ஜனாதிபதி தேர்தலில் இருந்து விலகுமாறு சிவாஜிலிங்கத்தை கோருவதுடன், அமைப்பு விதிகளுக்கு அமைய ஏனைய நடவடிக்கைகளும் எடுக்கபடும் என ரெலோவின் தலைமை குழு தீர்மானித்துள்ளதாக கட்சியின் செயலாளர் சிறிகாந்தா தெரிவித்தார்.
ஜனாபதி தேர்தலில் போட்டியிடுவதற்கு சிவாஜிலிங்கம் வேட்பு மனு தாக்கல் செய்துள்ள நிலையில் அது தொடர்பாக ஆராய்வதற்காக ரெலோவின் தலைமை குழு வவுனியாவில் இன்று(13) கூடியது.
அதன்பின்னர் ஊடகங்களுக்கு கருத்து தெரிவித்த போதே அவர் இவ்வாறு தெரிவித்தார்.
மேலும் தெரிவித்த அவர்,
கட்சியினுடைய நிலைப்பாட்டிற்கு மாறாக கட்சியின் அனுமதியின்றி சுயேட்சை வேட்பாளராக சிவாஜிலிங்கம் தேர்தலில் போட்டியிட நியமனப்பத்திரம் தாக்கல் செய்து தேர்தல் களத்தில் செயற்பட்டு கொண்டிருகிறார்.
அவர் கட்சியின் கட்டுபாட்டை மீறி செயற்பட்டுகொண்டிருக்கின்றார் என்ற முடிவின் அடிப்படையில், கட்சியின் அமைப்பு விதிகளிற்கு அமைவாக அவர் மீது ஒழுங்கு நடவடிக்கை ஒன்று ஏன் எடுக்கபட கூடாது என்ற காரணத்தை அவர் தெரிவிக்க விரும்பினால், அந்த காரணத்தை எழுத்து மூலமாக எதிர்வரும் சனிக்கிழமை மாலைக்குள் அவர் சமர்பிக்குமாறு அவரை கோருவதென தலைமை குழு முடிவெடுத்திருக்கிறது.
அவர் விளக்கமளிக்க தவறினால், அல்லது அவர் அளிக்கும் விளக்கம் தலைமை குழுவால் ஏற்றுக்கொள்ளப்படவில்லை என்றால் அவர் மீது ஒழுக்காற்று விசாரணை முன்னெடுக்கபடும். அமைப்பு விதிகளிற்கமைவாக தேவைப்படும் ஏனைய நடவடிக்கைகளும் முன்னெடுக்கப்படும். அதே நேரத்தில் கட்சியில் நீண்ட காலம் செயற்பட்டு வரும் தீவிர உறுப்பினர் என்ற வகையில் அவருக்கு ஒரு சந்தர்ப்பத்தை வழங்குவதற்கும் தலைமை குழு தீர்மானித்திருக்கிறது.
அந்தவகையில் உடனடியாக தேர்தல் களத்திலிருந்து விலகுமாறு தலைமை குழு அவரிற்கு வேண்டுகோள் விடுக்கின்றது. அந்த வேண்டுகோள் எழுத்து மூலமாக அவரிடம் கையளிக்கபடும்.இந்த முடிவுகள் நீண்ட நேர கலந்துரையாடலிற்கும், கருத்து பரிமாற்றத்திற்கும், விவதாங்களிற்கு பிறகு ஏகமனதாக எடுக்கபட்டிருக்கின்றது.
கட்சியின் யாழ் கிளை நேற்றயதினம் இந்த விடயம் தொடர்பாக கூடி கலந்துரையாடியிருந்தது. அந்த விடயம் தொடர்பாக கலந்துரையாட கட்சியின் மாவட்ட கிளைகளிற்கு உரிமையுண்டு. அந்த அடிப்படையில் நேற்று அங்கு ஒரு கூட்டம் நடைபெற்றது. கருத்து பரிமாற்றங்கள் இடம்பெற்றது. ஆனால் தீர்மானம் எதுவும் எட்டபட்டிருக்கவில்லை. கட்சியின் தலைமை குழுவே இந்த விடயத்தில் முடிவெடுக்கும் அதிகாரத்தைகொண்டிருக்கின்றது.
ஜனாபதி தேர்தலில் யாரை ஆதரிப்பது என்று நாம் தீர்மானம் எடுக்கவில்லை. தற்போது ஆறு தமிழ்கட்சிகள் கருத்தொற்றுமை கண்டு ஜனாதிபதி தேர்தலில் போட்டியிடும் பிரதான வேட்பாளர்களிற்கு சமர்பிக்கபடவிருக்கும் கோரிக்கைகள் அடங்கிய ஆவணத்திலே கையெழுத்திடப்பட்டுள்ளது. குறித்த கோரிக்கைகள் ஏற்றுகொள்வார்களா இல்லையா என்று ஆருடம் எதுவும் கூறமுடியாது. இந்த கோரிக்கைகளை சமர்பிக்க வேண்டிய கடமை ,தேவை எமக்கு இருக்கிறது. ஏற்றுக்கொள்வார்களா என்பதை சில தினங்களில் தெரிந்து கொள்ளலாம் என்றார்