பாடசாலையில் கடமைகளை முடித்துவிட்டு வீடு திரும்பிக்கொண்டிருந்த பட்டதாரி ஆசிரியை ஒருவர் கடந்த முதலாம் திகதி முதல் காணாமல் போயுள்ளதாக கம்பளை பொலிஸார் தெரிவித்துள்ளனர்.
கம்பளை கீரப்பனை பிரதேசத்தைச் சேர்ந்த 27 வயதான சந்திமா நிஸன்சலா என்ற ஆசிரியையே இவ்வாறு காணாமல் போயுள்ளார்.
அட்டன் ஸ்ரீபாத வித்தியாலயத்தில் கடமையாற்றி வந்த குறித்த ஆசிரியை சம்பவ தினத்தன்று, இரவாகியும் வீட்டுக்கு வராததையடுத்து ஆசிரியையின் தாயார் பாடசாலை அதிபரை தொலைபேசியூடாக தொடர்பு கொண்டு விசாரித்துள்ளார்.
இந்த நிலையில் குறித்த ஆசிரியை வழமைபோல் அங்கிருந்து புறப்பட்டு விட்டதாக அதிபர் கூறியதையடுத்து, பதற்றமடைந்த தாய் ஆசிரியை தொடர்பில் கம்பளை பொலிஸ் நிலையத்தில் முறைப்பாடு செய்துள்ளார்.
இதற்மைய விசாரணைகளை மேற்கொண்டு வந்த பொலிஸார் மறுநாள் புதன்கிழமை குறித்த ஆசிரியையின் வீட்டருகே நிதாஸ் மாவத்தையில் அமைந்துள்ள தனியார் கல்வியகத்தில் பொருத்தப்பட்டிருந்த கண்காணிப்பு கேமராவினை பரீட்சித்துள்ளனர்.
அதில் மாலை 4 மணி ஆறு நிமிடமளவில் ஆசிரியை வீடு நோக்கி செல்வது பதிவாகியிருந்துள்ளது.
இந்த நிலையில் குறித்த ஆசிரியை தனது வீட்டுக்கு 100 மீற்றர் இடைவெளிக்குள்ளேயே காணாமல் போயுள்ளதாக தெரிவித்துள்ள கம்பளை பொலிஸார் மேலதிக விசாரணைகளை மேற்கொண்டு வருகின்றனர்.