நான் இலங்கைப் பிரஜைதான்: நீதிமன்றை தீர்ப்பை ஏக்கத்தோடு பார்த்திருக்கும் இன அழிப்பாளன் கோட்டா - Kathiravan - கதிரவன்

Breaking

Tuesday, October 1, 2019

நான் இலங்கைப் பிரஜைதான்: நீதிமன்றை தீர்ப்பை ஏக்கத்தோடு பார்த்திருக்கும் இன அழிப்பாளன் கோட்டா

போலியான ஆவணங்களை சமர்ப்பித்து அமெரிக்க குடியுரிமையினை 2005ஆம் ஆண்டு பெற்றுக்கொள்ளவில்லை. அதற் கான தேவையும் அப்போது ஏற்படவில்லை. நான் இலங்கை பிரஜை என்பதில் எவ்வித சந்தேகமும் கிடையாது என்று உறுதிப்படுத்திய பிறகே அமெரிக்க அரசாங்கம் குடியுரிமை இரத்துக்கான ஆவணங்களை பொறுப்பேற்றது.

தற்போது அரசியல் தேவைக்காக குடியுரிமையினை அடிப்படையாகக் கொண்டு முன்வைக்கப்படும் குற்றச்சாட்டுகளுக்கு நீதித்துறை நியாயமான தீர்வினை விரைவில் வழங்கும் என பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளர் கோத்தபாய ராஜபக்ஷ தெரிவித்தார்.

தேச விமுக்தி பெரமுன அமைப்பின் தேசிய மாநாடு நேற்று கொழும்பில் உள்ள புதிய நகர மண்டபத்தில் இடம் பெற்றது. இந்நிகழ்வில் கலந்துக் கொண்டு கருத்து தெரிவிக்கையிலேயே அவர் மேற்கண்டவாறு குறிப்பிட்டார்.

இங்கு அவர் மேலும் கருத்துத் தெரிவிக்கையில்

பொதுஜன பெரமுனவின் ஜனாதிபதி வேட்பாளராக அறிவிக்கப்பட்டதை தொடர்ந்து பாரிய அரசியல் சூழ்ச்சிகளுக்கு உள்ளாக்கப்பட்டுள்ளேன். 19ஆவது திருத்தத்திற்கு அமைய இரட்டை குடியுரிமையினை கொண்டுள்ளதால் என்னால் ஜனாதிபதி வேட்பாளராக போட்டியிட முடியாது என்று குறிப்பிட்டவர்கள். அமெரிக்க குடியுரிமையினை நீக்கியதுடன் குடியுரிமை இரத்து செய்யப்படவில்லை என்ற புதிய வதந்தியை பரப்பி விட்டனர்.

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டதாக உறுதிப்படுத்தப்பட்டதை தொடர்ந்து தற்போது 2005ஆம் ஆண்டு தான் அமெரிக்க குடியுரிமைக்கு போலியான ஆவணங்களை சமர்ப்பித்துள்ளதாக புதிய குற்றச்சாட்டு தற்போது முன்வைக்கப்பட்டுள்ளது. முறையான ஆவணங்களை சமர்ப்பித்தே அமெரிக்க குடியுரிமையினை பெற்றுக் கொண்டேன். போலியான ஆவணங்களை சமர்ப்பிப்பதற்கான எவ்வித தேவையும் அப்போது ஏற்படவில்லை.

19ஆவது அரசியலமைப்பு திருத்தம் எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷவின் குடும்ப உறுப்பினர்களை மாத்திரம் இலக்கு வைத்து உருவாக்கப்பட்டது. 2019ஆம் ஆண்டு ஜனாதிபதி தேர்தலுக்கு பொதுஜன பெரமுனவின் வேட்பாளராக போட்டியிடுமாறு எதிர்க்கட்சி தலைவர் மஹிந்த ராஜபக்ஷ குறிப்பிட்டமைக்கு அமைய அமெரிக்க குடியுரிமையினை இரத்து செய்வதற்கான ஆவணங்களை சமர்ப்பித்தேன்.அதற்கமைய கடந்த ஏப்ரல் மாதம் அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டமைக்கான அறிவித்தல் கிடைக்கப் பெற்றது.

அமெரிக்க குடியுரிமை இரத்து செய்யப்பட்டதை தொடர்ந்து இலங்கை பிரஜைக்கான வெளிநாட்டு கடவு சீட்டினையும், 2016ஆம் ஆண்டு புதிய அடையாள அட்டையினையும் பெற்றுக் கொண்டேன். இவ்விடயங்களில் எவ்வித முறைக்கேடுகளும் இடம் பெறவில்லை .அரசியல் தேவைகளுக்காகவே குடியுரிமையினை முன்னிலைப்படுத்திய குற்றச்சாட்டுக்கள் தற்போது முன்வைக்கப்படுகின்றது.

சுமத்தப்பட்டுள்ள குற்றச்சாட்டுக்கள் இதுவரையில் ஏதும் நிரூபிக்கப்படாமல் அரசியல் வழிவாங்கல் பட்டியலுக்குள் உட்படுத்தப்பட்டுள்ளது. குடியுரிமை தொடர்பில் எழுந்துள்ள சர்ச்சைகளுக்கும் நீதித்துறை நியாயமான தீர்வினை விரைவில் வழங்க வேண்டும். ஜனநாயக முறையிலே தேர்தல் இடம் பெறவுள்ளது. ஜனநாயகத்திற்கு மதிப்பளிப்பவர்கள் அரசியல் சூழ்ச்சிகளை முன்னெடுக்காமல் நேரடியாக சவால்களை எதிர்க் கொள்ளவேண்டும் என்றார்.