றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் பலமாணவிகள் தற்கொலை செய்யும் நிலைமை.? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Tuesday, October 8, 2019

றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதையால் பலமாணவிகள் தற்கொலை செய்யும் நிலைமை.?

றுகுணு பல்கலைக்கழகத்தில் பகிடிவதைகள் உச்சகட்டத்தில் தொடர்வதால் இன்னும் பலமாணவிகள் தற்கொலை செய்யும் சூழல் உருவாகியுள்ளதாக தெரிவிகப்படுகின்றது.

மாணவிகள் தமக்கு நிகழும் கொடுமைகளை வாய்மொழி ,எழுத்துமூல முறைப்பாடாக சொல்லுவதற்கு அஞ்சுவதாகவும் கூறப்படுகின்றது.

அங்கு இடம்பெறும் மாணவிகளுக்கு எதிராக வார்த்தை துஸ்பிரயோகம் மற்றும் அவர்களின் உடல் அவயங்களை எடுத்த காணொளிகள் என்பன வைரலாக பரவுகின்றதாகவும் தெரியவருகின்றது .

இலங்கையில் பல்கலைக்கழகத்தில் படிப்பதற்கு அனுமதி பெறுவதற்கு க. பொ. த உயர்தர பரீட்சையில் சிறப்பாக சித்தி பெறுவது அவசியம். வருடாந்தம் சுமார் 3 இலட்சம் மாணவர்கள் க. பொ. த. உயர்தர பரீட்சைக்குத் தோற்றுகின்றபோதும், அவர்களில் ஒரு இலட்சம் பேருக்கு மேல் பல்கலைக்கழகம் செல்வதற்கான அடிப்படைத் தகுதியை பெறுகின்றனர் எனினும் சுமார் 25 சதவீத மாணவர்களே பல்கலைக்கழகத்துக்கு செல்ல முடிகிறது.

வசதியுள்ள குடும்பத்தில் இருந்து வரும் மாணவர்கள் அதிக பணம் கொடுத்து வெளிநாட்டு பல்கலைக்கழகங்கள் வழங்கும் பட்டங்களை அவர்கள் இங்கிருந்துகொண்டே பெற்றுக் கொள்ள முடிகிறது. எனினும் கிராமப்புற மாணவர்களுக்கும் அதிக அளவு வசதி இல்லாத மாணவர்களுக்கும் அவர்களது எதிர்காலத்தை வளப்படுத்தக் கூடிய ஒரு வாய்ப்பாக பல்கலைக்கழக பிரசன்னம் இருந்து வருகிறது. இதனால் பல்கலைக்கழகத்துக்கு வரும் மாணவர்களில் அதிக எண்ணிக்கையிலான மாணவர்கள் கிராமப்புறங்களில் இருந்தே வருகின்றனர்.

இத்தனை சிரமத்துடன் பல்கலைக்கழகங்களுக்கு அனுமதி பெறும் மாணவர்களுக்கு முதலாவது பிரச்சினையாக அமைவது அங்கு இடம்பெறும் பகிடிவதையாகும். இந்த பகிடிவதையை அறிமுகப் படலம் என்று கூறலாம். ஆனால் இந்த அறிமுகப் படலம் பெரும்பாலும் உடல் மற்றும் உள ரீதியில் இம்சிக்கும் சித்திரவதையாக அமைந்துள்ளதுதான் வேதனைக்குரியது.

இந்த பகிடிவதை இம்சை இதுவரை 14 பல்கலைக்கழக புதுமுக மாணவர்களின் உயிரை நேரடியாக பறித்திருப்பது பெரும் கவலைக்குரியது. அதேநேரம் பகிடிவதை மறைமுக ரீதியில் மேலும் சில உயிர்களை பறித்திருக்க கூடும் என்றும் கூறப்படுகிறது.

இப்போது பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் பகிடிவதையை பாலியல் ரீதியிலான வன்முறை இம்சை என்று பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் மொஹான் டி சில்வா கூறுகிறார் என்றால் அது எந்த அளவுக்கு பாரதூரமானது என்பதை நாம் உணர்ந்து கொள்ள முடியும்.

ஒரு காலத்தில் பகிடிவதை என்பது பகிடிவதையை செய்பவருக்கும் பகிடிவதை செய்யப்படுபவருக்கும் எவ்வித பிரச்சினையையும் ஏற்படுத்தாத ஒரு மகிழ்ச்சிகரமான நிகழ்வு என்று இருந்தது என்னவோ உண்மைதான். ஆனால் இப்போது அது நினைவில் மட்டுமே உள்ள நிகழ்வாகும்.

ஆனால் இப்போதைய பகிடிவதை இம்சையுடன் கூடிய ஒரு சித்திரவதை. இதன் போது இடம்பெறும் உடல் ரீதியான இம்சை மிகுந்த மனஉளைச்சலை ஏற்படுத்துவதன் காரணமாக மாணவர்கள் பல்கலைக்கழக படிப்பே வேண்டாம் என பல்கலைக்கழகங்களை விட்டு வெளியேறிச் செல்வதும் உண்டு.

பகிடிவதை இவ்வாறான பெயரில் இருக்கும் நிலையில் அரசாங்கம் இதனை ஒரு பாரதூரமான விடயம் என்று கருதுகிறதா என்ற கேள்வி பரவலாக எழுந்துள்ளது.

2017/2018 ஆம் கல்வி ஆண்டில் மட்டும் 1989 மாணவர்கள் அல்லது பல்கலைக்கழக அனுமதி பெற்றவர்களில் 6 முதல் 7 சதவீத மாணவர்கள் பல்கலைக்கழகங்களில் தம்மை பதிவு செய்து கொண்ட பின்னர் பல்கலைக்கழகங்களுக்கு செல்லாமலே இருந்துள்ளனர்.

எனினும் இதில் குறிப்பிடத்தக்க எண்ணிக்கையிலான மாணவர்கள் பகிடிவதையின் பயம் காரணமாகவே பல்கலைக்கழகங்களுக்கு செல்லவில்லை என கூறியிருப்பதாக தெரியவந்துள்ளது.

பல்கலைக்கழகங்களில் இடம்பெறும் மோசமான பகிடிவதை மற்றும் சித்திரவதை பற்றி பெற்றோர் மற்றும் பல்கலைக்கழக மாணவர்களிடம் இருந்தும் நூற்றுக்கணக்கான கடிதங்கள் ஒவ்வொரு வருடமும் தனக்கு கிடைத்து வருவதாக பல்கலைக்கழக மானிய ஆணைக்குழுவின் தலைவர் கூறியிருப்பதை இங்கு குறிப்பிட்டாக வேண்டும்.

அண்மையில் ஒரு தாயிடம் இருந்து கிடைத்த கடிதத்தில் “எனது மகன் பல்கலைக்கழகத்தில் தனக்கு நேர்ந்த மோசமான பகிடிவதை காரணமாக மீண்டும் அங்கு செல்ல மறுக்கிறார். அந்த அளவுக்கு அந்தச் சம்பவம் காரணமாக அவர் அச்சமடைந்திருக்கிறார். அவரை நிர்வாணமாக்கி அவரது உறுப்புகளை சிதைக்கும் அளவுக்கு மோசமான பகிடிவதை நடந்திருக்கிறது. இதனால் எனது மகன் மோசமான மனஉளைச்சலுக்கு ஆளாகியிருப்பதாக நான் அஞ்சுகிறேன் என அந்த தாய் குறிப்பிட்டுள்ளதாகவும் தெரிவிக்கப்பட்டுள்ளது.

ஒருசில விஷமத்தனம் மிகுந்த மாணவர்களின் இவ்வித செயற்பாட்டின் காரணமாக ஒட்டுமொத்த பல்கலைக்கழக முறைமைக்கே களங்கம் ஏற்படுகிறது.

கடந்த வருடம் இதுபோன்ற ஒரு சம்பவத்தில் சிரேஷ்ட பல்கலைக்கழக மாணவர்கள் புதிய மாணவர்கள் மீது பாலியல் தொந்தரவு செய்து வந்த போது கையும்மெய்யுமாக அகப்பட்டுக்கொண்டனர். எனினும் இந்த சம்பவம் பல்கலைக்கழகத்துக்கு வெளியிலேயே நடந்திருக்கிறது.

குறிப்பிட்ட சம்பவம் நடந்த வீடு மாதம் 30 ஆயிரம் ரூபா என்ற ரீதியில் மூன்று மாதங்களுக்கு வாடகைக்கு பெறப்பட்டுள்ளதாகவும் தெரியவந்துள்ளது. பகிடிவதையை அவர்கள் எப்படி கிரமமாக தொடர்ந்து ஏற்பாடு செய்து வருகின்றனர் என்பது இதிலிருந்து தெளிவாக தெரிகிறது.

பல்கலைக்கழக மாணவர் சங்கம் இந்த பகிடிவதையில் சம்பந்தப்படவில்லை என்று கூறிய போதும் அவர்கள் கூற்று பற்றி ஊர்ஜிதம் செய்யப்படவில்லை. எனினும் சம்பவத்தில் ஈடுபட்ட 15 மாணவர்கள் பகிடிவதை எதிர்ப்பு சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டு நீதிமன்றத்தில் ஆஜர்படுத்தப்பட்ட பின்னர் 100 நாட்களில் பிணையில் செல்ல அனுமதிக்கப்பட்டனர். அதேநேரம் அவர்களுக்கு மூன்று வருட பல்கலைக்கழக கல்வித் தடை விதிக்கப்பட்டது.

அதுவரை மிகவும் மோசமான பகிடிவதை சம்பவங்களில் ஈடுபட்ட பேராதனை கலைப்பீடம் மேற்படி மாணவர்கள் கைது மற்றும் கல்வித்தடை காரணமாக ஓரளவு சுமுகமான நிலையில் இருக்கிறது என்றுதான் கூறவேண்டும்.

ஸ்ரீஜயவர்தனபுர பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சில பகிடிவதை சம்பவங்களில் புதிய மாணவர்கள் அடிமைகளை அடக்குதல் போன்ற நிலையில் இருந்துள்ளதாக சிரேஷ்ட விரிவுரையாளர் ஒருவர் கூறியுள்ளார். புதிய மாணவர்களை இந்த சம்பவங்கள் உளரீதியாக பெரும் மனஉளைச்சல்களுக்கு ஆளாக்கி இருப்பதுடன் அவர்களது தன்னம்பிக்கையை சிதைத்துள்ளதனால் அவர்கள் வாழ்க்கையில் பாதகமான மனோபாவத்துடனேயே இருக்க வேண்டிய நிர்ப்பந்தத்தை ஏற்படுத்தியுள்ளதாகவும் அவர் சுட்டிக்காட்டியிருந்தார்.

இதேவேளை இவ்வாறான மோசமான பகிடிவதையில் ஈடுபடும் மாணவத் தலைவர்கள் பல்கலைக்கழகத்தில் இடம்பெறும் சமய நிகழ்ச்சிகளை ஏற்பாடு செய்து நல்ல பெயரை சம்பாதித்துக் கொள்கின்றனர். இவர்களின் செயற்பாடுகள் அச்சுறுத்தல்கள் சகிதம் இருப்பதால் பெற்​றோர் பகிடிவதைகளைப் பற்றி முறைப்பாடு செய்ய அஞ்சுகின்றதாகவும் கூறப்படுகின்றது.

இந்த நிலையில் 450 இற்கு மேற்பட்ட முறைப்பாடுகள் பகிடிவதைக்கு எதிராக உதவி பீடத்துக்குக் கிடைத்துள்ளபோதும் அதற்கான சான்றுகள் கிடைக்கவில்லை எனவும் பொலிஸார் கூறியுள்ளனர்.

இதேவேளை பகிடிவதை எதிர்ப்புச் சட்டத்தின் கீழ் கைது செய்யப்பட்டுள்ள 40 மாணவர்கள் தற்போது விளக்கமறியலில் வைக்கப்பட்டுள்ளதாக உயர்கல்வி அமைச்சர் கூறியுள்ளார்.

இதேவேளை தொடர்தும் பல்கலைகழகங்களில் இவ்வாறான செயல்பாடுகள் இடம்பெறுமானால் மாணவர்கள் எதிர்காலம் கேள்விகுறியாகும் என கல்விமான்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.