தன்னில் நம்பிக்கை வைத்து பாதுகாப்பு அமைச்சை ஒப்படைத்தால் அந்த பொறுப்பை சரியாக நிறைவேற்றுவேன் என தெரிவித்துள்ளார் பீல்ட் மார்ஷல் சரத் பொன்சேகா.
நேற்று காலி முகத்திடலில் நடந்த புதிய ஜனநாயக கூட்டணியின் முதலாவது பிரச்சார கூட்டத்தில் உரையாற்றிய போதே இதனை தெரிவித்தார்.
அவர் மேலும் குறிப்பிடுகையில்,
சஜித் பிரேமதாச என்னிடம் ஒப்படைக்கவுள்ள பாதுகாப்பு அமைச்சின் மூலம் நாட்டையும், உங்களையும் பாதுகாப்பேன். நாட்டின் சகல பகுதிகளையும் பாதுகாப்பேன். அன்று, யுத்தத்தை நடத்தும் பொறுப்பை இன்னொரு இராணுவத்தளபதிக்கு விட்டு வைக்க மாட்டேன் என உறுதியளித்தேன். அதை செய்தும் முடித்தேன். அதுபோலவே, இப்போது உங்களிற்கு வாக்களிக்கிறேன். பாதுகாப்பு அமைச்சின் மூலம் நாட்டையும், உங்களையும் பாதுகாப்பேன்.
இராணுவத்திலிருந்து ஓய்வு பெற்று, ஓய்வூதியத்துடன் அமெரிக்காவில் வசித்து வந்த கோட்டாபய, தனது அண்ணன் பதவிக்கு வந்த பின்னரே இந்த நாட்டிற்கு வந்தார். ஆனால் நாங்கள் அப்படியல்ல. டை கட்டிக் கொண்டு கொழும்பிலும் இருக்கவில்லை. நாங்கள் களத்தில் இருந்தோம். யுத்தத்தை முடித்து வைத்தோம்.
எனது திறமை, அனுபவத்தை கணக்கிலெடுத்து, எனக்கு பாதுகாப்பு அமைச்சை தருவதாக தெரிவித்துள்ள சஜித்திற்கு நான் நன்றியை தெரிவித்து கொள்கிறேன். அந்த பொறுப்பை நான் சரியாக செய்வேன் என்பதை மீண்டும் உறுதியளிக்கிறேன் என்றார்