சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் – ஆனந்தசங்கரி - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Sunday, October 13, 2019

சம்பந்தன், மாவை, சுமந்திரன் ஆகியோர் உடனடியாக இராஜினாமா செய்ய வேண்டும் – ஆனந்தசங்கரி


தமிழ் மக்களை தொடர்ந்து ஏமாற்றிக் கொண்டுவரும் தமிழ் தேசியக் கூட்டமைப்பினர் தங்களது பதவிகளை இராஜினாமா செய்யவேண்டும் என  தமிழர் விடுதலைக் கூட்டணியின் தலைவர் வீ.ஆனந்த சங்கரி வலியுறுத்தியுள்ளார்.

இதன்படி தமிழ் தேசியக் கூட்டமைப்பின் தலைவர் இரா.சம்பந்தன், நாடாளுமன்ற உறுப்பினர்களான மாவை சேனாதிராஜா மற்றும் எம்.ஏ.சுமந்திரன் ஆகியோர் உடனடியாக தங்களின் பதவிகளை இராஜினாமா செய்ய வேண்டும் என அவர் குறிப்பிட்டுள்ளார்.

யாழில், இன்று (ஞாயிற்றுக்கிழமை) இடம்பெற்ற செய்தியாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு கூறினார்.

அவர் தெரிவிக்கையில், “மேற்குறிப்பிட்ட உறுப்பினர்கள் உடனடியாக பதவி விலககேண்டும். அவர்களிடம் நம்பிக்கை இழந்து விட்டோம். விடுதலைப் புலிகளின் பிரதிநிதிகள் என்று சொல்லிக்கொண்டு நாடாளுமன்றத்துக்கு சென்ற 22 பேரும் வாய் மூடி மௌனமாகவே இருந்தனர்.

இவர்கள் ஆரம்பத்திலேயே ஒரு குற்றமும் செய்யாமல் என்மீது துரோகிப் பட்டம் சூட்டினார்கள். ஆனால் அன்றிலிருந்து இன்றுவரை மக்களுக்கு துரோகம் செய்துவரும் கூட்டமைப்பின் குறித்த மூன்று பேரும் முதலில் இராஜினாமா செய்ய வேண்டும்.

அத்துடன் ஏனையவர்கள் எம்முடன் இணைந்து செயற்படுவார்களாக இருந்தால் அடுத்த ஜனாதிபதித் தேர்தலில் சரியான ஒருவரைத் தெரிவுசெய்ய முடியும்” என அவர் குறிப்பிட்டுள்ளார்.