யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தின் திறப்பு விழா இன்று காலை 10 மணிக்கு இடம்பெறும்.
ஜனாதிபதி மைத்திரிபால சிறிசேன, பிரதமர் ரணில் விக்கிரமசிங்க, தமிழ் தேசிய கூட்டமைப்பு, சுதந்திரக்கட்சியின் எம்.பிக்கள் இதில் கலந்துகொள்ளவுள்ளனர்.
சென்னை விமான நிலையத்திலிருந்து காலை 9.55 மணிக்கு புறப்படும் விமானம் காலை 11 மணிக்கு யாழ்ப்பாணம் சர்வதேச விமான நிலையத்தில் தரையிறங்கும்.
பலாலியில் முதன்முதலாக இரண்டாம் உலகப்போர் காலத்தில் பிரித்தானிய ஆட்சியாளர்களால் இராணுவத் தேவைகளிற்காக விமான நிலையமொன்று அமைக்கப்பட்டது. 359 ஏக்கர் நிலப்பரப்பில் இந்த விமான நிலையம் அமைக்கப்பட்டது.
பின்னர், 1947 டிசம்பர் 10ம் திகதி முதன்முதலாக பலாலியிருந்து விமானமொன்று இந்தியாவிற்கு சேவையை ஆரம்பித்தது.
ஆயுதப் போராட்டம் ஆரம்பித்த பின்னர், 1985ம் ஆண்ட மேலும் 646 ஏக்கர் காணியை அரசாங்கம் சுவீகரித்து, பலாலி விமான நிலையத்தை சூழ படை முகாம்களை நிறுவியது.
1987ம் ஆண்டு இந்திய இலங்கை ஒப்பந்தத்தை தொடர்ந்து, மறுநாள் 1987 ஜூலையில் நுழைவுவிசா இல்லாமல் இந்திய இராணுவ விமானங்கள் பலாலியில் தரையிறங்கியிருந்தன.
1990ம் ஆண்டு இலங்கை அரசிற்கும்- புலிகளிற்குமிடையிலான சமாதான உடன்படிக்கை முறிந்ததை தொடர்ந்து, பலாலியை சூழவுள்ள பகுதிகளிலிருந்த மக்கள் அங்கிருந்து வெளியேறினர்.
1996ம் ஆண்டு படையினரின் கட்டுப்பாட்டில் யாழ் குமாநாடு வந்ததை தொடர்ந்து, 1990களின் இறுதியில் மட்டுப்படுத்தப்பட்டளவில் கொழும்பு- பலாலி விமான சேவை இடம்பெற்று வந்தது.
2015ம் ஆண்டு நல்லாட்சி ஏற்பட்டதை தொடர்ந்து, பலாலியை சூழவிருந்து மேலும் காணிகள் விடுவிக்கப்பட்டு, 2.26 பில்லியன் செலவில் 2019 ஜூலை 5ம் திகதி அபிவிருத்திப் பணிகள் ஆரம்பிக்கப்பட்டன.