ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் ஜனாதிபதி வேட்பாளராக கோட்டாபய ராஜபக்சவுக்குப் பதிலாக இன்னொரு வேட்பாளரைத் தேர்ந்தெடுத்து வைத்துக்கொள்ளுமாறு தேர்தல்கள் ஆணைக்குழுவின் தலைவர் மஹிந்த தேசப்பிரிய, ஸ்ரீலங்கா பொதுஜன முன்னணியின் தலைவர் மஹிந்த ராஜபக்சவுக்கு இரகசிய ஆலோசனை வழங்கியுள்ளார் எனத் தெரியவந்துள்ளது.
கோட்டாபயவுக்கு எதிரான பிரஜாவுரிமைப் பிரச்சினை குறித்த மனு மேன்முறையீட்டு நீதிமன்றத்தில் நாளைமறுதினம் புதன்கிழமை விசாரணைக்கு எடுத்துக்கொள்ளப்படவுள்ளது. இந்த மனு மீது சிலவேளை இடைக்காலத் தடையுத்தரவு வழங்கப்பட்டால் கோட்டாபய ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியாத நிலைமை ஏற்படும். அதற்காக முற்கூட்டியே மாற்று ஏற்பாடு செய்து வைத்திருப்பது நல்லதென மஹிந்தவுக்குத் தேசப்பிரிய ஆலோசனை வழங்கியுள்ளார்.
இதையடுத்து மாற்று வேட்பாளர் ஒருவரைத் தேர்ந்தெடுப்பதில் ராஜபக்ச அணியினர் அதிக கவனம் செலுத்தியுள்ளனர்.
பெரும்பாலும் மஹிந்த ராஜபக்சவின் மனைவி ஷிரந்தி ராஜபக்ச அல்லது மஹிந்தவின் சகோதரர் சமல் ராஜபக்ச அல்லது வேறு ஒருவர் மாற்று வேட்பாளராகத் தெரிவாகலாம் எனவும் அறியமுடிந்தது.
இதேவேளை, மஹிந்தவின் மற்றொரு சகோதரரான பஸில் ராஜபக்ச சத்தம் சந்தடியின்றி தனது அமெரிக்கக் குடியுரிமையை இரத்துச் செய்து கொண்டுள்ளார் எனவும் ஒரு தகவல் தெரிவித்தது. ஜனாதிபதி வேட்பாளராகக் கோட்டாபய போட்டியிட முடியாத நிலைமை ஏற்பட்டால் தான் வேட்பாளராகக் களமிறங்கும் நோக்குடன் அமெரிக்கக் குடியுரிமையை பஸில் இரத்துச் செய்திருக்கலாம் எனவும் அந்தத் தகவல் மேலும் தெரிவித்தது.
எனினும், கோட்டாபய ராஜபக்சவை இலங்கைப் பிரஜையாக ஏற்றுக்கொள்வதைத் தடுக்குமாறு கோரி முன்வைக்கப்பட்ட மனு மீது நாளைமறுதினம் இடம்பெறும் விசாரணையையடுத்து வழங்கப்படும் தீர்ப்பைப் பொறுத்தே அவர் ஜனாதிபதித் தேர்தலில் போட்டியிட முடியுமா? முடியாதா? என்பது தொடர்பில் தெரியவரும்.