கடந்த 2015 ஆம் ஆண்டு இடம்பெற்ற பாராளுமன்ற தேர்தலில் ஹிஸ்புல்லாஹ் தோற்று - பின்னர் அவருக்கு தேசியப்பட்டியல் உறுப்பினர் அறிவிக்கப்பட்டது.
அன்று காத்தான்குடியில் அவரை எதிர்த்து நின்ற கட்சிகளையும், நிறுவனங்களையும், தனிநபர்களையும், அவர்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், காரியாலயங்கள், பள்ளிவாயல்கள் என்பவற்றையும் மிகமோசமாக ஹிஸ்புல்லாவின் ஆதரவாளர்கள் தாக்கிஇருந்தனர் என முஸ்லீம் காங்ரசின் முன்னாள் கிழக்கு மாகாண சபை உறுப்பினர் எ.எல்.தவம் தனது கட்டுரையில் குறிப்பிட்டுள்ளார்.
மேலும் அவர் குறிப்பிட்டுள்ளதாவது...
அப்படி தாக்கப்பட்டவர்களை வைத்தியசாலைக்கு சென்று பார்வையிட்டதோடு அவர்களின் வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், காரியாலயங்கள், பள்ளிவாயல்கள் என பல இடங்களையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் மற்றும் , காத்தான்குடி முக்கியஸ்தர்களும் சென்றுபார்வையிட்டனர்.
அதில் மு.காவை சேர்ந்தவர்கள் அல்லது சேராதவர்கள் என்ற பேதம் காட்டப்படவில்லை. "முஸ்லிம்கள்" என்ற பொதுமையே முன்னிலைப்படுத்தப்பட்டது.
மறுபுறம், இத்தாக்குதல்களின் கோரத்தை எதிர்த்தும், இக்கோரச் சம்பவங்களை செய்தவர்களை கைது செய்யுமாறு கோரியும் NFGG ஜனாதிபதி செயலகத்திற்கு அருகில் ஆர்ப்பாட்டத்தையே மேற்கொண்டது.
ஏனெனில், இவ்வாறு இலக்குவைக்கப்பட்டு தாக்கப்பட்டதில் NFGG யின் முக்கிய முன்னணி செயற்பாட்டாளர்கள் உள்ளடக்கப்பட்டிருந்தனர். இதனை அடுத்து ஜனாதிபதி நேரடியாக ஹிஸ்புல்லாவை தொடர்புகொண்டு கண்டித்ததோடு அதனை உடனடியாக நிறுத்துமாறு கடிந்துகொண்டதையும் நாடே அறியும்.
அவ்வாறு தாக்கப்பட்ட வீடுகள், வியாபார ஸ்தாபனங்கள், காரியாலயங்கள், பள்ளிவாயல்கள் என பல இடங்களையும் ஶ்ரீலங்கா முஸ்லிம் காங்கிரஸின் தலைவர் ரவூப் ஹக்கீம் அவர்களும், காத்தான்குடி முக்கியஸ்தர்களும் சென்றுபார்வையிட்ட போது எடுக்கப்பட்ட ஒரு வீடியோவை இப்போது சமூக வலைத்தளங்களில் பதிவிட்டு , அப்பாவி சிங்கள மக்களை உசுப்பேற்றி கோத்தபாயவிற்கு வாக்களிக்க தூண்டும் இழிய செயலை நமது முஸ்லிம் சகோதரர்களே செய்திருக்கிறார்கள்.
கோத்தபாயவின் வாக்கினை அதிகரிக்க உதவும் என்ற எண்ணத்தில் இவர்கள் இப்படி செய்திருப்பது நேரடியாக முஸ்லிம் சமூகத்தையே பாதிக்கும் எனவும் சுட்டிக்காடப்பட்டுள்ளது.
சிங்கள மக்களுக்கு ரவூப் ஹக்கீம் வேறு, றிசாட் வேறு, ஹிஸ்புல்லா வேறு என்றெல்லாம் புரிவதில்லை. அது புரிய வேண்டிய அவசியமும் அவர்களுக்கு இல்லை . அத்துடன் அவர்கள் அதனை புரிந்துகொள்ள சிங்கள இனவாத அரசியல்வாதிகள் விடவும் மாட்டார்கள்.
அவர்களுக்கு விளங்குவது ஒன்றே ஒன்றுதான். அது "ஒட்டுமொத்த முஸ்லிம்களும் தீவிரவாதிகள் அல்லது பயங்கரவாதிகள்" என்பது மட்டும்தான்.
மொத்தத்தில்
சஹ்ரானுக்கும் இவர்களுக்கும் வித்தியாசமில்லை.
சஹ்ரானும் இந்த வீடியோவை பதிவிட்டவர்களும் ஒரே விடயத்தையே செய்திருக்கிறார்கள்.
ஒரே நோக்கத்தையே கொண்டிருக்கிறார்கள்
அப்பாவி முஸ்லிம்களை சிங்கள மக்களிடம் பலிக்கடாவாக ஆக்கி இருக்கிறார்கள்.
சஹ்ரானும் இந்த வீடியோவை பதிவிட்டவர்களும் ஒரே அணிக்காக வேலை செய்வதை துல்லியமாக வெளிக்காட்டி இருக்கிறார்கள்.
சஹ்ரானும் இந்த வீடியோவை பதிவிட்டவர்களும் சமூகம் எக்கேடு கேட்டுப்போனாலும் பரவாயில்லை என்று கூலிக்கு மாறடித்திருக்கிறார்கள்.
சமூகம் இவர்களை தெளிவாக அடையாளம் கண்டுகொள்ள வேண்டும். ஹிஸ்புல்லாவினது சுயநல அரசியல் மக்களால் புரிந்துகொள்ளப்பட வேண்டும். மிப்லால் மௌலவி போன்ற கோத்தாவின் கூலிக்கு மாரடிக்கும் இன்னுமொரு சஹ்ரானை சரியாக புரிந்துகொள்ள வேண்டும். இவர்கள் தங்களுடைய நலனுக்காக இந்த சமூகத்தையே அடகுவைப்பார்கள் என்பதை சிங்கள மக்கள் அறிந்துகொள்ள வேண்டும் முஸ்லீம் சமூக ஆர்வலர்கள் கூறியுள்ளனர்.
மறுபுறம், இன்னும் முஸ்லிம் சமூகத்தின் முதுகில் பயணித்தே கோத்தபாய தன் வெற்றியை பெற நினைக்கிறார் என்பதை புரிந்துகொள்ள இதை விட தெளிவான அத்தாட்சி இன்னொன்று தேவையில்லை.
அவர்களின் இனவாதத்திற்கு இந்த தேர்தலோடு சாவுமணி அடிக்க ஒட்டுமொத்த முஸ்லிம்களும் முடிவெடுக்க வேண்டும் எனவும் முஸ்லீம் சமூக ஆர்வலர்கள் கோரிக்கை விடுத்துள்ளனர் .