அரசியல்வாதிகள் பெருமளவானோர் சிறை செல்ல நேரிடும்: அநுர குமார திஸாநாயக்க - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Friday, October 11, 2019

அரசியல்வாதிகள் பெருமளவானோர் சிறை செல்ல நேரிடும்: அநுர குமார திஸாநாயக்க

நாட்டில் முக்கிய பிரச்சினைகளுக்கு காரணமான அரசியல்வாதிகளை சட்டத்தின் முன் நிறுத்தினால் அவர்களில் பெரும்பாலானோர் வெலிகடை சிறைசாலைக்கு செல்ல வேண்டிய நிலைமை ஏற்படுமென தேசிய மக்கள் சக்தியின் ஜனாதிபதி வேட்பாளர் அநுர குமார திஸாநாயக்க தெரிவித்துள்ளார்.

குருநாகலில் நடைபெற்ற ஊடகவியலாளர் சந்திப்பில் கலந்துகொண்டு கருத்து தெரிவிக்கும்போதே அவர் இதனைக் குறிப்பிட்டுள்ளார். அநுர மேலும் தெரிவித்துள்ளதாவது, “கடந்த 2015ஆம் ஆண்டு நாங்கள் மஹிந்த ராஜபக்ஷ அரசாங்கத்தை தோற்கடித்து புதிய அரசாங்கத்தை உருவாக்க வாக்களித்தோம்.

ஆனால் தேர்தலுக்குப் பிறகும் இதற்கு முற்பட்ட காலங்களில் காணப்பட்ட அரசாங்கத்தைத்தான் காணக்கூடியதாக இருந்தது.

மேலும், மக்களாகிய நீங்கள் ஐக்கிய தேசிய கட்சியை தோற்கடித்து கோட்டாபய தலைமையில் புதிய அரசாங்கத்தை உருவாக்க நினைப்பது தவறு. காரணம், நல்லாட்சி அரசாங்கத்தை சேர்ந்தவர்களில் பெரும்பாலோனர்களே தற்போது கோட்டாவுடன் இணைந்துள்ளார்கள். ஆகையால் புதியதொரு மாற்றம் ஏற்படுவதற்கு வாய்ப்பில்லை.

அண்மையில் நடைபெற்ற மக்கள் சந்திப்பொன்றில் பேசிய மஹிந்த, விவசாயம் மற்றும் போக்குவரத்து சேவை ஆகியவற்றை இந்த அரசாங்கம் அழித்துள்ளது என்றார்.

இதன்போது அவ்விடத்தில் முன்னாள் விவசாய அமைச்சர் துமிந்தா திசாநாயக்க மற்றும் முன்னாள் போக்குவரத்து அமைச்சர் நிமல் ஸ்ரீபாலடி சில்வா அந்த மேடையில் இருந்தனர்.

அதாவது குறித்த பிரச்சினைக்கு காரணமானவர்களே மஹிந்தவின் பேச்சைக்கேட்டு கைதட்டுகின்றனர்.

இவ்வாறு எல்லா பிரச்சினைகளுக்கும் சட்ட நடவடிக்கை எடுக்கப்படுமாயின் அரைவாசி அரசியல்வாதிகள் வெலிகடை சிறையிலேயே இருக்க வேண்டிய நிலைமை ஏற்படும்.

இதேபோன்று சஜித்துக்கு ஆதரவு வழங்க மக்கள் தீர்மானித்தாலும் அங்கு பிரதமர் ரணில், கருணாநாயக்க ஆகியோரும் ஆட்சியில் இருப்பார்கள்.

ஆகையால் பொதுஜன பெரமுன மற்றும் புதிய ஜனநாயக முன்னணியினால் ஒருபோதும் சட்டம், ஒழுங்கை கொண்ட நாட்டை ஒருபோதும் உருவாக்க முடியாது.

ஆனாலும், நான் எதிர்வரும் காலத்தில் தனது அரசாங்கம் செய்யும் குற்றங்களுக்கும் உரிய சட்ட நடவடிக்கைகளை நிச்சயம் எடுப்பேன்” என குறிப்பிட்டுள்ளார்.