‘கோட்டாபயவின் லிஸ்ற்றுடன் வந்த இராணுவத்தினர் தேடித்தேடி சுட்டுக் கொன்றனர்’: நீதிமன்றத்தில் வெளியான உறைய வைக்கும் தகவல்! - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 17, 2019

‘கோட்டாபயவின் லிஸ்ற்றுடன் வந்த இராணுவத்தினர் தேடித்தேடி சுட்டுக் கொன்றனர்’: நீதிமன்றத்தில் வெளியான உறைய வைக்கும் தகவல்!

வெலிக்கடை சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்த கைதிகள் சுட்டுக்கொல்லப்பட்டது தொடர்பான வழக்கு விசாரணையில் பல திடுக்கிடும் தகவல்கள் வெளியாகி வருகின்றன. சிறைச்சாலைக்குள் நுழைந்த ராணுவத்தினர் “கோட்டாவின் லிஸ்ற்“ என்ற பட்டியலில் இருந்தவர்களை தேடித்தேடி சுட்டுத்தள்ளினார்கள் என் அம்பலப்படுத்தியுள்ளார் சிறைச்சாலையின் உதவிக்கணிப்பாளர் ஒருவர்.

2012 நவம்வர் 9ம் திகதி வெலிக்கட சிறைச்சாலையில் கலவரத்தில் ஈடுபட்ட கைதிகளை அடக்குவதாக குறிப்பிட்டு, இராணுவத்தினர் மேற்கொண்ட நடவடிக்கையில் 8 கைதிகள் கொல்லப்பட்டனர். இந்த கொலையுடன் தொடர்புடையவர்கள் எனமூவர் மீது குற்றம்சாட்டப்பட்டுள்ளது.

இது தொடர்பான வழக்கு நேற்று உயர்நீதிமன்ற நீதிபதிகள் கிஹான் குலதுங்க (தலைவர்), பிரதீப் ஹெட்டியாராச்சி மற்றும் மஞ்சுள திலகரத்ன ஆகியோர் அடங்கிய கொழும்பு உயர்நீதிமன்ற வழக்கு விசாரணை பெஞ்ச் முன் விசாரணைக்கு வந்தது.

வழக்கு விசாரணையின்போர் உதவி கணிப்பாளர் குடா பந்தர சாட்சியமளித்தார்.

அவரது சாட்சியத்தில்-

சிறைச்சாலை கலவரம் நடந்த நேரத்தில், அவர் ஆரம்பத்தில் சிறைக்குள் ஒரு கட்டிடத்தில் பாதுகாப்பாக தங்கியிருந்தார். கட்டிடத்திலிருந்து வெளியேறும் போது, ​​இரண்டு இராணுவ வீரர்கள் அங்கு வந்தனர். அவர்கள் பெயர்ப்பட்டியலொன்றை வைத்திருந்தனர். “கோட்டா லிஸ்ற்“ (கோட்டாபயவின் பட்டியல்) என அதை குறிப்பிட்டு, பட்டியலில் இருந்த ‘உக்குவ’ மற்றும் ‘ஷியாம்’ என்ற இரண்டு கைதிகளைப் பற்றி கேட்டார்கள்.

இருப்பினும், இரு கைதிகளும் அப்போது மகசீன் சிறையில் இல்லை.

மரண தண்டனை விதிக்கப்பட்ட ‘ஷியாம்’ மகர சிறைச்சாலையில் தடுத்து வைக்கப்பட்டிருந்தார். ​​மனநோயால் பாதிக்கப்பட்ட ‘உக்குவா’ சிறை மருத்துவமனையில் அனுமதிக்கப்பட்டிருந்தார்.

கட்டிடத்திற்குள் நான் இருந்தபோது, ​​சிந்தாமணி மொஹோட்டிகே துஷார சந்தன என்ற ‘கலு துஷார’ என்ற கைதியும் என்னுடன் இருந்தார். திடீரென இராணுவ வீரர்கள் அங்கு நுழைந்து கலு துஷாரவை கட்டிடத்திலிருந்து வெளியே அழைத்துச் சென்றனர். சில நிமிடங்களுக்குப் பிறகு, கலு துஷார என்னை உதவிக்கு வருமாறு கூச்சலிடுவதைக் கேட்டேன். இரண்டு அல்லது மூன்று வெடிச்சத்தங்கள் கேட்டபின் அவரது அலறல் நின்றுவிட்டது என சாட்சியமளித்தார்.

இந்த வழக்கில் முதல் சந்தேகநபரான இன்ஸ்பெக்டர் மோசஸ் ரங்கஜீவ, தூங்கிக் கொண்டிருந்த கைதிகளான ​​ஆசாரப்புலிகே ஜோதிபால, கங்கன்மலேஜ் மலிந்த நிலேந்திர பெல்போல மற்றும் ஹர்ஷன் ஸ்ரீ மனகீர்த்தி பெரேரா ஆகியோரை டோர்ச் லைட் அடித்து பார்த்து, உறுதி செய்து எழுப்பி, அவர்களை வெளியே அழைத்து சென்றதாகவும், பின்னர் சிறை வளாகத்தை சோதனை செய்தபோது, ​​மூவரும் சுட்டுக் கொல்லப்பட்டதையும், அவர்களின் உடல்கள் ஒன்றின் மேல் ஒன்றாக அடுக்கி வைக்கப்பட்டிருப்பதையும் கண்டதாக சாட்சியமளித்துள்ளார்.

நாளை (18) வரை அவரது மேலதிக சாட்சியம் ஒத்திவைக்கப்பட்டுள்ளது.

இந்த வழக்கின் இன்னொரு அரச தரப்பு சாட்சியொருவர், வெலிக்கடையில் தடுத்து வைக்கப்பட்டிருப்பதில் தனக்கு உயிரச்சுறுத்தல் இருப்பதாக தெரிவித்திருந்ததையடுத்து, அவர் அநுராதபுரம் சிறைச்சாலைக்கு மாற்றப்பட்டுள்ளது குறிப்பிடத்தக்கது.

பொலிஸ் போதைப்பொருள் பணியகத்துடன் இணைக்கப்பட்ட இன்ஸ்பெக்டர் மோசஸ் ரங்கஜீவ மற்றும் பத்திரிகை சிறை கண்காணிப்பாளர் லாமஹவேஜ் எமில் ரஞ்சன் ஆகியோர் பிணையில் விடுவிக்கப்பட்டிருந்தமையும் குறிப்பிடத்தக்கது.