மட்டக்களப்பு போதனா வைத்தியசாலையில் பெண்னொருவரின் பிரசவத்தின்போது வைத்தியர்களின் அசமந்தத்தினால் பச்சிளங் குழந்தையொன்று பரிதாபமாக பலியாகியுள்ளது.
சம்பவம் தொடர்பில் தெரியவருகையில்,
கடந்த ஐந்து தினங்களுக்கு முன்னர் மட்டக்களப்பு முகத்துவாரத்தினை சேர்ந்த 30வயதுடைய பெண்ணொருவர் பிரசவத்திற்காக அனுமதிக்கப்பட்டுள்ளார்.
சுகப்பிரசவம் மூலமே குழந்தையினைப்பெற்றெடுக்க வேண்டும் என வைத்தியர்கள் கூறிய பெண்ணின் வயதை கருத்தில்கொண்டு சத்திரசிகிச்சை மூலம் குழந்தையினை வெளியில் எடுக்குமாறு உறவினர்களினால் கோரிக்கை விடுக்கபட்டிருந்தது.
நான்கு நாட்களாக குறித்த பெண் வைத்தியசாலையில் இருந்த நிலையில் நேற்று சத்திரசிகிச்சை மேற்கொள்ளப்பட்டது.
இந்த நிலையில் குழந்தை பிரசவிக்கப்பட்டபோதிலும் குழந்தையினை யாரிடமும் காட்டாமல் கழிவுகள் போடும் பெட்டியொன்றுக்குள் போட்டுள்ளதாக உறவினர்கள் குற்றம் சுமத்தியுள்ளனர்.
அத்துடன் குழந்தையின் தலைப்பகுதியில் பலத்த காயம் காணப்படுவதாகவும் கூறிய உறவினர்கள், சத்திரசிகிச்சையின்போது குழந்தைக்கு குறித்த காயம் ஏற்பட்டிருக்கலாம் எனவும் தெரிவித்துள்ளனர்.
மேலும் குழந்தை தொடர்பான தகவல்களை வழங்காமல் வைத்தியர்களும் தாதியர்களும் அதனை மறைக்கும் செயற்பாடுகளை மேற்கொண்டதாகவும் குழந்தையின் உறவினர்கள் சுட்டிக்காட்டியுள்ளனர்.
இதேவேளை குறித்த தாய் தொடர்ச்சியாக மருத்துவசோதனைகளை மேற்கொண்டுவந்த நிலையிலும் குழந்தை ஆரோக்கியமான நிலையில் உள்ளதாக தெரிவிக்கப்பட்டிருந்தது.
இவ்வாறான நிலையில் குழந்தை உயிரிழந்துள்ளமை தொடர்பில் முறையான விசாரணைகள் முன்னெடுக்கப்படவேண்டும் என உறவினர்கள் கோரியுள்ளனர்.
மேலும் குழந்தை உயிரிழந்தமைக்கு நீதிவேண்டி குழந்தையின் பெற்றோர் மற்றும் உறவினர்கள் வைத்தியசாலையின் விடுதியின் முன் ஆர்ப்பாட்டத்தில் ஈடுபட்டனர்.
இதனையடுத்து பொலிஸார் வரவரவழைக்கப்பட்டு விசாரணைகள் இடம்பெற்றதாக தெரியவந்துள்ளது.
இதேவேளை குறித்த மட்டக்களப்பு வைத்தியசாலையில் கடமையாற்றும் , வைத்தியர்கள், மற்றும் தாதியர்களில் அசமந்தத்தினால் குழந்தை உயிரிழந்தமைக்கு பலரும் சமுகவலைத்தளங்களில் கண்டணங்களை தெரிவித்து வருகின்றமை குறிப்பிடத்தக்கது.