இரகசிய சித்திரவதை முகாம்கள்: கொழும்பு சர்வதேச மாநாட்டில் பகிரங்கமாக வலியுறுத்தவுள்ள பிரதிநிதிகள்? - Kathiravan - கதிரவன்

Breaking

MKRdezign

Saturday, October 19, 2019

இரகசிய சித்திரவதை முகாம்கள்: கொழும்பு சர்வதேச மாநாட்டில் பகிரங்கமாக வலியுறுத்தவுள்ள பிரதிநிதிகள்?

இலங்கையில் வரும் திங்கட்கிழமை கடல்சார் பாதுகாப்பு சர்வதேச மாநாடு நடைபெறவுள்ளது.

இந்நிலையில், இதில் கலந்துகொள்ளும் சர்வதேச பிரதிநிதிகள் இலங்கையில் உள்ள கடற்படையினரின் இரகசிய தடுப்பு முகாம்களில் இடம்பெற்ற சித்திரவதைகள் குறித்த விசாரணைகளுக்கு இலங்கை கடற்படையினர் ஒத்துழைப்பை வழங்கவேண்டும் என பகிரங்கமாக வலியுறுத்த வேண்டும் என கோரிக்கை விடுக்கப்பட்டுள்ளது.

உண்மை மற்றும் நீதிக்கான திட்டம் என்ற சர்வதேச அமைப்பு இந்த வேண்டுகோளை விடுத்துள்ளது.

கடற்படையினரின் புலனாய்வு பிரிவினர் இவ்வாறான சித்திரவதைகளில் ஈடுபட்டவேளை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக பணியாற்றிய இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டெனவின் அமர்வை சர்வதேச பிரதிநிதிகள் புறக்கணிக்க வேண்டும் எனவும் அந்த அமைப்பு வேண்டுகோள் விடுத்துள்ளது.

2008- 2009 இல் 11 பேர் இலங்கை கடற்படையின் விசேட புலனாய்வு பிரிவினரால் கடத்தப்பட்டு காணாமலாக்கப்பட்டமை குறித்து இலங்கையின் பொலிஸார் விசாரணைகளை மேற்கொண்டுள்ளதாக தெரிவித்துள்ள உண்மை மற்றும் நீதிக்கான திட்டத்தின் நிறைவேற்றுப் பணிப்பாளர் ஜஸ்மின் சூக்கா, கடற்படையினர் மேற்கொண்ட குற்றங்களில் இது ஒரு சிறியபகுதியே எனவும் தெரிவித்துள்ளார்.

கடற்படையினரின் பல முகாம்களில் இடம்பெற்ற சட்ட விரோதமாக தடுத்துவைத்தல், சித்திரவதைகள், காணாமற்போகச் செய்யப்படுதல் ஆகியவற்றுடன் கடற்படையின் பல தளபதிகளுக்கு தொடர்புள்ளது. அல்லது அவர்கள் அதனை அறிந்திருந்தனர் என தெரிவித்துள்ள ஜஸ்மின் சூக்கா இவர்கள் குறிப்பிட்ட முகாம்களின் தலைமை அதிகாரிகளாக விளங்கியதுடன் இந்த குற்றங்களில் ஈடுபடுமாறு உத்தரவையும் வழங்கியிருந்தனர் எனவும் தெரிவித்துள்ளார்.

சர்வதேச மாநாட்டை நடத்துபவர்களில் ஒருவரான இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென 2011 முதல் 2013 வரை கடற்படையின் புலனாய்வு பிரிவின் இயக்குநராக இருந்தார். 2012 நடுப்பகுதி வரை குறிப்பிட்ட முகாமை கடற்படையின் புலனாய்வு பிரிவினர் இயக்கிவந்தனர்.

புலனாய்வு பிரிவின் இயக்குநர் என்ற அடிப்படையில் இலங்கை கடற்படையின் தற்போதைய பிரதானி நிசாந்த உலுகெட்டென இது குறித்து தெரிந்திருக்க வேண்டும். ஆனால் அவர் நடவடிக்கை எடுக்கத் தவறிவிட்டார் எனவும் குறிப்பிட்டுள்ளது.

இலங்கை கடற்படையினருடன் கடல்சார் பாதுகாப்பு குறித்த பேச்சு வார்த்தைகளுக்காக கொழும் செல்லும் உலக நாடுகளின் கடற்படை அதிகாரிகள் சர்வதேச நியாயாதிக்கத்தை கொண்ட சித்திரவதைக்கு எதிரான பிரகடனத்தில் தங்கள் நாடுகள் கைச்சாத்திட்டுள்ளதை மறந்துவிடக் கூடாது எனவும் ஜஸ்மின் சூக்கா வேண்டுகோள் விடுத்துள்ளார்.