வவுனியாவில் கொல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி - கொலையாளியின் பகீர் வாக்குமூலம் - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Thursday, October 17, 2019

வவுனியாவில் கொல்லப்பட்ட முச்சக்கரவண்டி சாரதி - கொலையாளியின் பகீர் வாக்குமூலம்

வவுனியா முச்சக்கரவண்டி சாரதியிடம் கொள்ளையிடும் நோக்கத்துடனேயே அவரை கொலை செய்ததாக சாரதி கொலை தொடர்பில் கைது செய்யப்பட்டுள்ள சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

கடந்த 9 ஆம் திகதி ஒரு பிள்ளையின் தந்தையான சின்னப்புதுக்குளத்தினை சேர்ந்த 27 வயதுடைய கேதீஸ்வரன் சுவேந்திரபிரகாஸ், கள்ளிக்களம் பகுதியில் கொலை செய்யப்பட்டு எரியூட்டப்பட்ட நிலையில் பற்றையொன்றினுள் சடலமாகக் கண்டெடுக்கப்பட்டிருந்தார்.

இந்நிலையில் இந்த சம்பவம் தொடர்பாக நேற்று முன்தினம் இரவு முருகனூரைச் சேர்ந்த இரண்டு பிள்ளைகளின் தந்தையான 24 வயதுடைய சந்தேகநபர் ஒருவர் கைது செய்யப்பட்டிருந்தார்.

அவரிடம் மேற்கொண்ட வாக்குமூலத்தின் போதே பணத்தேவைக்காக கொள்ளையிடும் நோக்கில் முச்சக்கர வண்டை சாரதியை கொலை செய்ததாக கூறியுள்ளார்.


நீண்டகாலமாக கொள்ளையிடும் நோக்கத்துடனேயே கத்தி போன்ற பொருட்களை வாங்கி வைத்திருந்த நிலையில், குறித்த தினத்தில் வவுனியா கோவில்குளம் சந்தியில் உள்ள தரிப்பிடத்தில் கொல்லபட்ட முச்சக்கரவண்டி சாரதி நின்றுள்ளார்.

சாரதியின் தொலைப்பேசி இலக்கத்தினை பெற்று சென்றிருந்த நிலையில் மாலை நேரமானதும் முச்சக்கரவண்டி வேண்டும் எனத் தெரிவித்ததையடுத்து வண்டியுண்டன் சாரதி வந்ததாக சந்தேக நபர் குறிப்பிட்டுள்ளார்.

இதேவேளை அதற்கு முன்னரும் கொள்ளையிடும் நோக்குடன் நெடுங்கேணிக்கு முச்சக்கரவண்டியை அமர்த்திச் சென்றிருந்தபோதும், கொலை செய்வதற்குரிய இடம் அமையவில்லை என்பதோடு சவாரிக்கான பணத்தை கொடுக்கவில்லை எனவும் சந்தேகநபர் வாக்குமூலம் வழங்கியுள்ளார்.


எனவே கடந்த 9ஆம் திகதி பணம் தருகின்றேன் என அவரை வரவழைத்து, ஈரப்பெரியகுளத்தில் விடுமாறு தெரிவித்ததாகவும், போகும் வழியில் கள்ளிக்குளம் போவோமா எனக் கேட்டதற்கு அவரும் சரி என முச்சக்கரவண்டியை கள்ளிக்குளத்திற்கு செலுத்தினார்.

அங்குச் சென்றதும் முச்சக்கரவண்டியை சற்று உள்ளே தள்ளி முச்சக்கரவண்டியை நிறுத்திவிட்டு தன்னைத் திரும்பிப் பார்க்கும்போது கத்தியால் கழுத்தில் வெட்டியபோது, கத்தி உடைந்துவிட்ட நிலையில் அவர் ஓடியபோது தான்ன் துரத்தியதாகவும், அப்போது அவர் சங்கிலி மற்றும் தன்னிடம் இருந்த பொருட்களைக் கழற்றி எறிந்த பின்னர் சாரதியின் கழுத்தை நெரித்துக் கொன்றேன் எனவும் கொலையாளி வாக்குமூலம் வழங்கியுள்ளார்.

அதன்பின்னர் முச்சக்கரவண்டியில் இருந்த போத்தலை எடுத்து பெட்ரோலையும் துணியை அவரின் மேல் போட்டு எரித்த பின்னர், அங்கிருந்து தப்பித்து கொழும்பு, மாத்தறை, ஹட்டன் போன்ற இடங்களுக்கு சென்றதாகவும் குறித்த கொலையாளி வாக்குமூலம் வழங்கியதாக பொலிஸார் தெரிவித்துள்ளனர்.