எமது ஆட்சிக்காலத்திலும் உங்களுடைய வீட்டிற்கு வெள்ளை வான் வந்தது. ஆனால் அதன் இருபக்கத்திலும் ‘சுவசரிய’ என்று எழுதப்பட்டிருக்கும். நாட்டின் சுகாதாரத்துறையை அடுத்தகட்டத்திற்குக் கொண்டு செல்வதற்கான நடவடிக்கைகளை நாங்கள் மேற்கொண்டோம் என்று பிரதமர் ரணில் விக்கிரமசிங்க குறிப்பிட்டார்.
ஓய்வூதியக் கொடுப்பனவு போன்ற மேலும் பல விடயங்களுக்கு அதிகளவு நிதியை ஒதுக்கீடு செய்வதற்கு எமது பொருளாதாரம் மேலும் வளர்ச்சியும், உறுதியும் அடைய வேண்டும். நாட்டின் பொருளாதாரம் ஏற்றுமதிப் பொருளாதாரமாக மாறுவதுடன், பொருளாதார வளர்ச்சி வேகம் 4.5 வீதமாக அல்லது அதனைவிட அதிகரிக்க வேண்டும். அதனூடாக அரசின் வருமானம் அதிகரிக்கும். எனவே அந்த வருமானத்தைக் கொண்டு வேறுபல திட்டங்களுக்கான நிதி ஒதுக்கீட்டை அதிகரிக்க முடியும் என்றும் சுட்டிக்காட்டினார்.
ஓய்வூதியக் கொடுப்பனவுத் திணைக்களத்தின் ஏற்பாட்டில் இவ்வாண்டுக்கான தேசிய ஓய்வூதியர்தின விழா, நாட்டின் 25 மாவட்டங்களிலும் ஓய்வுபெற்ற அரச உத்தியோகத்தர்களின் பங்களிப்புடன் இன்று கொழும்பிலுள்ள தாமரைத் தடாகத்தில் நடைபெற்றது.
இந்நிகழ்வில் பிரதம அதிதியாக கலந்துகொண்டு உரையாற்றுகையிலேயே பிரதமர் இவ்வாறு குறிப்பிட்டார்.