மஹிந்த ராஜபக் ஷ குடும்பம் முன்னெப்போதும் எவ்வித வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்ட தில்லை. ஆனால் ஒரே வருடத்தில் மஹிந்த ராஜபக் ஷவின் மூன்று புதல்வர்களின் திருமண நிகழ்வை விமரிசையாக நடத்துவதற்கும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பெருமளவு நிதி எங்கிருந்து பெறப்படுகிறது என்று சர்வதேச வர்த்தக இராஜாங்க அமைச்சர் சுஜீவ சேனசிங்க கேள்வி எழுப்பியிருக்கிறார்.
ஐக்கிய தேசியக் கட்சியின் தலைமையகமான சிறிகொத்தாவில் நேற்று சனிக்கிழமை இடம்பெற்ற ஊடகவியலாளர் சந்திப்பிலேயே அவர் இவ்வாறு குறிப்பிட்டார். அவர் அங்கு மேலும் கூறியதாவது:
இவ்வருடத்திலேயே நாங்கள் கடனுக்கான மிக அதிக வட்டியைச் செலுத்திக் கொண்டிருக்கிறோம். அவ்வாறு செலுத்த வேண்டிய தொகையை எதிர்வரும் 5 வருடங்களில் 5 ட்ரில்லியன் ரூபா வரையில் குறைத்துக்கொள்வதற்கு எம்மால் இயலுமாக இருக்கும். நாங்கள் கடன்களைப் பெற்று, அவற்றின் மூலம் அபிவிருத்தித் திட்டங்களை முன்னெடுப்பதில்லை. மாறாக அரச – தனியார் பங்காண்மையின் ஊடாக தனியார் துறையினரின் முதலீடுகளைப்பெற்று அபிவிருத்தித் திட்டங்களை செயற்படுத்தி வருகின்றோம்.
எனவே ஒருவேளை கோத்தாபய ராஜபக்ஷ ஆட்சியமைத்தால் அவரிடம் கேட்பதற்கு ஒரு கேள்வி இருக்கின்றது. மஹிந்த ராஜபக்ஷ குடும்பம் முன்னெப்போதும் எவ்வித வர்த்தக நடவடிக்கைகளிலும் ஈடுபட்டதில்லை. ஆனால் ஒரே வருடத்தில் மஹிந்த ராஜபக்ஷவின் மூன்று புதல்வர்களின் திருமண நிகழ்வை விமரிசையாக நடத்துவதற்கும், தேர்தல் பிரசார நடவடிக்கைகளில் ஈடுபடுவதற்கும் பெருமளவு நிதியை எங்கிருந்து பெற்றுக்கொள்கின்றார்கள் என்று தெரியவில்லை. அதுவே இன்று ஒட்டுமொத்த நாட்டினதும் கேள்வியாக இருக்கின்றது. அத்தோடு குறித்தளவு நிதி நாட்டிலிருந்து காணாமல் போயிருக்கிறது என்று தகவல் கிடைத்திருக்கிறது.
அவ்வாறெனின் அவர்களை ஏன் சிறையில் அடைக்கவில்லை என்று நீங்கள் எம்மிடம் கேட்கலாம். காமினி திஸாநாயக்க, லலித் அதுலத்முதலி, ரணசிங்க பிரேமதாஸ போன்றோர் படுகொலை செய்யப்பட்டார்கள். ஆனால் அச்சம்பவங்கள் தொடர்பில் ஒருவரையேனும் விசாரணை செய்து சிறையில் அடைப்பதற்கு இயலுமாக இருந்ததா? உலகில் முகாபே, கடாபி, இடிஅமீன் போன்றவர்களை உதாரணமாகக் கூறலாம். அண்மையில் உயிரிழந்த முகாபே ஊழல்மோசடியில் ஈடுபட்டு, சேர்த்த நிதி தொடர்பில் முழு உலகிற்கும் தெரியும். ஆனால் அவர் மீது வழக்குத் தாக்கல் செய்யவோ அல்லது சிறையில் அடைக்கவோ முடியவில்லை.
அதேபோன்று ஊடகவியலாளர் லசந்த விக்கிரமதுங்கவை மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தினர் தான் படுகொலை செய்தார்கள் என்று கூறவில்லை. ஆனால் காரண காரியங்களை ஆராய்ந்து பார்க்க வேண்டும். மஹிந்த ராஜபக்ஷ குடும்பத்தைச் சேர்ந்த ஒருவரின் மிக் விமானக் கொள்வனவு மோசடி தொடர்பான தகவல்கள் பலவற்றை வெளியிடுவதற்கு லசந்த விக்கிரமதுங்க திட்டமிட்டிருந்தார். வசீம் தாஜுதீன் றகர் விளையாட்டில் ஏற்பட்ட சில முரண்பாடுகள் காரணமாக படுகொலை செய்யப்பட்டார். இவை தொடர்பில் நாட்டு மக்கள் கேள்வியெழுப்ப வேண்டும்.
நாம் நல்லாட்சி அரசாங்கத்தை ஸ்தாபித்த பின்னர் ஊடகவியலாளர்களுக்கு முழுமையான சுதந்திரத்தைப் பெற்றுக்கொடுத்தோம். அவர்கள் விரும்பியதை எழுதுவதற்கும், கேள்வி கேட்பதற்கும் வாய்ப்பிருந்தது. ஆனால் மஹிந்த ராஜபக்ஷ தரப்பு கடந்த காலத்தைப் போன்றே பல்வேறு வன்முறைகள் நிறைந்த ஒரு குடும்ப ஆட்சிக்குள்ளேயே நாட்டை மீண்டும் கொண்டு செல்வதற்கு முயற்சிக்கின்றது.
எனவே ஏற்கனவே அடைந்து கொண்டிருக்கும் சுதந்திரத்தையும், ஜனநாயகத்தையும் தொடர்ந்து தக்கவைத்துக் கொள்வதா அல்லது மீண்டும் இருண்ட யுகத்திற்குள் செல்வதா என்ற தீர்மானத்தை மக்கள் மேற்கொள்ள வேண்டும் என்றார். .