்கள் இன்னும் உயிரோடு உள்ளனரா?
கோட்டாபாய: நாம் இது பற்றி விசாரணை நடத்தினோம். கலந்துரையாடல்கள் நடத்தினோம். இன்ன இடத்தில், இத்தனையாம் திகதி தமது உறவினர்களை சரணடைந்ததாக யாரும் சொல்லவில்லை.
கேள்வி: பரணகம ஆணைக்குழுவில் கூட காணாமல் போனவர்கள் பற்றி குறிப்பிடப்பட்டுள்ளதே?
கோட்டாபாய: இல்லை
கேள்வி: இல்லை அந்த ஆணைக்குழுவில் அப்படி குறிப்பிடப்பட்டுள்ளது.
கோட்டாபாய: மௌனம்